ஞாயிறு, 15 மார்ச், 2020

திமுகவில் எ.வ.வேலுவுக்கு புதிய பதவியா?

திமுகவில் எ.வ.வேலுவுக்கு புதிய பதவியா?மின்னம்பலம் : திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைந்ததை ஒட்டி ஒரு வாரம் கட்சி அதிகார பூர்வ துக்கம் அனுசரித்து முடித்தது. திமுக கொடிகள் இன்று (மார்ச் 15) முதல் முழுக் கம்பத்தில் வேகமாக பறக்கின்றன. அந்தக் கொடிகளைப் போலவே அடுத்த பொதுச் செயலாளர் யார், அதை ஒட்டி தலைமைக் கழக நிர்வாகிகளும் மாற்றப்படுவார்களா என்ற விவாதங்களும் கட்சிக்குள் படபடப்பாக பறந்துகொண்டிருக்கின்றன.
மார்ச் 29 ஆம் தேதி அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு என அறிவிக்கப்பட்டிருக்க ... தலைமைக் கழகப் பதவிகளைப் பெற வேண்டும் என்கிற நோக்கில் சில தலைவர்கள் தங்களின் முழு பலத்தையும் தலைமைக்குத் தெரியப்படுத்த முனைந்துகொண்டிருக்கிறார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின் கட்சிப் பதவி முதல் அறிவாலயத்தின் அலுவலகப் பணியாளர்கள் வரை அனைத்தையுமே சீனியாரிட்டி படியே செய்கிறார். இந்த அடிப்படையில் அடுத்த பொதுச் செயலாளராக இப்போதைய உச்ச சீனியர் துரைமுருகன் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக உடன் பிறப்புகளுக்குப் புரிகிறது.
அதேநேரம் துரைமுருகன் பொதுச் செயலாளர் என்றால் அவர் இதுகாறும் வகித்து வரும் பொருளாளர் பதவிக்கு யார் என்ற விவாதம் அடுத்த கட்டமாக தொடங்குகிறது. ஒருபக்கம் விவாதம் என்றால் இன்னொரு பக்கம் பொருளாளார் பதவியை அடைய லாபிகளும் தொடங்கிவிட்டன.
குறிப்பாக எ.வ. வேலுவை பொருளாளர் பதவியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்று சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களே, ‘அடுத்த பொருளாளர் அண்ணன் வேலுதான்’ என்ற கருத்தை நிர்வாகிகளிடம் முன் வைத்து வருகிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் இவைதான்.
“தலைவரின் நிதி விவகாரங்களை வேலுதான் பார்த்துக் கொள்கிறார். அறிவாலயத்தில் கலைஞரின் சிலை திறப்பு நிகழ்வுக்கான செலவையும் வேலுதான் பார்த்துக் கொண்டார். கலைஞர் சமாதியை பராமரிக்கும் செலவு, கலைஞர் தொலைக்காட்சிக்கான செலவையும் கூட வேலுதான் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார்கள். தலைவர் ஸ்டாலினுக்கு நம்பிக்கையானவராக இருக்கிறார். தேர்தல் நேரத்தில் திடீரென ஏற்படும் தேவைகளுக்குக் கூட ‘புரட்டித் தரும்’ நபராக வேலு இருக்கிறார். இது எல்லாவற்றையும் விட தலைவருக்கு நம்பிக்கையானவராக இருக்கிறார்” என்பதுதான் அந்த மாவட்டச் செயலாளர்கள் வேலுவுக்காக அடுக்கும் காரணங்கள். இந்த கருத்துகள் பரவி இப்போது சீனியர்களும், ‘என்னய்யா வேலுவுக்குதான் கொடுப்பாங்களா?’ என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
தலைமைக் கழக நிர்வாகிகள் மத்தியில் இதுகுறித்து விசாரித்தால், “வேலுதான் அடுத்த பொருளாளர் என்று பத்துக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் என்றில்லை, இன்னும் அதிகமான மாசெக்களே பேசுவார்கள். ஏனென்றால் அவர்களை மாசெ ஆக்கியதே வேலுதானே... திமுகவில் ஒரு மாவட்டச் செயலாளராக இருக்கும் வேலு பல மாவட்டங்களுக்கு தனக்கு விருப்பமானவர்களை மாவட்டச் செயலாளராகக் கொண்டுவரும் அளவுக்கு செல்வாக்கோடு இருக்கிறார். சக நிர்வாகிகளிடம் சொல்வது மாதிரியே சில மாவட்டச் செயலாளர்கள் தலைவர் ஸ்டாலினிடமும் வேலுவை பற்றி சொல்லியிருக்கிறார்கள். அதை அவர் கேட்டுக் கொண்டாரே தவிர, பதிலேதும் சொல்லவில்லை.
வேலுவுக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் கட்சியின் முதல் மூன்று பெரும் பொறுப்புகளான தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியவற்றை வெளிக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு தரலாமா என்பது ஒரு பெரும் கேள்வியாக முன் நிற்கிறது. எ.வ.வேலு தலைவருக்கு நம்பகமானவர்தான். ஆனால் அதிமுகவில் இருந்து வந்தவருக்கு பொருளாளர் பதவியா என்ற கேள்வி சக நிர்வாகிகளிடையே ஏற்பட்டு அது சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கட்சியில் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்று எண்ணுகிறார் ஸ்டாலின்.
அதேநேரம் வேலுவுக்காக இன்னொரு மாற்று ஏற்பாடும் நடந்து வருகிறது. இப்போதைக்கு வேலுவை தலைமைக் கழக நிர்வாகியாக நியமிக்க வேண்டும். அதனால் அவரை துணைப் பொதுச் செயலாளராகக் கொண்டுவரலாம். அதன் பின்னால் மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு கருத்துரு அறிவாலய ஆலோசனையில் இருக்கிறது” என்கிறார்கள்.
-வேந்தன்</

கருத்துகள் இல்லை: