nakkeeran :திமுக மாநாட்டிற்கு ஓவைசி வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் நிறுவனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஓவைசியை திமுகவின் சிறுபான்மை நல உரிமைப்
பிரிவின் மாநிலச் செயலாளர் மஸ்தான் சந்தித்துப் பேசினார். இந்தச்
சந்திப்பில் 'இதயங்களை இணைப்போம்' என்ற திமுகவின் மாநாட்டிற்கு வருகை
தருமாறு திமுக சார்பில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதனை
ஏற்றுக்கொண்ட ஓவைசி அந்த மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம்
தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 6-ஆம் தேதி 'இதயங்களை
இணைப்போம்' என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற
இருக்கிறது. இதன்மூலம், தமிழக அரசியலிலும் ஓவைசியின் பங்களிப்பு இருக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்,
ஐந்து இடங்களில் ஓவைசியின் கட்சி வெற்றிபெற்றது. இந்நிலையில், கடந்த வாரம்
அவர் பேட்டி அளித்தபொழுது, திமுகவுடன் கூட்டணியில்சேர விருப்பம்
இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று அவருடன்
திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் மாநிலச் செயலாளர் மஸ்தான் மேற்கொண்ட
சந்திப்பில் அவர் திமுக மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பது உறுதி
செய்யப்பட்டிருக்கிறது.
Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓவைசி கட்சியை திமுக கூட்டணியில் இழுத்து சாதித்துவிட்டது. இது திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் வியூக ராஜதந்திரத்துக்கு வெற்றி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தெலுங்கானாவில் மட்டும் செயல்பட்டு வந்த ஓவைசி கட்சி (மஜ்லிஸ்ட் கட்சி) கர்நாடகா, மகாராஷ்டிரா தேர்தல்களிலும் தலை காட்டியது. ஆனாலும் ஓவைசி கட்சி பெரிய அளவில் சாதிக்காமல் இருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி முதலில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியில் இணைய முயற்சித்தது. ஆனால் இந்த முயற்சி பலன் தராமல் போனதால் ஓவைசி கட்சி பீகாரில் தனித்தே போட்டியிட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பீகாரில் 5 இடங்களில் ஓவைசி கட்சி வெற்றியும் பெற்றது.
ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கூடுதல் இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்க
முடியாமல் போனதற்கு பல இடங்களில் ஓவைசி கட்சிதான் காரணம் என
விமர்சிக்கப்பட்டது. ஓவைசி கட்சியை பாஜகவின் பி டீம் எனவும் விமர்சித்தனர்.
ஆனால் இஸ்லாமியர்களுக்கான தனித்துவமான ஒரு கட்சிக்கான வெற்றிடம் இருந்து
கொண்டே இருக்கிறது; அதை இடத்தைத்தான் ஓவைசி நிரப்பி வருகிறார் என்கிற
யதார்த்தம் புரிபடவும் தொடங்கியது.
தமிழகம், மே.வங்கம் தேர்தல்
இந்த ஆண்டு நடைபெறும் தமிழகம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல்களிலும் ஓவைசி
கட்சி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஓவைசி கட்சி
போட்டியிடும் என்பதால் பாஜகவிடம் ஓவைசி பணம் பெற்று மதச்சார்பற்ற
வாக்குகளைப் பிரிக்கிறார் என மமதா பானர்ஜி கடுமையாக விமர்சித்தார். ஆனாலும்
ஓவைசி இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார்
திமுக முதல் சாய்ஸ்- ஓவைசி கட்சி
அதேபோல் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவதற்கான
பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம் என ஓவைசி கட்சியின் தமிழக தலைவர் வகீல்
அகமது தொடர்ந்து கூறிவந்தார். திமுகவே தங்களுக்கான முதல் சாய்ஸ் என்பதும்
ஓவைசி கட்சியின் நிலைப்பாடாக இருந்தது. இதனால் ஓவைசி கட்சி, திமுகவின்
முடிவு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவும் இருந்தது.
திமுக அணியில் ஓவைசி கட்சி
இந்த நிலையில்தான் ஜனவரி 6-ந் தேதி இதயங்களை இணைப்போம் என்ற பெயரில் திமுக
தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்
நடைபெறும் மாநாட்டில் ஓவைசி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், உலாமாக்கள் என பலரும்
பங்கேற்கின்றனர். இதன் மூலம் திமுக கூட்டணியில் ஓவைசி கட்சி இடம்பெறுவது
உறுதியாகி உள்ளது
திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய
மக்கள் கட்சி ஆகியவை ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. இப்போது ஓவைசி கட்சியும்
இடம்பெறுவது என்பது இஸ்லாமியர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல்
ஒருங்கிணைக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் ராஜதந்திர முயற்சிக்கு கிடைத்த
மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ஓவைசி கட்சி தனித்து
களமிறங்கினால் அதிமுக கூட்டணிக்கு ஆதாயம் என கருதிக் கொண்டிருந்த பாஜகவின்
நப்பாசை பனால் ஆகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக