வியாழன், 19 மார்ச், 2020

கொரோனா வைரஸ்: அமெரிக்க மக்களுக்கு விரைவில் நற்செய்தி - டிரம்ப் அதிரடி டுவீட்


மாலைமலர் : வாஷிங்டன்: கொரோனா வைரசின் ஊற்றுக்கண் சீனாவின் உகான் மாகாணம் என உலகமே கூறி வரும் நிலையில், அது அமெரிக்காவில் தோன்றியது
என்றும் அமெரிக்க ராணுவம் அதை உகானுக்கு பரவச் செய்தது என்றும் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான் கடந்த வாரம் டுவிட்டரில் பதிவு செய்தார்.
இதையடுத்து வாஷிங்டனில் உள்ள சீன தூதரை அழைத்தும் அமெரிக்கா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவை " சீன வைரஸ் " என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்டின் தலைவர்கள் டிரம்ப்புக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத டிரம்ப் இன்றும் தனது டுவிட்டர் பதிவில் " சீன வைரஸ் "என்றே குறிப்பிட்டுள்ளார்.
இன்று அவர் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள மூன்று பதிவுகளில், ‘மிக முக்கியமான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் ஓட்டல்கள், உணவகங்கள், மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில் வேலையின்றி இருப்பவர்களுக்கு விரைவில் பணம் வந்து சேரும். சீன வைரசின் கடுமையான தாக்குதல் உங்கள் பிழையல்ல; முன்பிருந்ததை விட பலமாக இருப்போம்.


உங்களது சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்புக்கு நான் பாதுகாப்பு அரணாக இருப்பேன். இந்த சீன வைரஸ் தொடர்பாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையிடம் இருந்துவந்த ஒரு முக்கியமான தகவல் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்திப்பேன்.

மற்றவர்களின் விருப்பத்துக்கு எதிராக சீனா நாட்டு எல்லைக்களை மூடியது உள்பட இந்த சீன வைரஸ் தொடர்பாக ஆரம்பத்தில் இருந்தே மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறேன். இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: