வியாழன், 19 மார்ச், 2020

தலைமை ஆசிரியர் மீதான் பாலியல் வழக்கில் மாணவிகளை மிரட்டிய அரசு வழக்கறிஞர் கைது! சிவகங்கை

மின்னம்பலம் : மாணவிகளை மிரட்டிப் பொய் சாட்சி கூறவைத்த குற்றச்சாட்டில் அரசு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில், பெரியநரிக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த முருகன் 2015 ஏப்ரல் மாதம் நான்கு மாணவிகளைப் பள்ளியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 6/2015இல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏஎஸ்பி வந்திதர் பாண்டே நேரடி பார்வையில் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிவகங்கை போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்தது.
வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய நீதிபதியாக ப.உ.செம்மல் பொறுப்பேற்று வழக்கின் முழு விவரங்களையும் தீரப் படித்துவிட்டு சாட்சிகள் பிறழ் சாட்சியானதைப் பார்த்து, மீண்டும் சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

குற்றவாளியின் வழக்கறிஞர்கள் மீண்டும் சாட்சிகளை விசாரிக்கக் கூடாது என்று தடை போட்டனர். அந்த நேரத்தில் அரசு வழக்கறிஞர் இந்திரா காந்தி, குற்றவாளியான ஆசிரியர் முருகன், அவர் மனைவி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவிகளை அழைத்து மன்னிப்பு கேட்டும், எந்தவிதமான தவறுகளும் நடக்கவில்லை என்று நீதிமன்றத்தில் பொய் சொல்லச் சொல்லி மிரட்டியதாகவும் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 8.2.2020 அன்று சார்பு ஆய்வாளர் பிரபாவிடம் வாய்மொழியாகப் புகார் அளிக்கப்பட்டது. குற்ற எண் 4/2020 பிரிவு 195(a) ஐபிசி வழக்கு பதிவு செய்துள்ளது.
அந்தப் பெண் கொடுத்த புகாரில் 25.4.2016இல் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல சம்மன் கொடுத்தார்கள். அதைத் தெரிந்துகொண்ட தலைமை ஆசிரியர் முருகனும், அவரது மனைவியும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்குச் சென்று நீ சாட்சி சொன்னால் என் வேலை போய்விடும் என்றும் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம் என்றும் கேட்டு, உங்கள் குடும்பத்துக்குத் தேவையானதைக் கேளுங்கள். பணத்தேவையாக இருந்தாலும் கொடுக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.


நீதிமன்றம் சென்றபோது, சிறுமிகளை ஆசிரியர் முருகன் பெண் அரசு வழக்கறிஞரிடம் அழைத்துப்போனார். அந்த வழக்கறிஞர், ‘நீ வாழக்கூடிய பெண், நீதிமன்றத்தில் கேட்டால், ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்ல வேண்டும், முருகன் ஆசிரியர் தவறு ஏதும் செய்யவில்லை’ என்று சொல்ல வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அதனால் அவர்கள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது அரசு வழக்கறிஞர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, மின்னம்பலத்தில், முக்கியமான மூன்று வழக்குகள்: விசாரிக்கும் ஒரே நீதிபதி! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த புகாரைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் தலைமறைவாகினார். இதுகுறித்து மார்ச் 1ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாகச் செயல்பட்ட அரசு வழக்கறிஞர் தலைமறைவு என்ற தலைப்பிலும், மார்ச் 3ஆம் தேதி, கைவிரித்த கலெக்டர், எஸ்பி, அரசு வழக்கறிஞர் தொடர்ந்து தலைமறைவு என்ற தலைப்பிலும் மின்னம்பலத்தில் விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் அரசு சிறப்பு வழக்கறிஞர் இந்திரா காந்தி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சிவகங்கை மாவட்டம் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டார்.


சிவகங்கை மாவட்டம் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் முன் நேற்று (மார்ச் 18) ஆஜராகி முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார் அரசு வழக்கறிஞர் இந்திரா காந்தி. இதனை விசாரித்த நீதிபதி ப.உ.செம்மல், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதால் மனுவைத் தள்ளுபடி செய்து உடனடியாக அரசு வழக்கறிஞர் இந்திரா காந்தியைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: