செவ்வாய், 2 மார்ச், 2021

தி.மு.க காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி கேட்பது எத்தனை... தர நினைப்பது எத்தனை?

தி.மு.க கூட்டணிக் கட்சியினர்

அழகுசுப்பையா ச - viikatan : தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படாத நிலையில் விரைவில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும்பட்சத்தில் காங்கிரஸின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பது பற்றி அதன் மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம்...

 தி.மு.க தன்னுடைய கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டில் இன்னும் சுமூகமாக முடிவு எட்ட முடியாமல் தவித்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதைவிட அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் அதில் பாதிதான் ஒதுக்குவோம் என தி.மு.க-வும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருக்க, தொகுதிப் பங்கீட்டில் தெளிவான முடிவை எடுக்க முடியாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றன.                                           இதற்கிடையே பிப்ரவரி 28-ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தி.மு.கவின் தொகுதிப் பங்கீட்டு குழு அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு மூன்று இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பரப்புரைக்கு சென்றுவிட்டனர். பரப்புரையை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி டெல்லி திரும்பியதும் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.கவுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்., அழகிரி
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்., அழகிரி
Arun.K

ஆனால், பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே தி.மு.க - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு குறித்து சுமூகமான முடிவு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அப்படி வெளியான தகவல்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் சிலரிடம் பேசினோம்...

“கடந்த சட்டமன்ற தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டோம். இந்தத் தேர்தலில் கூடுதலாக இடங்களைப் பெற்று குறைந்தது 54 தொகுதியிலாவது போட்டியிட வேண்டும். அதுதான் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர்ந்ததற்கான அடையாளமாக இருக்கும். தொண்டர்களும் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள். ராகுல் காந்தியின் முடிவும் இதுவாகத்தான் உள்ளது. ஆனால், தி.மு.க தரப்பில் தேசிய கட்சியான எங்களிடம் 18 இடங்கள் தருகிறோம்... 20 இடங்கள் தருகிறோம்... என்று பேரம் பேசுவது எங்களைக் கேலி செய்வதைப் போல இருக்கிறது. தி.மு.க-வினர் சொல்வது போல தற்போது வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் கூட்டணியில் உள்ளன. அவர்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்பதெல்லாம் உண்மைதான், நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். அதையெல்லாம் யோசித்துத்தான் எங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கலந்து பேசி 30 இடங்கள் போதும் என்று இறங்கி வந்திருக்கிறோம். அதற்கும் குறைவான இடத்தில் போட்டியிட வேண்டும் என்று மீண்டும் தி.மு.க எங்களிடம் பேரம் பேசுவார்கள் என்றால் கூட்டணியை விட்டு வெளியே செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தேசிய கட்சிக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது இல்லையா? அதையாவது கொடுக்க வேண்டும் இல்லையா” என்றனர்...

தி.மு.க நிர்வாகிகள்
தி.மு.க நிர்வாகிகள்

மேலும் “தமிழக மக்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எந்த வெறுப்பும் இல்லை என்பதுதான் உண்மை. எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க மீது தமிழக மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை பா.ஜ.க உடனான கூட்டணி மற்றும் பா.ஜ.க-வுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது மட்டும்தான். அதேநேரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீதான எந்த ஈர்ப்பும் மக்களிடம் இல்லை என்பதுதான் உண்மையும் கூட. இப்படி ஒரு சூழலில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியான காங்கிரஸ் உதவி இல்லாமல் தி.மு.க.-வால் இந்தத் தேர்தலில் மட்டுமில்லை எந்தத் தேர்தலிலும் வெற்றிபெற முடியாது. இதைச் சும்மா பேச்சுக்காகச் சொல்லவில்லை.

தி.மு.க கூட்டணிக் கட்சியினர்
தி.மு.க கூட்டணிக் கட்சியினர்

ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் கூடும் மக்களையும், அவருக்குத் தமிழகத்தில் கிடைக்கும் ஆதரவையும் பார்த்தால் உங்களுக்கே அது நன்றாகப் புரியும். அந்த மக்கள் யாரையும் நாங்கள் காசு கொடுத்து கூட்டவில்லை. கள நிலவரம் இப்படி இருக்கும்போது அவர்கள் எந்தக் களத்தின் நிலவரத்தை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. களநிலவரம் இப்படியிருக்க அதைப் புரிந்துகொள்ளாமல் தற்போதே தேர்தலில் வெற்றி பெற்றதைப் போலவும் ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டதைப் போலவும் தி.முக-வினர் நடந்துகொள்கிறார்கள். எது எப்படியோ இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவாகும் என்று நினைக்கிறோம். நல்லபடியாக அது நடந்து தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசையும் கூட” என்றனர்.

ராகுல் பிரசாரம்
ராகுல் பிரசாரம்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ள தி.மு.க தரப்பில் சில நிர்வாகிகளிடம் பேசினோம்...

“கடந்த சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் தற்போது தி.மு.க தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மிகப்பெரியது. காங்கிரஸ் தவிர மற்ற கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கலாமா என்ற யோசனையில்தான் தலைமை இருக்கிறது. அதன் முதல்கட்டமாகத்தான் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சரி, ஒருவகையில் காங்கிரஸ் தரப்பின் கோரிக்கை நியாயம் என்றே வைத்துக்கொள்வோம். 41 இடங்களில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் யார் என்ற விவரங்களைக் கேட்டால் தரமாட்டோம் என்கிறார்கள். இந்தமுறை தி.மு.க-வின் முக்கிய நோக்கமே அ.தி.மு.க அமைச்சர்கள் யாரும் மீண்டும் வெற்றி பெறக்கூடாது என்பதுதான். அதனால் அமைச்சர்கள் நிற்கும் தொகுதிகளில் எல்லாம் தி.மு.க தன் கட்சி வேட்பாளர்களை நிற்க வைக்க திட்டம் எல்லாம் வகுத்து அதன்படி செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி கேட்கும் இடங்களில் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதி இருந்தால் அதை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று தி.மு.க கோரிக்கை வைத்தால், அதற்கும் ஒத்துவர மாட்டேன் என்கிறார்கள்.

விழுப்புரத்தில் ஸ்டாலின்
விழுப்புரத்தில் ஸ்டாலின்

காங்கிரஸ் தேசிய கட்சிதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், அவர்களுக்கு முக்கியத்துவம் எல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் மட்டும்தான். இது சட்டப்பேரவை தேர்தல். இங்கே, தி.மு.க தான் தலைமை. அதற்குதான் இங்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதையெல்லாம் புரியாமல் அவர்கள் பேசியதையே பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றனர்.

தொடர்ந்து இழுபறியில் இருக்கும் காங்கிரஸ் - தி.மு.க-வுக் இடையே தொகுதிப்பங்கீட்டில் நடக்கும் குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு இணைந்து தேர்தலை சந்திப்பார்களா அல்லது கூட்டணி மாற்றம் நடக்குமா என்பது நாளைக்குள் தெரியவரும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கருத்துகள் இல்லை: