புதன், 31 மார்ச், 2021

தேர்தல் ஆணையத்துக்கு ஆ.ராசா அனுப்பிய 5 பாயிண்ட் பதில் கடிதம்!

May be an image of 1 person and indoor

minnambalam : ஆயிரம்விளக்கு தொகுதியில் ஆ.ராசா பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் நோட்டீசுக்கு, அவர் இன்று (மார்ச் 31) இடைக்கால பதிலை அளித்திருக்கிறார். மின்னஞ்சல் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ராசா அனுப்பிய அந்த பதில், ஏன் இடைக்காலமானது என்பதற்கும் அவரே விளக்கம் அளித்துள்ளார்.

அதன் விவரம்:

” 1. முதலமைச்சரைப் பற்றி அவதூறாகவோ இழிவுபடுத்தும்படியாகவோ பெண்கள், தாய்மை பற்றி அவதூறாகவோ தரக்குறைவாகவோ நான் பேசுவதாகச் சொல்லப்படுவதை மறுக்கிறேன்.

2. அம்பேத்கர், பெரியார், அண்ணாவின் மாணவனாக, கலைஞர் கருணாநிதியால் வழிநடத்தப்பட்ட ஒருவனாக, திமுக உறுப்பினராக, பெண்களை அவமதிக்கும் இத்தகைய செயல்களில் நான் ஈடுபட்டதில்லை, ஈடுபடுவதில்லை, இனியும் ஈடுபடப்போவதும் இல்லை. திராவிடர் இயக்கத்தின் அடித்தளமே பெண்களுக்கு அதிகாரமளிப்பதும் அவர்களுக்கு சமூகத்தில் சம உரிமைகளைப் பெற்றுத்தருவதும் ஆகும். இத்தகைய இயக்கத்தைச் சேர்ந்த யாரும் தாய்மைக்கோ பெண்களுக்கோ அவமதிப்பு நேரும்படியாக நடந்துகொள்வதை கனவில்கூட நினைத்துப்பார்க்கமாட்டார்கள்.

3. என்னுடைய விளக்கத்தை அளிப்பதற்கு முன்னர் சிலவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

1. முதலமைச்சரை நான் அவமதித்துவிட்டதாக அதிமுகவும் பாஜகவும் துஷ்பிரச்சாரத்தைத் தொடங்கியதை அடுத்து, கடந்த 27ஆம் தேதி பெரம்பலூரில் செய்தியாளர்களைக் கூட்டி, என் விளக்கத்தை அளித்தேன். முதலமைச்சர் என்னுடைய பேச்சை சரியானபடி புரிந்துகொள்வார் என்பதால் விவகாரத்தை அப்படியே விட்டுவிடுவதெனக் கருதினேன்.

2. என்னுடைய விளக்கத்துக்குப் பின்னரும் மறுநாள் சென்னை, திருவொற்றியூரில் முதலமைச்சர் பொதுக்கூட்டத்தில் என்னுடைய பேச்சின் சாரத்தைக் குறிப்பிட்டு, உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

3. எங்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அறிஞர் அண்ணா வகுத்தளித்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் நெறிமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

4. முதலமைச்சரின் உணர்ச்சி மேலீட்டைப் பார்த்தபிறகு நான் 29ஆம் தேதியன்று உதகமண்டலத்தில், செய்தியாளர்களையெல்லாம் கூட்டி, அவரிடம் பகிரங்க மன்னிப்பும் கோரினேன். என்னுடைய அந்த அறிக்கை, எல்லா செய்தித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. முதலமைச்சரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை என்பதை அதில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தேன். அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தாலோ தவறான பொருள் தந்திருந்தாலோ அதற்காக மன்னிப்பைக் கோரியிருந்தேன்.

5. இந்தமட்டில் விவகாரம் நிறைவடைந்துவிடும் என நம்புகிறேன்.

எனினும் உங்களின் நோட்டீசுக்கு கீழ்காணும் இடைக்கால விளக்கத்தை அளிக்கிறேன்.

1. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பெண்களையோ தாய்மை குறித்தோ அருவருப்பாகவோ கண்ணியக்குறைவாகவோ எதையும் நான் பேசவில்லை.

2. இந்த நோட்டீசின் 3ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அதிமுகவின் புகார் நகலானது எனக்கு வழங்கப்படவில்லை; ஆகையால் என் மீது என்ன குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது என்பதை அறியமுடியாத நிலையில் இருக்கிறேன். நான் பதில் அளிக்கும்வகையில் அந்தப் புகாரின் நகலை ஆணையம் எனக்கு வழங்கவேண்டும்.

3. உங்கள் நோட்டீசின்படி, சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில், என் மீது 153, 294(ஆ) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 127ஆவது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பக்கச்சார்பில்லாத முழுமையான விசாரணையானது, அவதூறாகப் பேசியதாக என் மீது பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டதையும் உண்மையையும் வெளிக்கொண்டுவரும். இதில் மேற்கொண்டு தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் ஆலோசனையோ முடிவுகளோ இந்த விசாரணையில் என்னைப் பற்றி முன்முடிவுக்கு வந்துவிட வைத்துவிடும்.

4. என்னுடைய உரையின் முழு எழுத்தாக்கத்தின் நகலைப் பெற்றுக்கொண்டு அதை ஆணையம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நன்கு கவனித்துப்பார்த்தால், இப்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சம்பந்தமில்லாதவை என்றும் அரசியல் லாபத்துக்காக ஊதிப்பெருக்கப்பட்டுள்ளன என்பதும் தெளிவாகும்.

5. தமிழ் மொழியில் உவமானம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவகை முறைமை. என்னுடைய உரையில், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இருவரின் அரசியல் உயர்வின் பரிணாமத்தை, பொதுப்படையாகப் புரிந்துகொள்ள வசதியாக,புதிதாகப் பிறந்த குழந்தை எனும் உவமானத்தை வைத்து, ஒப்பிட்டிருந்தேன். இதுவும், எங்கள் தலைவர் ஸ்டாலின் உழைக்காமல் முன்னுக்கு வந்தவர் என திரும்பத் திரும்பக் கூறப்பட்டதற்குப் பிறகு பேசப்பட்டதாகும். ஆகையால், என்னுடைய பேச்சின் முழு வடிவமும் ஆணையத்தின் குழுவால் கணக்கில்கொள்ளப்படுமானால், என் மீது சுமத்தப்பட்டுள்ள கெட்ட பெயர் துடைத்தெறியப்படும் என்று நம்புகிறேன்.

ஆணையத்திடம் நான் கேட்டுக்கொள்வது:

1. துன்புறுத்தல் பேச்சு எனக் குற்றம்சாட்டப்படும் என் உரையின் முழு எழுத்தாக்கத்தின் நகல்

2. அ.இ.அ.தி.மு.க.வால் 27-03-2021 அன்று அளிக்கப்பட்ட புகாரின் நகல் இரண்டையும் எனக்கு வழங்கவேண்டும்.

3. மேலும், என்னுடைய வழக்கறிஞருடன் பங்கேற்கும்படி தனிப்பட்ட விசாரணை நடத்தவும் என்னுடைய விரிவான பதிலை அளிக்கவும் வாய்ப்பு அளிக்கவேண்டும்.”

இவ்வாறு ஆணையத்துக்கு ஆ.ராசா அனுப்பிய முதல் கட்டப் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

-இளமுருகு

கருத்துகள் இல்லை: