வெள்ளி, 5 மார்ச், 2021

திமுகவுக்கு இன்று மாலைவரை கெடு.. நாளை சிபிஐ-எம் கறார் முடிவு!

திமுகவுக்கு இன்று மாலைவரை கெடு.. நாளை சிபிஐ-எம் கறார் முடிவு!

minnambalam : தி.மு.க. அணியின் தொகுதிப் பங்கீட்டில் ஒருவழியாக இரண்டாம் கட்டமாக நேற்று (மார்ச் 4) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் உடன்பாடு கையெழுத்தானது. மதிமுக, இடதுசாரி கட்சிகளுடன் இன்னும் தொகுதிப்பங்கீடு உறுதியாகாமல் இழுத்துக்கொண்டு செல்கிறது.

முன்னரே நமக்கு வந்த தகவல்படி, திமுகவுக்குள் மக்கள்நலக் கூட்டணியாகப் பேசி உரியத் தொகுதிகளைக் கேட்டுப் பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை வெளியிட்டிருந்தோம். அதைப் பற்றி இன்னும் சில சேதிகளும் கிடைத்தன.

இடதுசாரிகள் தரப்புடன் திமுக குழுவினர் முதல் கட்டச் சந்திப்பில், நான்கு தொகுதிகளில் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த முறை தேர்தலில் 11 தொகுதிகளில் போட்டியிட்டோம்; ஒரு இடம் சேர்த்து இந்த முறை 12 தொகுதிகள் வேண்டும் எனக் கேட்கத் தயாராக வந்திருக்கிறார்கள், சிபிஐ-எம் கட்சியின் தலைவர்கள். அப்படி வந்தவர்களுக்கு திமுகவினர் இந்த எண்ணிக்கையைச் சொன்னதும், கடுமையாகக் கோபமடைந்துவிட்டனர்.

தேசியக் கட்சியாக இருக்கிறோம்; பாஜகவை எதிர்த்து எதிர்பார்ப்பு இல்லாமல் எல்லா தொகுதிகளிலும் நம்முடைய தோழர்கள் திமுக அணிக்காக வேலைசெய்யப்போகிறோம்; இவர்களோ அதை பொருட்படுத்தாமல் இவ்வளவு குறைவாகச் சொல்கிறார்களே என கடுப்பு ஒரு பக்கம் இருந்தாலும், எட்டு தொகுதிகளுக்குக் குறைவாக வாங்கிவிடக்கூடாது என்பதில் சிபிஐ-எம் தரப்பு உறுதியாக இருந்தது.

மாநில அளவில் இவர்களிடம் மேற்கொண்டு பேசி தருகின்ற தொகுதிகளை ஏற்கவைப்பது முடியாத காரியம் என்பதை திமுக குழுவினர் உணர்ந்துகொண்டனர். இது கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதையடுத்து, டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் பிரகாஷ் காரத்திடம் பேசி உடன்பாட்டுக்கு வர திமுக தரப்பு முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்கிடையே, இதே நிலைமையை எதிர்கொண்ட தங்கள் முன்னாள் மக்கள்நலக் கூட்டணி சகாக்களான சிபிஐ, மதிமுக, விசிக தலைவர்களுடன் சிபிஐ-எம் தலைவர்கள் பேசியுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிதான் என்றுதானே சொன்னார்கள்; நாம் ஒன்றுபட்டுப் பேசியதால் கடைசியில் 2 இடங்கள் கிடைத்தன; இந்த முறையும் அதே நிலைப்பாட்டில் திமுகவிடம் பேசுவோம் என முயன்றது சிபிஐ-எம் தலைமை.

இதற்கிடையே மார்ச் 3ஆம் தேதி இரவு விசிக தலைவர் திருமாவிடம் பேசி, சில உத்தரவாதங்களைத் தந்து, அவரை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். அவரும் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக அறிவாலயம் நோக்கி காரில் புறப்பட்டுவிட்டார். வரும் வழியில் சிபிஐ-எம் தலைவர்கள் அவரிடம் பேசியுள்ளனர். அண்ணா மேம்பாலம்வரை வந்துவிட்டவர், அறிவாலயம் வராமல் அப்படியே வண்டியைத் திருப்பிவிட்டார்.

அதுவரை எப்படியாவது சமாளித்துவிடலாம் என உறுதியாக இருந்த திமுக பேச்சுக்குழுவினர், திருமா திரும்பிச்சென்றுவிட்டார் என்றதும் பரபரப்பு அடைந்தனர். சிபிஐ-எம் கட்சியின் கூட்டணிக்குள் கூட்டணி பற்றி அறிந்திருந்தபோதும், திமுக தரப்பு அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. மீண்டும் மநகூவைத் தொடங்கிவிடுவார்களோ என உண்மையிலேயே யோசிக்கத் தொடங்கினார்கள்.

ஏனென்றால் மதிமுகவும்கூட அடுத்தகட்டமாகப் பேச்சுவார்த்தையில் முனைப்புக் காட்டவில்லை. முன்னாள் மநகூ 4 கட்சிகளுமே அமைதியாகவே இருக்கையில், அந்த சமயம் பார்த்து சசிகலாவின் அரசியல் ஒதுங்கல் அறிவிப்பும் வெளியாக, திமுக குழுவினர் சிறிது நேரம் ஆடித்தான் போனார்கள்.

முதல் கட்டமாக, உடனடியாக திருமாவிடம் மாறிமாறிப் பேசி அவரை சம்மதிக்க வைத்தார்கள். காலையில் வந்து கையெழுத்திடுவதற்கான ஏற்பாட்டில் இறங்கினார்கள். அதை முடித்தபின்னர்தான் திமுக குழுவினருக்கு நிம்மதி வந்தது.

அடுத்து, சிபிஐ கட்சியுடனும் மதிமுகவுடனும் பங்கீட்டைச் செய்துமுடிப்பதில் திமுக வேகம் காட்டியது. மார்ச் 4ஆம் தேதி மாலையில் இரு கட்சிகளின் தலைவர்களும் வந்து உடன்பாட்டில் கையெழுத்திடுவார்கள் என்கிற இடத்துக்கு நகர்ந்தது. ஆனால் திமுக எதிர்பார்த்தபடி வைகோ வரவில்லை. மதிமுக சார்பில் மல்லை சத்யா ஒருவர் மட்டும் இரவு அறிவாலயத்துக்கு வந்து, ’இனி நீங்கள் அழைத்தால் வருகிறோம்.’ என்ற ஒற்றைத்தகவலை மட்டும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் தரப்பிலும் கடும் அதிருப்தியுடன்தான் 6 தொகுதிகளுக்கு உடன்பாடு செய்துகொண்டார்கள். தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பது சிறுத்தைகள் தரப்பின் ஆதங்கம்.

கூட்டணியில் திருப்தி இல்லாவிட்டாலும் கசப்புடன் வேலைசெய்வது பாதகத்தை உண்டாக்கலாம் என திமுக தரப்பில் கடைசி நேரத்தில் உஷாராகி, தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளரிடம் நிலைமையை எடுத்துச்சொல்லி, இதில் உதவும்படி கேட்கப்பட்டுள்ளது. சிபிஐ-எம் தரப்பு தலைவர்களிடம் அவருக்கு உள்ள செல்வாக்கு மூலம், அகில இந்திய தலைமையிடம் பேசவும் இன்னொரு முயற்சி நடக்கிறது.

திமுகவின் கணக்கு இப்படி இருக்கையில், சிபிஐ-எம் கட்சியோ வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக கறாராக தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். கோவையில் 4ஆம் தேதி தமிழகப் பிரச்சாரத்தைத் தொடங்கிப் பேசிய சிபிஐ-எம் கட்சியின் பொதுச்செயலாளர் யெச்சூரியின் பேச்சு, முக்கியத்துவம் பெற்றுள்ளது.

”தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களைக் காக்க பாஜக- அதிமுக.கூட்டணி வீழ்த்தப்படவேண்டும். இதற்கு மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவது அவசியம். நம்முடைய கூட்டணியின் தலைமைக்கட்சியான திமுக, இதில் பக்குவமாகவும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ளும், நடந்துகொள்ளவேண்டும். இதற்கேற்ப கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் அரவணைத்து பலத்தை உறுதிப்படுத்தவேண்டும். கலைஞருடன் அரசியல்செய்யும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் எப்போதும் ஒன்றைச் சொல்லுவார்.. நாட்டைக் காப்பாற்ற நல்லவர்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்.. ஒற்றுமை அவசியம் என்பதை அடிக்கடி சொல்லுவார். இப்போது அது ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது.” என்று யெச்சூரி பேசியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதும் இதற்கு அவர் அழுத்தம் தந்திருகிறார். பேட்டியின் இடையே, “ வாக்கு என்பது ஒரு கட்சி இப்போது எத்தனை எம்.எல்.ஏ., எம்.பி. இடங்களை வைத்திருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது அல்ல. நாட்டின் பிரச்னைகளுக்காக எந்த அளவுக்கு மக்களைத் திரட்டுகிறது என்பதில்தான் கட்சியின் பலம் இருக்கிறது.” என குறிப்பிட்டதும் கவனத்துக்குரியது.

இந்த சூழலில், நாளை மார்ச் 6ஆம் தேதி சிபிஐ-எம் கட்சியின் மாநில செயற்குழு அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் யெச்சூரியும் கலந்துகொள்கிறார்.

திமுக அணியில் இன்றைக்குள் தொகுதிப்பங்கீடு இறுதியாகாவிட்டால், தங்களுக்குச் செல்வாக்கு உள்ள 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது எனத் தீர்மானித்து, தேர்தல் பணிகளைத் தொடங்குவது என சிபிஐ-எம் தரப்பும் ஜரூராக இறங்கிவிட்டது.

-பாலசிங்கம்

கருத்துகள் இல்லை: