வியாழன், 12 டிசம்பர், 2019

பங்களதேச அமைச்சரின் இந்திய வருகை நிறுத்தம் - ராஜதந்திர உறவுகளில் விரிசல் ..?


.tamil.oneindia.com - veerakumaran : டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தனது இரண்டு நாள் இந்திய, அரசுமுறை சுற்றுப் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் நிறைவேறியுள்ளன. இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து, அங்கு மத ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு, 2014ம் ஆண்டு டிசம்பர் 31க்கு முன்புவரை இந்தியா வந்துள்ள இந்து, சீக்கிய, பவுத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள், இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

இந்த பட்டியலில் முஸ்லீம்களுக்கு இடமில்லை. இது வடகிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக திரிபுரா மற்றும் அசாமில், பூர்வீக அடையாளத்தை நசுக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பெரிய போராட்டங்களுக்கு காரணமாகியுள்ளது.

வங்கதேசமும், சிறுபான்மையினரை துன்புறுத்துவதாக இந்தியா கூறிய குற்றச்சாட்டுகளை நிராகரித்தது, வெளியுறவுத்துறை அமைச்சர் மோமன் அளித்த பேட்டியில் "வங்கதேசத்தில் சிறுபான்மையினர் அடக்குமுறைக்குள்ளாகுவதாக குற்றச்சாட்டுகளை இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இது, பொய்யானது. அவர்களுக்கு யார் தகவல் கொடுத்திருந்தாலும் அது சரியானதல்ல" என்று குறிப்பிட்டார்.தவறான குற்றச்சாட்டு.. பயமாக உள்ளது.. குடியுரிமை மசோதாவை விமர்சிக்கும் வங்கதேசம்.. உறவில் விரிசலா?



இருதரப்பு உறவுகளின் "பொற்காலம்" என்று அழைக்கப்படும் அளவுக்கு, வங்கதேசமும், இந்தியாவும் தற்போது நெருக்கமான நட்பு உறவுகளை அனுபவித்து வருகின்றன, எனவே, இயல்பாகவே எங்கள் மக்கள், இந்தியா, கவலையை ஏற்படுத்தும் எதையும் செய்ய மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றும் மோமன் கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான், மோனனின் இந்திய வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இரு நாட்டு உறவுகளிடையே பிணக்கை ஏற்படுத்தியதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: