வியாழன், 12 டிசம்பர், 2019

குடியுரிமை சட்ட வரைவை எதிர்க்கும் தமிழக எம்.பிக்களின் வாதங்கள்! CAB

குடியுரிமை மசோதாvikatan.com - மோகன் இ : குடியுரிமைச் சட்டத்திருத்த வரைவுக்கு  அ.தி.மு.க தவிர தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள் இந்த மசோதாவை எதிர்த்துப் பேசியுள்ளனர். குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழர்களின் குரல் வலுவாக ஒலித்துள்ளது.
மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்,
"சிறுபான்மையினரின் உரிமையைப் பாதுகாப்பதில்தான் பெரும்பான்மை சமூகத்தின் பெருந்தன்மை அடங்கியிருக்கிறது என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார். பெரும்பான்மை என்கிற பெயரில் சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவது ஜனநாயகத்துக்கு புறம்பானது மட்டுமல்ல, பாசிசப் போக்கு. நம்முடைய தேசம் பாசிசத்தை நோக்கி நகர்கிறது என்பதற்குச் சான்றாக இந்தச் சட்டத்திருத்த மசோதா விளங்குகிறது. குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் விலக்கிவைத்து அவர்களுக்கு இங்கே இடமில்லை எனச் சொல்வது பாசிசத்தின் உச்சம். அடைக்கலம் தேடி வருபவர்களை அரவணைப்பதுதான் மனித நாகரிகத்தின், மனித நேயத்தின் உச்சமாகும்.

ஒரு மனிதன் வீடு இல்லாமல் வாழலாம். ஆனால் நாடு இல்லாமல் வாழலாமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அப்படி நாடற்றவர்களாக வந்த அனைவருக்குமே குடியுரிமை வழங்குவதுதான் ஆள்வோருக்கான நாகரிகமாக இருக்க முடியும். ஆனால், அரசு வெளிப்படையாகக் குறிப்பிட்டு இஸ்லாமியர்களை விலக்கி வைப்பது அநாகரிகமான போக்கு. மூன்று நாடுகளிலிருந்து வந்தவர்களில் இஸ்லாமியரைத் தவிர மற்றவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொள்வோம் என்று அறிவித்திருக்கிறார்கள். இது ஜனநாயக விரோதமானது. இலங்கைத் தமிழர்கள் 1,00,000 பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். உங்கள் மொழியில் சொன்னால், அவர்கள் இந்துக்கள்தான். அவர்கள் தமிழர்கள் என்பதால் குடியுரிமை தரவில்லை. இது தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் விரோதமான மசோதா'' என்றார்.
மக்களவையில் சி.பி.எம் எம்.பி சு.வெங்கடேசன் பேசுகையில், "இந்தியாவை அலைக்கழிக்கப்போகிற கொடிய சட்டம் இது. மதச்சார்பற்ற நாடு மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க முடியாது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியா தன்னுடைய மனிதாபிமான கோட்பாட்டை அதிகாரபூர்வமாகக் கைவிடுகிற நாளாக இருக்கும். மதம் மட்டும்தான் ஒடுக்குப்படுவதற்கான கருவியா. மலாலா ஏன் துரத்தப்பட்டார் என்பதை உலகறியும். வன்முறைக்கு மதம் மட்டுமே காரணம் கிடையாது. மத நம்பிக்கையற்ற ஆத்திகர்களுக்கு இந்தச் சட்டம் என்ன சொல்கிறது. இந்தியாவிலே பிறந்து வளர்ந்த இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? இந்தச் சட்டம் முஸ்லிம்கள், தமிழர்களுக்கு எதிரானது. இந்தச் சட்டம் அண்டை நாட்டிலுள்ள இந்துக்களுக்கு அழைப்பையும், உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலையும் அவமானத்தையும் தருகிறது" என்றார். மக்களவையில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பேசுகையில், "இந்த மசோதா இந்திய அரசியலமைப்பின் முகப்புரைக்கு எதிராகவே உள்ளது. உங்களுக்குப் பெரும்பான்மை இருக்கலாம். ஆனால், தெற்கு உங்களை நிராகரித்துள்ளது. தெற்கும் வடக்கும் வேறு வேறாகச் சிந்திக்கிறது. சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு நீங்கள் எதுவுமே செய்தது கிடையாது. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு. இந்த மசோதா இந்தியா முழுமைக்குமானதல்ல. நீங்கள் வட இந்தியாவுக்கான உள்துறை அமைச்சராக செயல்படுகிறீர்கள். இலங்கைத் தமிழர்களை நீங்கள் புறக்கணித்துள்ளீர்கள்.
மத்திய அரசு, பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள 1,082 மக்களுக்கு குடியுரிமை வழங்கவிருக்கிறது. ஆனால், இலங்கையிலிருந்து வந்த 13 பேருக்கு மட்டுமே வழங்கவிருக்கிறது. 30 ஆண்டுகளாக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு என்ன செய்யப்போகிறீர்கள். முஸ்லிமாக இருப்பது குற்றமா?
உங்களின் தேர்தல் அறிக்கையில் கிறிஸ்துவர்களை சேர்க்கவில்லை. ஆனால், தற்போது மசோதாவில் கிறிஸ்துவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குலக நாடுகளைக் கவனத்தில் வைத்துதான் இதைச் செய்துள்ளீர்கள். முஸ்லிம்களைக் குறிவைத்து நீங்கள் இதைச் செய்துள்ளீர்கள். நாம் ஏன் பாகிஸ்தானைப் பின்பற்ற வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை பிரதமர் மோடி ஐ.நா-வில் பேசினார். ஆனால், உள்துறை அமைச்சர் அதற்கு எதிராகச் செயல்படுகிறார். 2014-லிருந்து சிறுபான்மையினர் தொடர் அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றனர். சிறுபான்மையினர் நலன் பற்றி நீங்கள் பேசினால் சாத்தான் வேதம் ஓதுவதைப் போலதான் மக்கள் உணர்கின்றனர்" என்றார். மாநிலங்களவையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், "இந்தியாவின் குடியுரிமைச் சட்டம் பிறப்பு, பூர்வீகம், பதிவு மற்றும் இயல்புரிமையின் அடிப்படையில் குடியுரிமை வழங்குகிறது. இதுதான் சர்வதேச நடைமுறை. இப்போது அரசு சட்டவிரோதமான மசோதாவை நிறைவேற்ற இந்த நாடாளுமன்றத்தைக் கேட்கிறது. இந்த மசோதா எப்படியும் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிந்துமே இந்தச் சட்டத்தை அவர்களுடைய இந்துத்துவ கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல நிறைவேற்றுகின்றனர்.
இந்தச் சட்டம் நிச்சயம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும். மூன்று நாடுகளை மட்டும் எப்படித் தேர்வு செய்தார்கள், ஆறு மதங்களை மட்டும் தேர்வு செய்தார்கள். இலங்கை இந்துக்கள், பூடான் கிறிஸ்துவர்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். மதம் மட்டும் ஏன் அடிப்படை. மக்கள் மற்ற காரணங்களுக்காகவும் ஒடுக்குமுறையை எதிர்கொள்கிறார்கள். இங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசில் யார் பதிலளிப்பார்கள். இந்தச் சட்டம் வெளிப்படையாக அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவை மீறியுள்ளது. சட்டத்துறையைச் சேர்ந்தவர்களையோ, அட்டர்னி ஜெனரலையோ நாடாளுமன்றத்துக்கு அழைத்து பேச வைக்க வேண்டுமென இந்த அரசுக்கு சவால்விடுகிறேன்" என்றார். மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், "பன்மைத்துவ, சமத்துவ, ஜனநாயக இந்தியாவில் ஒரு மதத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். சிறுபான்மையினர் நலனுக்காக நீங்கள் எதுவுமே செய்யவில்லை. குடியுரிமை என்பது நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சம். இது மதச்சார்பின்மைக்கு எதிரானது. ஆப்கானிஸ்தான் ஒன்றுபட்ட இந்தியாவின் ஒருபகுதி கிடையாது. மூன்று நாடுகளை மட்டும் தேர்வு செய்து மற்ற நாடுகளைத் தவிர்த்ததற்கு எந்தக் காரணமும் கிடையாது. இது மக்களைப் பிளவுபடுத்துவதற்கான கருவியாகவே எங்களுக்குப்படுகிறது. இலங்கையிலிருந்து 1940-களில் இருந்தே தமிழர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். குடியுரிமை இல்லாமல் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவர்களை ஏன் இதில் புறக்கணித்துள்ளனர். இது மதச்சார்பின்மையின் மீதான தாக்குதல்" என்றார். மாநிலங்களையில் ம.தி.மு.க தலைவர் வைகோ பேசுகையில், "இந்தச் சட்டவிரோதமான மசோதா நிறைவேற்றப்பட்டால் அது வரலாற்றில் கறுப்பு நாளாகப் பதிவு செய்யப்படும். அண்டையிலுள்ள மூன்று நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களைத் தவிர்த்து மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க அரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனால், மியான்மரிலிருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம்களை, இலங்கையிலிருந்து வந்த தமிழர்களை, பாகிஸ்தானின் ஷியா, அஹமதியா முஸ்லிம்களை விலக்கி வைத்திருக்கிறது. இது சமத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இந்தச் சட்டத்திருத்தத்தைக் கண்டித்து பல அறிஞர்களும் திறந்த மடல் எழுதியுள்ளனர். அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் அடிப்படை, இந்த மசோதா இந்தியாவின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிராக உள்ளது. முஸ்லிம்களை மட்டும் விலக்கி வைத்திருப்பது பன்முகத்தன்மைக்கு எதிரானது. இந்த அரசு வேண்டுமென்றே ஈழத்தமிழர்களை விலக்கியுள்ளது. இந்த மசோதா வங்கக்கடலில் தூக்கியெறியப்பட வேண்டும்" என்றார். /div>

கருத்துகள் இல்லை: