செல்லபுரம் வள்ளியம்மை : திமுக கூட்டணி கட்சிகளின் இழுபறி தமிழகத்திற்கு அவ்வளவு நல்ல செய்தி அல்ல .
காங்கிரசின் கோணத்தில் இருந்து பார்த்தால் சில விடயங்களை அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது 2018 இல் நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலும் அங்கு தற்போது நடக்கும் பாஜக ஆட்சி பற்றியும் கொஞ்சம் மீள் ஆய்வு செய்வது
தற்போதைய தமிழக சட்டமன்ற தேர்தல் நிலவரத்தை பற்றி ஒரு தெளிவான சிந்தனைக்கு ஏதுவாக இருக்கும்.
அந்த தேர்தலில் பாஜக பெற்றது 104 எம் எல் ஏக்கள் . காங்கிரஸ் பெற்றது 80 எம் எல் ஏக்கள், மதசார்பற்ற ஜனதா தள் பெற்றது வெறும் 37 எம் எல் ஏக்கள்.
இந்த நிலையில் ஜனதா தள் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது . 80 எம் எல் ஏக்களை கொண்டிருந்த காங்கிரஸ் வெறும் 37 எம் எல் ஏக்கள் உள்ள ஜனதாதள குமாரசாமியை முதல்வராக ஏற்று கொண்டது.
பின்பு காங்கிரசில் இருந்து சிலர் பாஜகவுக்கு தாவியதால் அங்கு பாஜக ஆட்சி அமைந்தது.
80 எம் எல் ஏக்களை கொண்டிருந்த காங்கிரஸ் வெறும் 37 எம் எல் ஏக்களை கொண்டிருந்த குமாரசாமியை முதல்வராக காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள என்னென்ன காரணங்கள் கூறப்பட்டதோ,
அதைவிட பல மடங்கு காரணங்கள் தற்போது திமுக ஆட்சி ஏற்படவேண்டிய அவசியம் உள்ளது
இன்னும் கூறப்போனால் முன்னெப்போதையும் விட தமிழகத்தில் ஒரு வலுவான பாஜக எதிர்ப்பு அரசு அமையவேண்டும் என்ற தேவை உள்ளது
காங்கிரசுக்கு மட்டுமல்ல முழு இந்தியாவுக்கும் அது ஒரு அவசர காலத் தேவையாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையில்,
காங்கிரஸ் கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட தொகுதிகளும் அவற்றில் வெற்றி பெற்ற தொகுதிகளின் அளவு பற்றியும் ஒரு மீளாய்வு தேவை.
பாரபட்சம் இல்லாமல் நிலைமையை சீர்தூக்கி பார்க்கவேண்டும்.
2011 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது .
பறிகொடுத்த தொகுதிகள் 55.
2016 சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது .
பறிகொடுத்த தொகுதிகள் 33..
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் 9 இடங்களில் போட்டியிட்டு எட்டு இடங்களில் வெற்றி பெற்றது
இந்த தேர்தலில் புதுசேரி உட்பட போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் திமுக கூட்டணி அலை வெற்றி பெற்றிருந்த நிலையில் கூட காங்கிரஸ் ஒரு தொகுதியை பறிகொடுத்தது.
மேலும் காங்கிரஸ் சோனியா ராகுல் பிரியங்காவை தவிர செல்வாக்குள்ள மாநில தலைவர்களே இல்லை என்று கூறக்கூடிய நிலையில்தான் உள்ளது.
காங்கிரசின் நேரு குடும்ப வாக்கு வங்கியை சரியான முறையில் பயன்படுத்த கூடிய தொண்டர் தலைவர் பலம் இருந்தால் மட்டும் அது வெற்றி அளிக்கும்.
திமுக கூட்டணி பலத்தோடு போட்டியிட்டால் மட்டுமே அவை போதியளவு வாக்கு வங்கியாக மாறும் நிலை உள்ளது.
எல்லாவற்றிலும் மேலாக திமுகவின் வாக்கு வாங்கி தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவு பிரமாண்டமாக இருப்பதாகத்தான் பலரும் கருதுகிறார்கள்.
அதற்கு பல காரணங்கள் இருக்கிறது அவற்றை வேறொரு கட்டுரையில் ஆராயலாம்.
இறுதியாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எவ்வளவு விரைவாக தங்கள் கூட்டணி பேரத்தை முடித்து கொள்கிறார்களோ,
அவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் அது நல்லது.
கடந்த கால தவறுகளால் அவர்கள் இழந்த செல்வாக்கை திமுக கூட்டணியில் இருப்பதன் மூலம் ஓரளவு பெற்றுவிடலாம்.
மீண்டும் மீண்டும் விட்ட அதே தவறுகளை இழைத்தால்,
காங்கிரசை மட்டுமல்ல இதர கூட்டணி கட்சிகளையும் கூட வரலாறு மன்னிக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக