தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற மசோதா என்பது முழுமையானதல்ல என அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துகொண்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
சாதிப் பெயர் மாற்றத்தால் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு என்ன பயன் என நினைக்கிறீர்கள்?
‘கடந்த 30 வருடங்களாக, புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பட்டியலினப் பிரிவில் இடம்பெற்றிருக்கக்கூடிய ஆறு உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற ஒற்றைப் பெயரில் அழைத்து, அவர்களை பட்டியலின பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம்.
ஆனால், பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும் என்பதை விட்டுவிட்டு, வெறும் பெயர் மாற்ற மசோதாவாக மட்டுமே இப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எந்தவிதமான பலனும் ஏற்படப் போவது கிடையாது’ என்கிறார் கிருஷ்ணசாமி.
பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற விரும்புவது ஏன்?
‘பட்டியல் பிரிவினர் என்ற பெயரை சுமத்தாமலே, வளர்ச்சித் திட்டங்களை செய்து அரசாங்கத்தால் இந்த சமுதாயத்தை முன்னேற்ற முடியும்.
எனவே, பட்டியல் இனத்தில் இருந்து கொண்டுதான் சலுகைகளை கேட்க வேண்டும் என சிலர் கூறுவதை, அவர்களின் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகத் தான் நான் பார்க்கிறேன்.
அப்படி சொல்பவர்கள் தங்களை அரிஜன மக்கள் என்ற மனநிலையில் இருந்து விடுவித்துக் கொள்ளவில்லை என அர்த்தம்.
பட்டியல் இனத்தவர் என்ற வடுவை சுமக்கும் கிராமத்து மக்களின் வலியை நன்கு அறிந்தவர்கள் பலர், பட்டியல் பிரிவு வெளியேற்றக் கோரிக்கையை ஆதரிக்கின்றனர்.
பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகள் இந்த கோரிக்கையை கையாண்டது குறித்த உங்கள் பார்வை என்ன?
பா.ஜ.க இந்த விவகாரத்தை தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்துகிறது என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பொதுவான கருத்து.
1992ஆம் ஆண்டு முதல் இதற்கான போராட்டங்களை செய்து வரும் புதிய தமிழகம் கட்சி இந்த கோரிக்கையை ஒரு சமுதாய மாற்றத்திற்கான அடித்தளமாக மட்டுமே பார்க்கிறது.
இந்த நாட்டின் பூர்வீகக்குடி மக்கள் மற்றும் வேளாண்மையை மட்டுமே அடிப்படையாக செய்து வந்த மக்களை பட்டியலில் கீழே வைத்து விட்டனர்.
இதனால் மற்றவர்கள் இந்த மக்களை மலிவாக பார்க்கின்றனர். இது அவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. எனவே, இந்த அடையாளத்திலிருந்து வெளிவந்தால் மட்டுமே தனக்கான அடையாளத்தை உருவாக்கி கொள்ள முடியும், தனக்கான வாய்ப்புகளை தேட முடியும் என நினைக்கிறார்கள்.
இந்த கோரிக்கையை சமநீதி, சம உரிமை, சமபங்கு என்ற அடிப்படையில் தான் நாங்கள் முன்வைக்கிறோம். ஆனால், நாடாளுமன்ற தேர்தலின் போது பேசி விட்டும், இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி, அதனை ஒவ்வொரு பிரசாரக் கூட்டங்களிலும் முன்னிறுத்துவதாலும், எங்களின் கோரிக்கை அரசியல் படுத்தப்படுகிறதோ என தோன்றுகிறது.
ஒரு சமுதாய பிரச்சனையை தேர்தலில் முன்னிருத்துவதை சரியானதாக நான் கருதவில்லை’ என தெரிவிக்கிறார் கிருஷ்ணசாமி.
புதிய தமிழகம் கட்சி இப்போது எந்தக் கூட்டணியில் உள்ளது?
தற்போது வரை எந்தக் கூட்டணியிலும் புதிய தமிழகம் கட்சி இல்லை.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தோம். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லாமல் இருந்து வருகிறது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவும், எங்களோடு எந்த தொடர்பிலும் இல்லாமல் தான் இருக்கிறது.
சமீபத்தில் சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோதி, நாடாளுமன்றத்தில் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற மசோதா குறித்து மேடையில் பேசினார்.
பெயரை மட்டும் மாற்றிவிட்டு, மொத்த கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது போல ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர். அதை பிரதமர் மோதியே செய்வதுதான் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
இதுகுறித்து கோவை வந்த பிரதமரை நேரில் சந்தித்து என்னுடைய கருத்தை தெரிவித்தேன். ‘பெயர் மாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை பாராட்டுகிறேன். ஆனால் எங்களின் கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. எனவே பட்டியலின வெளியேற்றத்தை நிறைவேற்ற வேண்டும்’ என அவரிடம் மனு அளித்துள்ளேன்.
சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை எந்த அடிப்படையில் முடிவு செய்வீர்கள்?
வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை பொறுத்தவரை, இந்த ஒரு பிரச்சனையை மட்டுமே வைத்து முடிவு எடுக்கப் போவதில்லை. எங்கள் கட்சியை சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.
சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு பலம் இல்லாததால் தான் தற்போது வீதிக்கு வந்து போராடி வருகிறோம்.
தமிழக மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி, தேவேந்திர குல வேளாளர்களின் ஒற்றுமை, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்காக புதிய தமிழகம் தமிழகம் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும்.
எனவே, எங்கள் கட்சியை சேர்ந்த அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்குவது தான் எங்களின் நோக்கம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக