ஆழி செந்தில் நாதன் : மூன்று நாள் தேர்தல் பரப்புரைக்குச் சென்றுவந்தேன். நண்பர்கள் கெளதம சன்னா (அரக்கோணம்), கார்த்திகே. சிவசேனாபதி (தொண்டாமுத்தூர்), தி.வேல்முருகன் (பண்ருட்டி) ஆகியோருக்கு ஆதரவாக. :எனக்கு ஆதரவாளர் படை இல்லை, நான் அதிகாரபூர்வ பேச்சாளரும் இல்லை. அவர்களோடு சில மணி நேரம் செலவிடுவது என்பதும் வாய்ப்பிருந்தால் மக்களிடையே பேசுவது என்பதும்தான் என் எண்ணம்.
அதைத்தான் செய்தேன். கடந்த தேர்தலில் செய்தது போல ஒரு தார்மீக ஆதரவுக்காகவே சென்றேன் என்பதுதான் உண்மை. கூடவே பேரலை தொலைக்காட்சி ஊழியர்களும் இருந்ததால் அவ்வப்போது மக்களிடம் பேட்டிகள்… கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் இதுதான்:
1. திமுக கூட்டணிக்கு ஆதரவாக களம் இருக்கிறது. அது இறுதிநேரத்தில் அலையாக ஆகி, திமுக 200+ பெறுவதற்கான வாய்ப்பே மிக அதிகம்.
2. அதிமுக கூட்டணி பொலிவிழந்து இருக்கிறது. திமுக கூட்டணிக்கு எதிராக உள்ளடி வேலை செய்வது தவிர வேறெந்த வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை.
3. இளைஞர்கள் பெருவாரியாக திமுக கூட்டணி ஆதரவுப் பணியில் ஈடுபடுகிறார்கள்.
4. நாம் தமிழர் கட்சியையாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்க்கமுடிகிறது. மய்யத்தை எங்கேயும் காணோம்.
5. மக்களோடு பேசியதில், ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலை இருப்பது தெளிவாக தெரிகிறது. லோக்கல் எம்எல்ஏ முதல் மோடிவரை அவர்கள் எதிர்க்கிறார்கள். ஸ்டாலின் நன்றாக போய்ச்சேர்ந்திருக்கிறார்.
6. ஆ ராசாவின் கருத்து குறித்த சர்ச்சை வெளிவந்த நேரத்தில் நான் கோவையில்தான் இருந்தேன். அதை எப்படியாவது திமுகவுக்கு எதிராகத் திருப்பிவிடவேண்டும் என்று சாதி சங்கிகள் வேலையில் இறங்குகிறார்கள் என்கிற பரபரப்பு உருவானது. ஆனால் என் கருத்து இதுதான்- இது எந்த முடிவையும் பாதிக்காது. இது அதிமுக-பாஜகவினருக்கு திடீர் உற்சாகத்தைத் தரலாமே ஒழிய, மற்ற கணக்குகள் எல்லாம் ஏற்கனவே போட்டிபடிதான் நடைபெறும்.
7. தொண்டாமுத்தூரில் கார்த்திகேய சிவசேனாபதி முதல்முறை எம்எல்வுக்கு நிற்கிற மாதிரியே தெரியவில்லை. தெருவுக்குத் தெரு அப்படி வந்து அன்பாக உபசரிக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு மிகப்பெரிய சொத்தாக மாறுவார் கா.சி.
8. பண்ருட்டி தொகுதியில் நெல்லிக்குப்பத்தில் பிரச்சாரம் நடைபெற்ற நேரத்தில்தான் நான் சென்றிருந்தேன். பல நாள் அலைச்சல் வேல்முருகன் முகத்திலேயே தெரிந்தது. அவரது கால்கள் வீங்கிப்போய் நிற்கக்கூட முடியாமல் தடுமாறினார். குரல் ஓய்ந்துபோயிருந்தது. தலித் குடியிருப்புப் பகுதிக்கு அவர் சென்றிருந்தபோது அவருக்கு தரப்பட்ட வரவேற்பு வியப்பையே ஏற்படுத்தியது. நடந்து வாக்கு கேட்கமுடியாத நிலையில் இருந்த அவரை, டூவீலரில் வைத்துக்கொண்டு இளைஞர்கள் சுற்றினார்கள். அவர் திருமா பெயரைச் சொல்லும்போதெல்லாம் அப்படி ஒரு ஆரவாரம். கண்குளிரக் கண்டேன். வடக்கு மாவட்டங்களில் திருமாவும் வேல்முருகனும் கைகோர்த்தால் சமூகநீதிக்கு துரோகம் செய்த டாக்டர் கும்பலை ஓரம்கட்டிவிடலாம். ஒன்று சேர்ந்து நிற்பதற்கு மக்கள் எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறார்கள் . தலைவர்களுக்குத்தான் மனம் வேண்டும். நெல்லிக்குப்பத்தில் இருந்த சில மணிநேரங்கள் அவ்வளவு அற்புதமாக இருந்தன.
9. அரக்கோணத்தில் கெளதம சன்னா புதியவர்தான். நான் வெள்ளியன்று போயிருந்தேன். நகரத்திலும் நெசவாளர்கள் அதிகமுள்ள குருவராஜப்பேட்டைக்கும் சென்றிருந்தேன். அறிவும் ஆற்றலும் மிக்க இளைஞர் என்கிற பெயரும் பானைச்சின்னமும் நன்றாகப் பரவியிருந்தது. காங்கிரஸ் ஒரு பெரிய பேரணியை நடத்தி அவருக்கு ஆதரவாக நின்றது. அரக்கோணத்தில் அந்தக் கட்சிக்கு கணிசமான ஆதரவுண்டு.
Aazhi Senthil Nathan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக