அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது ஒப்பற்ற தலைமைக்கு என்னை நான் 78 ஆண்டு களுக்குமுன் ஒப்படைத்துக் கொண்டேன் - எனது கழக ஆசான் மரியாதைக்குரிய ஆ.திராவிடமணி அவர்கள்மூலமாக.
1943 ஜூன் 27 ஆம் தேதி என்னை 10 வயது சிறுவனாக மேடையின்மீது மேசையைப் போட்டு, அதில் ஏற்றிப் பேச வைத்தார். பயிற்சிக் களத்தில் பெரியார் அறிவுச்சுவடியைத் தந்து, சுயமரியாதைப் பேச்சை பேச வைத்து ‘அரங்கேற்றி' ஆயத்தப் படுத்தினார்கள்.
78 ஆண்டுகளின் தொகுப்பே எம் பணி!
அன்று தொடங்கிய என் பணி இன்றும் தொடருவது எனக்குக் கிடைத்திட்ட அரிய பேறு அல்லாமல் வேறு என்ன?
கிடைத்தற்கரிய மேலும் சிறப்பான வாய்ப்பு, தந்தை பெரியார் என்ற ‘தொண்டின் இமயத்திற்கு' அருகில் இருந்து அவரின் மனம் கோணாது பயன்பட்ட மாணவனாக வாழ்ந்து, பணி செய்து, அவருக்குப் பின்னால் அம்மா அன்னை ஈ.வெ.ரா.மணியம்மை யாரின் தலைமையில் தொடர் பணி, அவர்கள் மறைவுக்குப் பின்னால், தோழர்கள் தோள் கொடுத்த நிலையில், தொடரும் பணி என்னை 78 ஆண்டுகளாக பணித்த பணிகளின் தொகுப்பான பொதுவாழ்க்கைக் குரியவனாக என்னைப் பக்குவப்படுத்தி வருகிறது!
இந்த வாய்ப்பு எவருக்கும் எளிதில் கிட்டுமா? அதுமட்டுமா? ‘‘பெரியார் தந்த புத்தியை'' வரித்துக் கொண்டவன் நான்; அதனால்தான் மலையளவு எதிர்ப்பு என்றாலும், அது பனியளவு கரைகிறது!
என் வயதை இடித்துக் காட்டும் உடல் உறுப்புகள்!
இன்று (2.12.2020) எனக்கு 88 வயது பிறக்கிறது என்பதை எனது கொள்கைக் குடும்பத்து உறவுகள் நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
எனது உடல் உறுப்புகளும்கூட வயது முதிர்வை சிற்சில நேரங்களில் இடித்துக்காட்ட எப்போதும் தவறுவதில்லை!
உடல் 88 ஆண்டு நுழைவு வாயிலுக்குள் சென் றாலும்கூட, உள்ளம் 28 ஆண்டுகளில்தான் நிற்கிறது; காரணம், என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, உறுதிப்படுத்திடும் உயிருக்கு உயிரான உற்ற கொள்கைக் குடும்பத்து உறவுகளே!
கையில் தடியேந்திடும் அவசியம் இன்றும் எனக்கு இல்லை; காரணம், ஏற்கெனவே நான் ‘பெரியாரின் கைத்தடி'யாக ஆக்கப்பட்டுள்ளேன்!
தளர்வு நடை - இதுவரை நான் அறியாதது!
காரணம், உணர்வு ஊற்று உங்களிடமிருந்து வந்து என்னை உந்தி உந்திக்கொண்டே ஈரோட்டு லட்சியப் பாதையில் நெஞ்சை நிமிர்த்தி நேரிய வழியில், நெறி பிறழாது வேக நடைபோட வைப்பதால்!
தேவைகள் குறைவு - தந்தை பெரியார் தந்த ‘மந்திரம்!'
ஏமாற்றம் எதிலும் இல்லை; காரணம் எதிர்ப்பார்ப்பு எல்லை தாண்டி, எதிலும் வளர்த்துக் கொள்ளப் படாததால்!
தேவைகளோ மிகக் குறைவு! தந்தை தந்த ‘மந்திரம்' அது! தெளிவோ மிக நிறைவு! உரியவரிடம் பாடங் கற்றதால்!
நான் ‘‘பாதுகாப்புடன்'' இருக்கிறேன் - காரணம் நான் அமர்ந்திருப்பது அறிவாசானின் தோள்மீது!
என்னை எப்போதும் கண்காணித்து, காத்திருப்பது கருஞ்சட்டை வீரர்களும் - வீராங்கனைகளும் - கருணை உள்ளங்களும், கடமையாற்றத் தவறாத கரங்களும்தானே!
இயக்கக் கவலையே தவிர, இல்லக் கவலை எப்போதும் எமக்கில்லை - அதை எனது வாழ் விணையரும், குருதிக் குடும்பத்தாரும், உற்றாரும் உரியதாக்கிக் கொண்டு என்னை ‘சுதந்திரப் பறவை யாக' பொதுவானில் - பொது வாழ்வில் சுயமரியாதைச் சிறகடிக்க விட்டுவிட்டார்கள்!
எனக்கு மகிழ்ச்சியைத் தர என்னைச் சுற்றியுள்ள எனது பணித் தோழர்கள் ‘ரத்தமும், சதையும், நகமுமாக' உள்ளனர்! ஒவ்வொரு கண் அசைவு நிலையிலும் கடமையாற்றும் கனிந்த பக்குவம் பெற்று, மனங்கோணாத மகத்தான தொண்டறத்தின் தூய வடிவங்களாக எனது நிழலாகத் தொடருகிறார்கள்! இதைவிட பெரு வாய்ப்பு வேறு உண்டா?
ஆம்! இது பெரியாரின் பெருங்குடும்பம்! இல் லறத்துத் தொண்டறத் துறவிகளின் தூய கொள்கைப் பாசறை; தொய்வின்றிப் பயணம் மேற்கொண்டு, பருவம் பாராது, பணியாற்றிடும் பக்குவம் பெற்ற பகுத்தறிவுப் படை! கருப்பு மெழுகுவத்திகளின் தகத்தகவென்ற ஒளிக் கூட்டம்!
சறுக்கி விழ முடியாத சரித்திரப் பணி
பின் நம் ஒரே பணி- பெரியார் பணி முடிப்பது - அது சமுதாயப் பணி அல்லவா?
சறுக்கி விழக் கூடாத, முடியாத சரித்திரப் பணியல்லவா?
இந்தப் பிறந்த நாளில் - இந்த கொடுந்தொற்று கரோனாவை விடக் கொடியது ஆரியம்; கண்ணுக்குத் தெரியாத விஷக் கிருமிகள் உயிர்க் கொல்லியாக ஓர் இனத்தின் மானத்தையும், அறிவையும், எழுத்தையும், பண்பாட்டையும் அழிக்கும் நோய்.
அது நம்மவர் பலரின் மூளையையும் தாக்கி முற்றுகையிட்டு மண்டியிடச் செய்த, செய்யும் கொடும் பயம்தரும் நோய்!
அதை எதிர்த்து அழிக்க, மானிடத்தை சமத் துவத்தில் திளைக்க வைக்கும் ஒரே மாமருந்து தந்தை பெரியார் தந்த ‘‘திராவிடம்'' என்ற தத்துவம் ஆகும்!
‘‘திராவிடம்'' என்னும் தத்துவம்!
‘திராவிடம்' என்றால் இனவாதம் அல்ல! ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமத்துவ, சம வாய்ப்பு மாமருந்து! ஆரியத் தொற்றுக்குச் சரியான தடுப்பூசி! அறிவியல் பூர்வமான பகுத்தறிவின் கண்டு பிடிப்பு! மிக்க பண்பின் குடியிருப்பு!
சமத்துவம், சுயமரியாதை, ஒன்றுபட்ட ஒப்புரவு உள்ள உயர்ந்த வாழ்க்கை நெறி!
ஜாதி, பெண்ணடிமை என்ற பேதங்களைக் களைந்து விரட்டி - மக்களை ஒன்றாக்கிடும் உயர் வாழ்வுக்கான சுயமரியாதை சுகவாழ்வு!
வறட்டுத் தத்துவங்கள் அல்ல இவை - வளமான பகுத்தறிவின் ஜீவ நீரோட்டம்!
ஆரியம் அதன் நேர் எதிரான தத்துவம் - ஆதிக்கவெறியின் அடையாளம்!
எனவே, எமது எஞ்சிய பணி அதனை அழிக்க முனையும்- மனிதகுலப் பகைமையை விரட்டி பாரெங்கும் பகுத்தறிவு சமத்துவ சுயமரியாதை நெறியைப் பரப்புவதே!
எம் - நம் உயிரைப் பணயம் வைத்தும் போராடித் தான் அந்த வெற்றிக் கனியைப் பறித்திட இயலும் என்றாலும், அதற்கும் தயார் என்று சூளுரைப்பதுதான் இந்நாளில் எமது உறுதிமொழி!
எண்ணிக்கை முக்கியமல்ல - இராணுவக் கட்டுப் பாடுடன் கடமையாற்றிட எப்போதும் தயார் என்ற இளைஞர்கள் தங்களை இழக்கவும் தயார் என்ற நிலையில் உள்ளனர்! வெற்றிக்களம் காண, சமூக நீதிக்கு இன்று ஏற்படுத்தப்பட்டு வரும் அறை கூவல்களை ஏற்று முறியடிக்கவேண்டும்.
என் வேண்டுகோள் எது?
சமூகநீதிக்காகவே பிறந்த திராவிடர் இயக்கம், தந்தை பெரியார், அவரது தளநாயகர்கள் அறிஞர் அண்ணா, காமராசர், கலைஞர்மூலம் பெற்றவை கைம்மண்ணளவு. இன்னும் பெற வேண்டியது மலை யளவு என்ற போதிலும், பெற்றவைகளை நாளும் பறிக்க ஆரிய ஆதிக்க ‘ஆக்டோபசின்' கொடுங் கரங்கள் நாளும் நீண்டு கொண்டே போவதால், அதனை காப்பாற்றுவதே முதன்மைப் பணியாகும்!
எனது வேண்டுகோள் - இன்று இதுதான்!
நாம், நமது தலைவர்கள் - அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த - கல்வி, உத்தியோக வாய்ப்பு - இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக் களத்தின் முனை இன்று நம் இன எதிரிகளால் பல நிறுவனங்களின்மூலம் முறிக்கப்படும் கொடுமை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்திருக்கிறது!
அதற்கு வாய்ப்பாக மத்தியில் ஓர் அரசும் மிகவும் தந்திரமாக வாக்கு வங்கியை வளைத்தே செய்யும் தற்காலிக வெற்றி பெற்று வருகிறது!
அதை எதிர்த்துப் போராடி ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளைக் காப்பாற்றும் பணி நம் தோளில்தான்! மறவாதீர்!
தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு வெளிப் படையாக காவிச் சாயத்தை பூசிக் கொள்ளாவிட்டாலும் இரட்டை வேடத்தோடு காவிகளோடு கூட்டணி சேர்ந்துள்ளதால், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெருவெற்றி பெற்றதுபோல, மீண்டும் பெரிய வெற்றிக்கான பிரச்சாரக் களம் - மக்களை அணுகுவதானப் பணிகள் - நமது உடனடிப் பணிகளாக அமையவேண்டும்.
திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், மக்களைச் சந்திக்கும் மாபெரும் நிகழ்வுகள் - எல்லையற்ற அடைமழை பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!! என்றே பொழிய வேண்டும்!
அதன்மூலம் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். தமிழ் நாட்டில் விதைத்த விஷ வித்துக்களைத் தடுக்கவும், புதைக்கும் கண்ணிவெடிகளான சூழ்ச்சிகளை மக்களிடையே அம்பலப்படுத்தி அகற்றும் பெரும் பணி நம் பணியாக அமைந்திட வேண்டும்! கட்டுப் பாட்டுடன் உழைக்கவேண்டும்.
உண்மையான திராவிடர் ஆட்சி வர உழைப்போம்!
உண்மையான திராவிடர் ஆட்சி (தி.மு.க.)தான், தமிழ்நாட்டின் மீட்சியாக அமைய முடியும். அருமை சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் - தி.மு.க. தலைமையில் அது அமையவேண்டும்.
அதற்கு உழைப்பது - பணியாற்றுவது - பதவிக்குச் செல்வோருக்கு உதவிக்கான அணி நம் இனத்தின் மீட்சியாக அமையும் என்ற நம்பிக்கையின்மீது!
நம் கடன் பணி செய்து அமைவதே!
வழமைபோலவே நமது இயக்கம் என்றும் பிரச்சாரம்! போராட்டம்!! என்ற இரு முனைகளை நோக்கி என்றும் ஓடிக் கொண்டிருக்கிறது!
‘விடுதலை' சந்தாக்களைத் தந்து உற்சாகப்படுத்திய தமிழ்ப் பெருமக்களுக்கும், கழகக் குடும்பத்தவருக்கும் எமது தலைதாழ்ந்த நன்றி!
‘விடுதலை' வாழ்ந்தால் - எவரே வீழ்வர்?
‘விடுதலை' வாழ்ந்தால் - எவரே வீழ்வர்!
‘விடுதலை' ஓய்ந்தால் - எவரே வாழ்வர்?
என்பதைப் புரிந்து செயலூக்கியாக உள்ளவர் களுக்கு எமது நன்றி! நன்றி!!
வற்றாத பாசத்தை, வலிமையான ஒத்துழைப்பை எப்போதும் நல்குவோம்; ‘விடுதலை' நாளேடு நம் பாசறை முழக்கக் குரல்; அது மங்கிடக் கூடாது; ஓங்கி ஒலித்துக்கொண்டே இருப்பது நமது போர் முரசத்தின் முழக்கம் என்று கருதி ஓடோடி சந்தா சேகரித்து எனக்குப் பரிசாக அளிக்க சலிப்பின்றி உழைக்கும் நம் கொள்கைப் போராளிகளது உழைப்புக்கும், வாசகர் களுக்கும், திராவிடப் பெருங்குடி மக்களும் நம்மீது - நம் இயக்கத்தின்மீது வைத்துள்ள அபரிமித நம்பிக் கையும் ஒருபோதும் வீணாக்கப்படாமல், இறுதி மூச்சடங்கும் வரை உழைப்பேன், உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன்!
பெரியாரை உலகமயமாக்கி, உலகத்தைப் பெரியார் மயமாக்கி, பேசு சுயமரியாதை புத்துலகம் சமைக்க புதிய உற்சாகத்துடன் மீண்டும் உங்களிடம் ஒப்படைத்துக் கொள்ளும் நாளாகவே இந்த நாளை நான் பார்க்கிறேன்!
லட்சியம் உயிரினும் பெரிது - மானத்தையும் தாண்டியது!
அனைவருக்கும் நன்றி! நன்றி!!
எனவே, லட்சிய வெற்றியை நோக்கிய நமது பயணம் தடைகளைத் தாண்டிய பயணமாக, எதிர்ப்பு களை வெல்லும் ஏவுகணை வீச்சுகளாக அமையட்டும்!
88 ஆண்டில் அடியெடுத்து வைக்க நாளும் எனக்கு உதவிடும் எனது வாழ்விணையர் முதல், எனது மருத்துவக் காவலர்கள், என்னை எப்போதும் உற்சாகப்படுத்திய செயலிகளான எம்மருந் தோழர் கள், கொள்கை உறவுகள், ஆதரவுக்கரம் கொடுக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
1.12.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக