நக்கீரன் - பகத்சிங் :விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில், அதனைப் பற்றி கவலைப்படாத பா.ஜ.க. தற்போது ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
இதனால் வெகுண்டெழுந்த டெல்லியில் போராடும் பஞ்சாப் விவசாயிகளின் பிரதிநிதிகள் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்குச் சென்று பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக பிரச்சாரங்களைச் செய்து டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிற்கு வந்த டெல்லி (பஞ்சாப்) விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், அஜாத் கிஸான் சங்கர்ஸ் கமிட்டியின் பஞ்சாப் மாநில துணைத் தலைவருமான ராஜ்வீந்தர்சிங் கோல்டன் பல்வேறு இடங்களில் பிரச்சாரங்கள் செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று (28/03/2021) மாலை புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மெய்யநாதனுக்கு ஆதரவு கேட்டு, கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் கிராமத்தில் தொடங்கி பல கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, "நான் டெல்லி போராட்டக் களத்தில் இருந்து வருகிறேன். வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று நாங்கள் டெல்லியில் தொடங்கிய போராட்டம் இன்றுவரை தொய்வின்றி போகிறது. இதுவரை 300 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த விவசாயிகளின் நலனுக்காக விவசாயிகளை வஞ்சிக்கும் பா.ஜ.க. மற்றும் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை டெபாசிட் இழக்க வைத்து விரட்ட வேண்டும். தற்போது தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலத்திற்கும் டெல்லியில் போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகள் சென்றுள்ளனர். எனக்கு தமிழ் நன்றாக தெரியும் என்பதால் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறேன்.
எடப்பாடியும் இந்தச் சட்டங்களை ஆதரித்தவர் தான். இப்போது கூட்டணி வைத்திருக்கிறார். அதனால் இவர்களை தோற்கடிக்க வேண்டும். வேறு கட்சிகள், சினிமா நட்சத்திரங்களுக்கு ஆதரவாக நாங்கள் பேசினால் அவர்களை மிரட்டி விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். அதனால் தான் தி.மு.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்கிறோம். இவர்கள் தான் விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு கொடுத்தார்கள். இனிமேலும் ஆதரவு கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்கிறோம். ஆனால் மோடியிடம் வந்து தலைகுனிந்து நிற்கிறார்கள். இது தமிழர்களுக்கே அவமானமாக உள்ளது. அதனால் தமிழன் தலைநிமிர்ந்து நிற்க பா.ஜ.க.வையும், அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளக் கட்சிகளைத் தோற்கடித்து தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். முதல்வர் எடப்பாடி நானும் விவசாயி, வெல்லம் விற்றேன் என்கிறார். மோடி டீ விற்றேன் என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள்" என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக