சிறுத்தைகள் சார்பில் திமுகவுடனான கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து மார்ச் 1ஆம் தேதி திமுக பேச்சுவார்த்தை குழுவினருடன் விடுதலைச் சிறுத்தைகளின் பேச்சுவார்த்தை குழுவினர் திருமாவளவன் தலைமையில் சந்தித்தனர்.
அப்போது சிறுத்தைகள் சார்பில் குறைந்தபட்சம் ஒன்பது தொகுதிகளில் இருந்து ஆரம்பிக்க, திமுகவிலோ இரண்டு தொகுதிகள் என்று ஆரம்பித்தனர். பேச்சுவார்த்தையின் முடிவில் 4 தொகுதிகள் வரை தருவதாகவும் தலைவரை நேரில் சந்தித்து பேசினால் ஒரு தொகுதிக்கு கூடுதலாக 5 தொகுதிகள் வரை பெற வாய்ப்பிருக்கிறது என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தனர்.
அதுவும் அந்தத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறதுஇந்த நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அவசர செயற்குழுக் கூட்டத்தை நேற்று கூட்டியுள்ளார் திருமாவளவன்.
இந்தக் கூட்டத்தில் முக்கியமான திமுக கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. "வடமாவட்டங்களில் மட்டுமல்ல, தென்மாவட்டங்களிலும் பிற மாநிலங்களிலும்கூட நாம் கட்சியைக் கட்டமைத்து எழுப்பி வருகிறோம். இந்த நிலையில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெறுவதற்குக் குறைந்தபட்சம் எட்டு தொகுதிகளில் நம்முடைய சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் . ஆனால் திமுகவின் நிபந்தனைகள் அதை பூர்த்தி செய்வதாக இல்லை. அவர்கள் கொடுக்கும் குறைந்தபட்ச தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாமா அல்லது தேர்தலிலேயே போட்டியிடாமல் இருக்கலாமா? திமுகவுக்கு நம்முடைய பெருந்தன்மையை நிரூபிக்கும் வகையில், திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யலாமா?” என்ற ரீதியில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக