அப்போது, அவரை (சிறுமி) திருமணம் செய்து கொள்வீர்களா என மனுதாரரிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு குற்றம் சுமத்தப்பட்டுள்ள அந்த அரசு ஊழியரின் வழக்கறிஞர் இது பற்றி எனது கட்சிக்காரரிடம் பேசிய பிறகு பதில் தெரிவிக்கிறேன் என கூறியிருக்கிறார்.
இதைக்கேட்ட தலைமை நீதிபதி, "இளம் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்வதற்கு முன்பு இது பற்றி சிந்தித்திருக்க வேண்டும். உங்கள் கட்சிக்காரர் ஒரு அரசு ஊழியர் என்பதை அறிவீர்களா?" என கேட்டார்.
மேலும், "சிறுமியை திருமணம் செய்ய உங்களை கட்டாயப்படுத்தவில்லை. அந்த எண்ணம் உள்ளதா என்பதை அறிய விரும்புகிறோம். இல்லையென்றால் நீதிமன்றம்தான் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவதாக நீங்கள் கூறலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.
அப்போது அந்த அரசு ஊழியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "எனது கட்சிக்காரர் திருமணம் செய்து கொள்ளவே நினைத்தார். ஆனால், அந்த சிறுமி மறுத்து விட்டார். ஆனால், இப்போது எனது கட்சிக்காரரால் திருமணம் செய்ய முடியாது. அவருக்கு திருமணம் நடந்து விட்டது. விசாரணையும் நடந்து வருகிறது. குற்றச்சாட்டுகள் இன்னும் பதிவாக வேண்டியுள்ளது," என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மனுதாரரான அரசு ஊழியர், நான்கு வாரங்களுக்கு கைது செய்யப்படாமல் இருக்க இடைக்கால உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம், அவர் முறைப்படி கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் என்று கூறியது.
அந்த அரசு ஊழியர் தனது தூரத்து உறவுக்காரரான 16 வயது சிறுமியை அவர் பள்ளிக்கு செல்லும் வழியில் பின் தொடர்ந்து வந்ததாகவும், ஒரு நாள் அந்த சிறுமியின் வீட்டில் அவரது பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து உள்ளே நுழைந்து அவரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி காரணமாக அந்த சிறுமி ஒரு நாள் தற்கொலை முயற்சிக்கு துணிய அவரது தாயாரால் அவர் தடுக்கப்பட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்தே அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் அரசு ஊழியருக்கு எதிராக புகார் கொடுத்தனர். எனினும், பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயதை அடைந்த பிறகு அவரை தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக அவரது தாய் உறுதியளித்திருக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அரசு ஊழியர் நபருக்கும் இடையே விருப்பத்தின் பேரில் உடலுறவு நடந்ததாக ஒரு பத்திரத்தில் எழுத்தறிவில்லாத சிறுமியின் தாயை கையெழுத்திட அந்த நபரின் தாய் தூண்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி, 18 வயதை கடந்த நிலையில், அவரை தனது மகனுக்கு முன்பு கூறியபடி திருமணம் செய்து வைக்க அந்த நபரின் பெற்றோர் முன்வரவில்லை. இதையடுத்து, அந்த நபருக்கு எதிராக பாலியல் வல்லுறவு புகாரை சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் அளித்தார். அதன் அடிப்படையில் அந்த நபருக்கு எதிராக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது, மோசடி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அந்த நபருக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து ஒளரங்காபாத் உயர் நீதிமன்ற கிளையில் சிறுமியின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற போக்சோ சட்ட பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவில், இத்தகைய நுட்பமான வழக்கில் பிரச்னையின் தீவிரத்தை உணராமல் கீழமை நீதிமன்ற நீதிபதி முன் ஜாமீன் வழங்கியிருப்பது தவறானது என்று கூறி, முன்ஜாமீன் உத்தரவை தள்ளுபடி செய்தனர்.
இதை எதிர்த்து அந்த நபர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து சம்பவம் பற்றி புகார் அளிக்க வந்தது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். மைனர் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை அவர் பதின்ம வயது கடந்த பிறகு திருமணம் செய்வீர்களா என குற்றம் சுமத்தப்பட்ட நபரிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக