தவறான வழியில் சொத்து சேர்ப்பதற்காக வருபவர்கள் ஒரு பக்கம்! தவறான வழியில் சேர்த்த செல்வத்தை பாதுகாப்பதற்காக அரசியலுக்கு வருபவர்கள் ஒரு பக்கம் என்பதாக இன்றைக்கு அரசியல் களம் கெட்டுக் கிடக்கிறது!
கல்வியை வியாபாரமாக்கிய என்று கூட சொல்ல மாட்டேன், கல்வியை ஒரு சூதாட்ட கருவியாக்கி பல்லாயிரங் கோடிகள் சொத்து சேர்த்தவர் பச்சமுத்து. 2016 ஆம் ஆண்டு ஒரு குற்றச்சாட்டில் கைதானவர். தன் கல்வி நிறுவன சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தவும், சொத்துகளை பாதுகாக்கவும் ஐ.ஜே.கே என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்தார். இவரது கட்சி 2014, 2016 பாஜக கூட்டணியில் இருந்துட்டு திடீரென்று அணிமாறியவருக்கு 2019 ஆண்டில் திமுகவில் வாய்ப்பளிக்கப்பட்டது.
இவர் நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கின்ற, குறிப்பாக தமிழகத்திற்கு அதிக தீமையை இழைக்கின்ற எந்த ஒரு விவகாரம் குறித்தும் பாராளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிர் கருத்து நிலை எடுத்து பேசியவரல்ல. அப்படியெல்லாம் பேசுவதற்கான ஆற்றல் கொண்டவர்கள் எண்ணற்றவர்கள் திமுகவில் நிறையவே உண்டு.
ஆனால், அவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு பாரி வேந்தர் என்றழைக்கப்படும் பச்சமுத்துவிற்கு வழங்கப்பட்டது. இன்று பட்டை தீட்டிய மரத்தையே பதம் பார்க்கும் கோடாரியைப் போல அவர் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி மூன்றாவது கூட்டணி காண்கிறது.
அளவுக்கு மீறி சொத்துக்களை குவித்தவனிடம் எந்த அறத்தையும் எதிர்பார்க்க முடியாது. அதிகாரத்தில் இருப்போர் ஆட்டுவித்தால் ஆட வேண்டிய நிலை அவருக்கு! குறைந்தபட்ச யோக்கியமாவது இருந்தால் அவர் எம்.பி.பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லது கட்சியின் சுய மரியாதையை காப்பாற்ற திமுக அவரது ராஜினாமாவைக் கோரியிருக்க வேண்டும்.
எந்த கமலஹாசன் தன்னிடம் கூட்டணி காண நூறுகோடி கேட்டாரோ…அந்த கமலஹாசனிடம் மீண்டும் பேச தன் மகன் ரவி பச்சமுத்துவை பாரிவேந்தர் ஏன் அனுப்புகிறார்? திமுக, அதிமுக கூட்டணியில் இடம் போதுமான அளவில் கிடைக்காத கட்சிகளையெல்லாம் மக்கள் நீதிமையம் நோக்கி போகத் தூண்டும் வேலையை பாஜக மிக நுட்பமாக செய்கிறது.அதற்கு இங்குள்ள பிராமண மீடியாக்கள் துணை போகின்றன. நேர்மை அரசியலை வாய்கிழியப் பேசும் கமலஹாசன் கட்சியினர் பல லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை புதுச்சேரியில் மக்களுக்கு தர கொண்டு செல்லும் போது மாட்டிக் கொண்டனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொருளாதாரக் குற்றவாளிகளை தங்கள் சகாவாக மாற்றிக் கொள்ள பாஜக அரசு செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு என்றே இன்று செயல்படும் துறையாக்கப்பட்டுவிட்டன வருமான வரித்துறையும், சிபி.ஐயும்! ஆகவே, தேர்தலில் மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்க முடியாத நிலையில் பாஜக அனைத்து பொருளாதாரக் குற்றவாளிகளையும் மறைமுகமாக வோ, நேரடியாகவோ பயன்படுத்தி வருகிறது. அதிமுக அரசின் ஊழல்களும்,அதற்கான ஆதாரங்களுமே பாஜகவின் பலமாகிவிட்டது! அது போல புதுச்சேரியில் காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த நமச்சிவாயம், மால்லாடி கிருஷ்ணராவ் ஆகியோரின் பொருளாதார குற்றங்களே அவர்களை பாஜக வென்றெடுக்க காரணமாயிற்று!
தவறான முன்மாதிரிகள் சிலரை சொல்வதென்றால் நடிகர்கள் நெப்போலியனுக்கும், சரத்குமாருக்கும், ஜே.கே.ரித்தீசுக்கும் திமுகவில் வாய்ப்பு தரப்பட்டது! நெப்போலியன் பல நூறுகோடிகளுக்கு தன்னை அதிபதியாக்கிக் கொண்டு பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார்!
இதையெல்லாம் இப்போது ஏன் கூற வேண்டி இருக்கிறது என்றால், தேர்தல் நேரத்தில் சூட்கேஸ்களுடன் கட்சி தலைமையை சந்திப்பவர்களுக்கு சீட்களை அள்ளி வழங்கும் கட்சித் தலைமைகள் தங்கள் ஷண நேர சபலத்தில் தங்கள் ஆட்சிக்கே நாளைக்கு உலைவைத்துக் கொள்ளக் கூடும்!
பொருளாதார குற்றவாளிகளுக்கோ அல்லது பொருளாதர குற்றத்திற்கு ஆளாக கூடிய பலவீனமானவர்களுக்கோ தேர்தலில் சீட் கொடுக்காமல் தவிர்ப்பது வருமுன் காக்கும் நடவடிக்கையாகும்!
ஜெகத்ரட்சகன் என்ற மாபெரும் பணமுதலைக்கும் தவறாமல் திமுகவில் பாராளுமன்ற சீட் வழங்கப்பட்டு வருகிறது. இவருடைய பாராளுமன்ற செயல்பாடுகளால் தமிழகத்திற்கு எந்தப் பலனும் இல்லை. இவரும் கல்வி சூதாட்ட வித்தகர் மற்றும் சாராய சாம்ராஜ்ய தலைவர்! சேர்த்துள்ள செல்வங்களுக்கு அளவில்லை எனும் போது எப்படி மக்கள் தொண்டு செய்யமுடியும்? குறுகுறுக்கும் குற்ற மனசை சமாதானப்படுத்த வைணவ பக்தியில் நாட்டம் கொள்கிறார். தற்போது இவரும் பாஜகவின் சைலண்ட் சிலிப்பர் செல்லாக திமுகவில் இருக்கிறார்.
இவர் மட்டுமல்ல, யாரெல்லாம் அளவுக்கு அதிகமாக தவறான வழியில் சொத்து சேர்த்துள்ளார்களோ.. அவர்கள் எல்லாம் இன்று பாஜக அரசின் திருவிளையாடல்களில் பங்கெடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தை காலம் காட்டுகிறது. ஆகவே, குறைந்தபட்ச கெளரவத்தோடு ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால், அந்த கட்சித் தலைமைகள் நல்ல கொள்கை சார்ந்த உண்மையான தொண்டர்களுக்கு வாய்ப்பளியுங்கள். அவர்களே ஆபத்தான காலகட்டத்தில் விலை போகாமல் துணை நிற்பார்கள்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
கட்சிகளும்,கரன்சிகளும்!
விலைபோகும் வேந்தர்களும்!
https://aramonline.in/.../ijk-pachaimuthu-dmk-mp.../
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக