சனி, 2 ஜனவரி, 2021

தமிழகத்தில் 17 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை

dinamalar.com : சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, 100 படுக்கைகள் உள்ள, கொரோனா தீவிர சிகிச்சை பிரிவை, அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா தடுப்பு பணியை, உலக சுகாதாரநிறுவனம் பாராட்டி உள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை, இன்று முதல், சென்னை, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய, ஐந்து மாவட்டங்களில், 17 இடங்களில் நடைபெற உள்ளது.இதற்காக, 47 ஆயிரத்து, 200 கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 21 ஆயிரத்து, 170 சுகாதார பணியாளர்களுக்கு, தடுப்பூசிக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு மணி நேரத்தில், 25 நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.  ஒத்திகை நடைபெறும் இடங்கள்!

* சென்னை: ராஜிவ் காந்தி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை; நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் - சாந்தோம் மற்றும் ஈக்காட்டுதாங்கல்

* நீலகிரி:அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ஊட்டி; குன்னுார் அரசு மருத்துவமனை; நிலக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம்


* திருநெல்வேலி:அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை; நகர ஆரம்ப சுகாதார நிலையம், சமாதானபுரம்; ரெட்டியார்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்

* திருவள்ளூர்:அரசு மருத்துவமனை; பூந்தமல்லி, நேமம் மற்றும் திருமழிசை ஆரம்ப சுகாதார நிலையங்கள்

* கோவை:அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை; பி.எஸ்.ஜி., இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், சூலுார் அரசு மருத்துவமனை; எஸ்.எல்.எம்., ஹோம் நகர ஆரம்ப சுகாதார நிலையம்; பூலுவப்பட்டி சமுதாய சுகாதார நல மையம்

யாருக்கு முன்னுரிமை? இந்தியாவில், 'கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு' தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டன. யாருக்கும் உடல் உபாதைகள் ஏற்படவில்லை. எனவே, பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர, மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது.தமிழகத்தில், தடுப்பூசிகளை பதப்படுத்துவது முதல், பொது மக்களுக்கு செலுத்துவது வரை, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.மேலும், டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் என, 5 லட்சம் பேர் பட்டியல் தயாராக உள்ளது.எனவே, முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கும், அதை தொடர்ந்து நாள்பட்ட நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கும், தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, அனைத்து வயதினருக்கும் செலுத்தப்படும் என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: