திமுக ஆட்சி வந்த உடன் மக்கள் கொடுத்த மனுக்களை தூசுதட்டி தீர்த்து வைப்போம்: முக ஸ்டாலின்
Velmurugan P - tamil.oneindia.com :
திருவண்ணாமலை : "மக்கள் மனு கொடுத்தால் குப்பைத் தொட்டியில் போடுவது
பழனிசாமியின் பழக்கமாக இருக்கலாம்; நாங்கள் அரசிடம்தான் கொடுத்தோம்;
தி.மு.கழக அரசு அமைந்தவுடன் அந்த மனுக்களைத் தூசுதட்டி எடுத்து குறைகளைத்
தீர்த்து வைப்போம்" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார். "கொள்கை
சார்ந்த அரசாகவும் - மக்கள் நலத்திட்ட உதவிகளைச் செய்யும் அரசாகவும்
விளங்கும் தி.மு.க. அரசு அடுத்து அமைந்தவுடன் மக்களின் தேவைகள் அனைத்தும்
நிறைவேற்றப்படும்" என்றும் ஸ்டாலின் கூறினார்.
திருவண்ணாமலை 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
உரையாற்றுகையில், கொரோனா காலத்தில் 'ஒன்றிணைவோம் வா' என்ற அடிப்படையில் ஒரு
திட்டத்தைத் தொடங்கி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச்
செய்தோம்! அரசாங்கம் செய்ய வேண்டியதைப் பொதுமக்கள் மனுக்களாக எங்களிடம்
கொடுத்தார்கள்.
அந்த மனுக்களைத் தலைமைச் செயலாளரைச் சந்தித்துக் கொடுத்தோம். உரிய
மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கொடுத்துவிட்டோம். இவை அனைத்தும் அரசாங்கம்
செய்ய வேண்டிய பணிகள். அதனை இந்த அரசு செய்து கொடுத்ததா என்றால் இல்லை!
செய்து கொடுக்க முயற்சித்தார்களா என்றால் அதுவும் இல்லை!
"உங்களிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டால், உங்களிடம் ஒரு கோரிக்கை
வைக்கப்பட்டால், அதை யார் கொடுத்தது என்று பார்க்காதீர்கள். என்ன கோரிக்கை
என்று மட்டும் பாருங்கள். செயல்படுத்திக் கொடுங்கள்' என்று தலைவர் கலைஞர்
தான் சொல்வார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு, தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட
கோரிக்கைகளை மதிக்கவில்லை.
தி.மு.க.வை மதிக்கவில்லை என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
எடப்பாடியிடம் மரியாதை பெற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை. ஆனால்
தமிழ்நாட்டு மக்களை பழனிசாமி மதித்தாரா? அந்த மக்களால் தான் அவர்
முதலமைச்சராக இருக்கிறார், அவர்கள் வாக்களித்ததால்தான் அ.தி.மு.க.
ஆளும்கட்சியாக இருக்கிறது. இந்த நன்றியுணர்ச்சி கொஞ்சமாவது அவருக்கு
இருந்திருக்க வேண்டும். அவருக்கும் நன்றியுணர்ச்சிக்கும் கொஞ்சமும்
சம்பந்தமில்லை என்பதன் அடையாளம் தான் அவரது பேச்சு.
பழனிசாமி பேசி இருக்கிறார். "மக்களிடம் மு.க.ஸ்டாலின் மனுக்களை வாங்கினார்.
அந்த மனுக்கள் எல்லாம் குப்பைத் தொட்டிக்குத் தான் போனது" என்று சொல்லி
இருக்கிறார். மக்களிடம் பெற்ற மனுக்களை தலைமைச் செயலகத்தில் தலைமைச்
செயலாளரிடம் தான் கொடுத்தோம். ஆனால் அது குப்பைத் தொட்டிக்குப் போனது என்று
பழனிசாமி சொல்கிறார் என்றால் அவர் ஆட்சி செய்யும் தலைமைச் செயலகத்தை
குப்பைத் தொட்டி என்கிறாரா?
தான் உட்கார்ந்து இருப்பதால் அது குப்பைத் தொட்டியாகத்தான் இருக்கும்
என்று நினைக்கிறாரா?எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்கள் மனு வாங்கினால்
அதனைச் சம்பந்தப்பட்ட துறைக்கு தான் அனுப்ப முடியும்? அது மக்களுக்கும்
தெரியும். இது கூடவா மக்களுக்குத் தெரியாது.அமைச்சரிடம் மனு
கொடுப்பதற்கும். எதிர்க்கட்சித் தலைவரிடம் மனு கொடுப்பதற்கும் வித்தியாசம்
தெரியாதவர்களா தமிழ்நாட்டு மக்கள்? மக்கள் மனு கொடுத்தால் குப்பைத்
தொட்டியில் போடுவது பழனிசாமியின் பழக்கமாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை
நாங்கள் அரசாங்கத்திடம் தான் கொடுத்துள்ளோம். அரசாங்கம் எங்கள் கைக்கு
வந்ததும் அந்த மனுக்கள் தூசி தட்டி எடுக்கப்பட்டு மக்களின் கோரிக்கைகள்
நிறைவேற்றப்படும் என்பதை எனது வாக்குறுதியாகச் சொல்லிக்கொள்ள
விரும்புகிறேன்.
மூன்றாவது முறையும் ஆட்சிக்கு வருவோம் என்று முழங்கி இருக்கிறார்
பழனிசாமி. அ.தி.மு.க. என்ற கட்சியையே தனது நாற்காலியைக் காக்க, தான்
கொள்ளையடிக்க, தான் தப்பிக்க பா.ஜ.க. அரசிடம் அடமானம் வைத்துவிட்ட
பழனிசாமிக்கு எம்.ஜி.ஆரைப் பற்றியோ, ஜெயலலிதாவைப் பற்றியோ பேசுவதற்குக் கூட
அருகதை இல்லை. இதனை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் உணர்வார்கள். தன்
மீதான கொள்ளை வழக்கில் இருந்து தப்புவதற்காக பாஜகவின் பாதம் தாங்கிக்
கிடக்கும் பழனிசாமியை, பா.ஜ.க.வே வஞ்சம் தீர்த்துவிடும்.
அவர் முதலமைச்சர் வேட்பாளராகக் கூட நீடிக்க முடியாது என்பதைத் தான்
பா.ஜ.க.வினர் தினமும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தப் பயத்தில்
இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஏதோ உளறிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி!
பழனிசாமியின் ஆட்சியானது தமிழகத்தின் இருண்டகாலம். இந்த இருண்டகாலம் போக்க
அருணை மண், தனது அரசியல் எழுச்சித் தீபத்தை ஏந்தட்டும் என்று சொல்லி
விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்!" இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக