வியாழன், 31 டிசம்பர், 2020

பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துப்புரவு தொழிலாளி!

minnambalam : துப்புரவு தொழிலாளியாகப் பகுதி நேர வேலை பார்த்து வந்த பெண் தற்போது பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தெற்கு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பதானபுர ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி அலுவலகத்தையும் அங்குள்ள நாற்காலிகளையும் இதுநாள் வரை சுத்தம் செய்து வந்த ஆனந்தவள்ளி(46) என்ற பெண் தற்போது பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆனந்தவல்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் அதே அலுவலகத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு, 2011ல் ரூ.2,000 ஊதியத்துக்குப் பகுதி நேர துப்புரவுத் தொழிலாளியாக பணியில் சேர்ந்தார். இதையடுத்து சம்பளம் ரூ.6,000மாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இவர் பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்று கேரளா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நேற்று பஞ்சாயத்துத் தலைவரின் நாற்காலியில் அவரை அமர வைக்க அழைத்துச் சென்ற போது, ஆனந்தவல்லியால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். ஆனந்தவல்லி கூறுகையில், “எனது கட்சியால் மட்டுமே இதுபோன்ற செயல்களைச் செய்ய முடியும். அதற்கு நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அன்று துப்புரவு தொழிலாளி... இன்று பஞ்சாயத்துத் தலைவர்!

தொடர்ந்து அவர், “எனது கட்சியினரும், நலம் விரும்பிகளும் புதிய பொறுப்பை ஏற்க என்னைத் தூண்டினர். தொகுதி பஞ்சாயத்தை ஒரு முன்மாதிரியாக மாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். எனக்கு தற்போது பொறுப்பு அதிகரித்துள்ளது. எனது தொகுதியில் உள்ள அனைவரது வாழ்க்கையைச் சிறப்பாக மாற்ற நான் கடுமையாக உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்ட ஆனந்தவல்லிக்கு ஒரு பெயிண்டருடன் திருமணம் நடந்தது, அவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கேரளாவில், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டார். இவர் மட்டுமல்லாமல் மேலும் சில பெண்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.

22 வயதான சட்டக் கல்லூரி மாணவி, சாருதி, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒலவண்ண பஞ்சாயத்துத் தலைவராகவும், 21 வயதான ரேஷ்மா மரியம் ஜாய், பத்தனம்திட்டாவில் உள்ள அருவபூலம் பஞ்சாயத்தின் தலைவராகவும், ராதிகா மகாதேவன் (23) பாலக்காட்டில் உள்ள மலம்புழா பஞ்சாயத்தின் தலைவராகவும், வயநாடு மாவட்டத்தில் போஜுதான பஞ்சாயத்துத் தலைவராக 23 வயதான அனஸ் ஸ்டெபியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கருத்துகள் இல்லை: