சனி, 21 மார்ச், 2020

லல்லு பிரசாத் யாதவ் .. சமுக நீதியையும் மத நல்லிணக்கத்தையும் உறுதியாக முன்னெடுத்ததால் சிறையில் ....

சுமதி விஜயகுமார் : வருடம் சரியாக நினைவில் இல்லை. 2004 ஆம்
ஆண்டாக இருக்கலாம். குமுதம் இதழில் ஒரு படம். லாலு பிரசாத் தன் மனைவி குழந்தைகளுடன் வரிசையாக நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்த படத்தின் கீழே , இந்திய ரயில்துறை அமைச்சர் ரயில் பெட்டிகளை போல குழந்தைகளை பெற்று போட்டிருக்கிறார் என்று கேலி செய்தி வெளியிட்டு இருந்தது. ரயில்துறை ஊழல் , மாட்டு தீவன ஊழல் இவற்றை தாண்டி லாலு பிரசாதிற்கு ஒரு முகம் இருக்கிறது. அது என்ன ?
1977ல் முதல் இளம் மக்களவை உறுப்பினராக தேர்வான பொழுது லாலுவிற்கு வயது 29. இந்திரா காந்தியின் அவசரநிலைக்கு பிறகு நடந்த தேர்தல் அது. காங்கிரெஸ்ஸை தோற்கடித்து மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி வெற்றிபெற்றது. அதன் பின் 13 ஆண்டுகள் கழித்து பீகாரின் முதலமைச்சர் ஆனார் லாலு . உட்கட்சி பூசல்களுக்கு பிறகு லாலு ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து ராஷ்ட்ரிய ஜனதா தல் என்ற கட்சியை நிறுவினார். 2015ல் தன் நண்பரும் எதிரியுமான நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற, நிதிஷ் குமார் முதலமைச்சராகவும் லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள். இரண்டாண்டுகளில் நிதிஷ் குமார் மோடியின் ஆட்சியை புகழ துவங்க லாலு நிதிஷ் உறவில் விரிசல் ஏற்படுகிறது. பிறகு ஊழல் வழக்கில் லாலு சிறை செல்ல, நிதிஷ் குமார் பதவி விலகி , பிஜேபியுடன் இணைந்து மீண்டும் பதியேற்றார்.

கர்நாடக மற்றும் மிக சமீபத்திய மகாராஷ்டிரா உதாரணமான ராஜதந்திரம்/சாணக்யத்தனம் என்று சொல்லப்படும், மக்களின் தேர்வை காலில் போட்டு மிதித்து குப்பையில் தள்ளி, அரியணை ஏறும் அதே அறமற்ற தந்திரம் தான் பீஹாரிலும் ஏற்பட்டது. ஆனாலும் மற்ற மாநிலங்களை போல பிஹாரில் ஆட்சியை கவிழ்த்தியது பிஜேபிக்கு லாலு என்ற தனிப்பட்ட மனிதன் மேல் இருந்த காழ்ப்புணர்ச்சி. பல வருடங்களாக இருந்த வன்மம்.
1989 ஆம் ஆண்டு. மத்தியிலும் பீகார் மாநிலத்திலும் காங்கிரஸின் ஆட்சி. ஆகஸ்ட் மாதம் முஹரம் பண்டிகையுடன் ஹிந்துக்களின் பிஷரி பூஜையும் சேர்ந்து வரும் வேளையில், whatsapp இல்லாத காலத்திலேயே பரவலாக இரு பொய் செய்திகள் பரப்பப்பட்டது. 200 ஹிந்து மாணவர்களை இஸ்லாமியர்கள் கொன்றுவிட்டார்கள் என்று ஒரு செய்தியும் 31 ஹிந்து சிறுவர்களை இஸ்லாமியர்கள் கொன்று விடுவார்கள் என்றும் இரு வேறு பொய் பரப்புரைகள் பரப்பப்பட்டன. அதை அடுத்து விஷ்வா ஹிந்து பரிஷத் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு செங்கற்களை சேகரிக்க போவதாக ஊர்வலம் நடத்துகிறார்கள். ராமர் மற்றும் பிள்ளையார் ஊர்வலம் என்றாலே அது தவறாமல் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு தானே செல்ல வேண்டும். இந்த ஊர்வலமும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதி வழி செல்ல , அதற்கு முன்னதாக மேற்சொன்ன இரண்டு பொய் பரப்புரைகளும் முன் சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கோஷங்கள் எழ, லேசான மோதல் மத கலவரமாக மாறியது.
அந்த கலவரத்தில் 1000 பேர் வரை இறந்தார்கள் என்று அதிகாரபூர்வ அறிக்கை வர அதில் 900 பேர் இஸ்லாமியர்கள். பீகார் மாநிலமே பெரும் கொந்தளிப்பை சந்தித்தது. அதன் பின் நடைபெற்ற தேர்தலில் மத்தியில் விபி சிங்கின் ஆட்சியும் மாநிலத்தில் லாலு பிரசாந்தின் ஆட்சியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த தேர்தலில் மட்டுமே லாலு பிரசாத் பிஜேபியுடன் கைகோர்த்தார். அதுவும் அத்வானியின் ரத யாத்திரை வரைதான். விபி சிங்கின் மண்டல் கமிஷனின் ஆணையை அடுத்து பிஜேபி ஆட்சியை கலைக்க கையில் எடுத்த ஆயுதம் தான் ரத யாத்திரை. மீண்டும் ஒரு பாகல்பூர் கலவரம் நிகழாமல் இருக்க விபி சிங்கின் வேண்டுகோளுக்கு இணங்க லாலு பிரசாத் ரத யாத்திரையை தடுத்து அத்வானியை கைது செய்தார். அப்போது லாலு பிரசாத் மக்களிடையே ஆற்றிய உரை வரலாறு சிறப்பு வாய்ந்தது.
எளிய மக்களை மதத்தின் பெயரால் தூண்டி கொண்டிருந்த வேளையில் லாலு பிரசாந்தின் உரை ஹிந்து முஸ்லீம் மக்களிடையே நட்புறவை பாராட்டியது. பெரும் கலவரம் வெடிக்க இருந்த வேளையில் லாலு தன் சாதுர்யத்தால் அதை கட்டுக்குள் கொண்டு வந்தார். தமிழகத்தின் சமூக நீதியை பிஹாரில் நிறுவ முயன்றவர். 2000களில் தன் பெயருக்கு பின் இருந்த யாதவ் என்ற பெயரை துறந்தார். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஐடா ஒதுக்கீடை ஆதரித்தார். இவை அனைத்தையும் தாண்டி லாலுவின் ஊழல் மட்டுமே முன்னிறுத்தப்படுவது என்பது குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த பிறகும் ஜெயலலிதாவை பற்றி விமர்சனம் செய்யாமல், குற்றம் நிரூபிக்க முடியாமல் விடுவிக்கப்பட்ட 2g வழக்கை மட்டுமே விமர்சிக்கும் தந்திரமே அன்றி வேறு ஒன்றும் இல்லை.
லாலு பிரசாத் ரயில்வேத்துறை அமைச்சராக இருந்த சமயம்.ரயில்வே துறை எவ்வளவு சிறப்பாக செயல் பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 15 ஏப்ரல் 2006 , Washington Timesல் உலகின் அதிக அளவு வேலைக்கு ஆட்களை நியமித்தவர் லாலு என்று அறிவித்தது. ஏறக்குறைய 15 லட்சம் பணி ஆட்களை நியமித்தார். அதிக அளவு பணியாட்களை நியமித்தும், ரயில் கட்டணத்தை கூட்டாமல் 15.5% அதிக லாபத்தை உயர்த்தி காட்டியவர் லாலு. தன் துறையில் நிகழ்த்திய சாதனையை பற்றி குறிப்பிடாமல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை கேலி பேசும் ஊடகங்கள் தான் அதிகம். வெறும் தோற்றத்தை கிண்டல் செய்தும் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்தும் ஒரு மனிதனின் சாதனைகளை மறைத்து வேறு யாரை முன்னிறுத்துகிறார்கள் என்பது அதி முக்கியம்.
ஊழல், சாதி பற்று என்று ஆயிரம் குறைகள் இருந்தாலும், மதவாத அரசியலை முன்னின்று எதிர்ப்பவர் என்பதற்காகவே லாலுவை பாராட்டலாம்.
பிகு : பின்னூட்டத்தில் வந்து லாலுவின் குறைகளை வரிசையாக அடுக்கப்போகிறவர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். லாலுவை பற்றி நான் தேடிய பொழுது அவரின் மேல் இருக்கும் குற்றசாட்டுகள் தான் ஏராளமாக கிடைத்தது. வி பி சிங் போன்ற ஒரு மனிதரை கடைசி வரை ஆதரித்தவர் என்பதற்காகவே லாலுவின் வரலாறை ஓரளவிற்கு படித்துவிட்டு எழுதிய பதிவு இது. அதனால் லாலுவின் மேல் உள்ள குற்றசாட்டுகளை அடுக்கி உங்களை அறிவாளிகளாக காட்டி கொள்வதற்கு பதில், அவரை விட மத கலவர காலங்களில் மத நல்லிணக்கத்தை முன்னெடுத்த தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டால் அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

கருத்துகள் இல்லை: