வியாழன், 19 டிசம்பர், 2019

எட்டு வயதில் அகதியாக இலங்கையில் இருந்து .. ஜெர்மனில் புகழ் பெற்ற இருதய மாற்று வைத்திய....

ஜெர்மன் அதிபர் -உமா மகேஸ்வரன் - ஜெர்மன் அமைச்சர்
பாண்டியன் சுந்தரம் : இலங்கை உள்நாட்டுப் போரில் அகதியாக
ஜெர்மனிக்குச் சென்று இன்று டாக்டராகி சாதனை படைத்த உமேஸ்வரன்: 'நான் பார்ப்பதற்குத்தான் வேறொரு நாட்டைச் சேர்ந்தனாகத் தெரிகிறேன்; ஆனால், உள்ளுக்குள்ளே ஜெர்மானியன்!'
ஓரடி ஏறினால் இரண்டடி கீழே சறுக்கி விடும் வாழ்க்கைப் பயணத்தில் மனம் சோராமல் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற்றோர் மிகச் சிலரே. அவர்களில்
ஒருவர்தான் இலங்கை நாட்டில் இருந்து ஜெர்மன் நாட்டுக்குப் புலம்பெயர்ந்து அந்த நாட்டின் தலைசிறந்த இதய மாற்று அறுவை சிகிச்சை மருத்துவராக இன்று புகழ் பெற்று விளங்கும் உமேஸ்வரன் அருணகிரிநாதன்!
உமேஸ்வரன் இலங்கை யாழ்ப்பாணத்தை அடுத்த புத்தூரில் பிறந்தவர்.ஐந்து குழந்தைகள் உள்ள குடும்பத்தில் இரண்டாவதாகப் பிறந்தவர் இவர். தாய், தந்தை, ஒரு அக்கா, இரு தங்கைகள், ஒரு தம்பி என உமேஸ்வரன் வறுமையிலும் மகிழ்ச்சியான குடும்பச் சூழலில் வாழ்ந்து வந்தார்.
எட்டு வயதுச் சிறுவனாக உமேஸ்வரன் இருந்தபோது, முதல் முறையாக இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒருவரைப் பார்க்கக் குடும்பமே சென்றிருந்தது. வீட்டுக்கு அருகே நடந்த தாக்குதல் அது. சிறுவன் உமேஸ்வரன் அதிர்ச்சி அடைவான் என்று அவனது கண்களை அம்மா மூடிக்கொண்டார்.அதையும் மீறி கண்களைக் கொஞ்சமாகத் திறந்து படுகாயங்களுடன் மரணித்திருந்த அந்த மனிதனைப் பார்த்தான் சிறுவன் உமேஸ்வரன்.

"அன்றைய தினம் நான் முதன் முதல் அதிர்ச்சி அடைந்தேன். அந்தக் காட்சி மனதில் தோன்றும் போதெல்லாம் உடல் முழுவதும் வியர்வையில் நனைகிறது; தூங்கா இரவுகளாக துயரம் நீடிக்கிறது; பயம் படருகிறது" என்று உள்நாட்டுப் போரின் துயரத்தை உணர்ந்த நாள் குறித்து உமேஸ்வரன் இன்று கலங்குகிறார்.
போரின் போது இலங்கை ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களை பொதுவாக மக்கள் முதலை என்று அழைப்பார்கள். உமேஸ்வரனுக்கு அப்போது வயது பத்து. குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வளைத்த ராணுவம் முதலைகளைக் கொண்டு குண்டு மழையைப் பொழிந்து இருக்கிறது.
முதலையை முதன் முதலில் பார்த்த உமேஸ்வரன் அம்மா, பாதுகாப்புக்காக ‌ஐந்து குழந்தைகளையும் வீட்டருகே இருந்த ஒரு மரத்தின் கீழ் தனித்தனியே அமர வைத்தார்.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. அந்த நிலையில், ஒரு சிறுநீரகம் செயலிழந்த நிலையில் போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க வசதி இல்லாததால் உமேஸ்வரன் அக்கா உயிரிழந்து போனார். அந்தச் சின்னஞ்சிறு பாலகியின் மறைவு குடும்பத்தையே மிகுந்த கலக்கத்தில் ஆழ்த்தியது. அப்போது, அடுத்த குழந்தையாகிய உமேஸ்வரனைப் பார்த்து 'நீ நல்லா படிச்சு டாக்டர் ஆகணும். அப்பதான் எந்தக் குடும்பத்திலும் இந்த மாதிரி நடக்காம பாத்துக்கலாம்' என்று அம்மா கூறினார். இது உமேஸ்வரன் மனதில் ஆழப் பதிந்தது.
அப்போதுஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் உமேஸ்வரன். ஆசிரியர்கள் போர் சூழலில் பெரும்பாலும் பள்ளிக்கு வர மாட்டார்கள். அப்படி வரும் நாட்களிலும் உமேஸ்வரன் பெற்றோர் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப பயந்தார்கள். அதனால் குழந்தைகளின் படிப்பு தடைப்பட்டது. குடும்பம் வறுமையில் சிக்கித் தத்தளித்தது. மண்ணெண்ணெயை மொத்தமாக வாங்கி சில்லறையாக விற்று லாபத்தை குடும்பத்திற்குக் கொடுத்து உதவி வந்தார் உமேஸ்வரன்.
12 வயதை எட்டிய உமேஸ்வரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்துவிடுவானோ என்ற அச்சம் தாயாருக்கு ஏற்பட்டது. எனவே உமேஸ்வரனை ஜெர்மனிக்கு எப்படியாவது அனுப்பி விட வேண்டுமென விரும்பினார்.
ஜெர்மனிக்குக் கொழும்பிலிருந்துதான் செல்ல முடியும்.அம்மாவும் உமேஸ்வரனும் யாழ்ப்பாணம் புத்தூரிலிருந்து நடந்தும், லாரி, பேருந்து, ரயில் போன்றவற்றின் வழியாகவும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதிகளையும், ராணுவத்தின் பரிசோதனைகளையும் கடந்து எட்டு நாட்களில் கொழும்பைச் சென்று சேர்ந்தனர்.
தங்குவதற்கு வீடில்லை. எனவே வாகன நிறுத்துமிடத்தில் தங்கிக் கொண்டார்கள். ஜெர்மனிக்கு அழைத்துச் செல்வதற்கு கடவுச்சீட்டு, அதற்கு உதவும் முகவர் இவற்றை இறுதி செய்வதற்கும், உமேஸ்வரன் வருகை குறித்து ஜெர்மனியில் இருக்கும் தம்பியிடம் இசைவுபெறுவதற்கு ஆறு மாதங்களாகி விட்டது.
அன்று அதிகாலையிலேயே உமேஸ்வரன் அம்மாவால் எழுப்பி விடப்பட்டார். "நீ வெளிநாடு போகப் போகிறாய்" எனக் கூறப்பட்டார். "அம்மா நீயும் தானே?" என்று கேட்டார் உமேஸ்வரன். "நான் இல்லை.நீ மட்டும் தான்" என்று அம்மா கூற, அழத் தொடங்கிவிட்டார் உமேஸ்வரன். அம்மா உடனடியாக அவரை சமாதானப்படுத்தி, "எக்காரணம் கொண்டும் நீ செல்லும் ரகசியம் யாருக்கும் தெரியக் கூடாது, குடிப்பழக்கத்துக்கு எந்த நிலையிலும் ஆளாகக் கூடாது. நன்றாகப் படித்து டாக்டராக வேண்டும். எனது கனவுகளை நீ நிறைவேற்றுவாய் தானே?" என்று தனது விருப்பங்களைப் பட்டியலிட்டார்.
12 வயதில் கண்ணீருடன் இலங்கையிலிருந்து தன்னந்தனியாக புறப்பட்டார் உமேஸ்வரன். ஆனால் ஜெர்மனியை நோக்கிய அவரது பயணம் முடிவடைவதற்கோ ஆறு மாதங்களாகி விட்டது. முன்பின் அறிமுகமில்லாத பத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுடன் முதலில் கொழும்புவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றார் அவர். இரண்டு வாரங்களுக்கு ஒரே அறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தார் அங்கிருந்து, துபாய் வழியாக கானா நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கானாவுக்குள் வந்திறங்கி, தன்னைவிட கருப்பான மக்களைப் பார்த்தவுடன் உமேஸ்வரனுக்கு நிரம்பவும் மகிழ்ச்சியாகி விட்டது. சிறு பிராயத்திலிருந்தே 'தான்தான் ரொம்பக் கருப்பு' என்று நினைத்திருந்த நிலையில், நம்மை விடவும் மிகவும் கருப்பாக உலகில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி உற்றார் உமேஸ்வரன்.
கானாவில் உமேஸ்வரன், ஒரே இடத்தில் மூன்று மாதங்களுக்கு மேலாக இருந்தார்.பின் அருகிலுள்ள டோகோ நாட்டிற்குக் கானாவின் எல்லை வழியே சட்டவிரோதமாக முகவர் செல்லுமாறு கூறினார்.அதன் பிறகு அங்கிருந்து மீண்டும் ஒரு மாதம் கழித்து பழைய இடத்திற்கே வந்து விட்டார் உமேஸ்வரன்.
காத்திருப்பு நேரம் அதிகமாகவே, ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டும்தான் உணவு வழங்க முடியுமென்று முகவர் கூறிவிட்டார்.உமேஸ்வரன் பசியோடு தவித்தது ஒரு புறமிருக்க, தன் தாய், தந்தை, தம்பி, தங்கைகள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது கூடத் தெரியாமல் பரிதவித்தார். இந்நிலையில், முகவர்களால் மீண்டும் அங்கிருந்து நைஜீரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் சுமார் இரண்டு வாரகாலம் இருந்தார் உமேஸ்வரன். பின்பு போலி விசா மூலம் ஸ்பெயின் வழியாக ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரைச் சென்றடைந்தார்.
அதே விசாவுடன் ஜெர்மனியில் தரையிறங்கினால் பிரச்னைகள் ஏற்படும் என முகவர் சொன்னார். அந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கைத் தமிழர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கழிவறைக்குச் சென்று தங்களின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களைக் கிழித்துப் போட்டுவிட்டு வந்தார்கள்.உமேஸ்வரனும் அவ்வாறே செய்தார்.
கடவுச் சீட்டைக் கிழித்துப் போட்டவுடன், ஜெர்மனியில் தரையிறங்கியதும், 'உண்மையான பெயரை எக்காரணம் கொண்டும் வெளியே சொல்லக் கூடாது' என்று முகவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். அதனை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு, பிராங்க்பர்ட் விமான நிலையம் வந்தடைந்தவுடன், இதரப் பயணிகளைப் போல வெளியேறினார் உமேஸ்வரன். விமான நிலையத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியே சென்றுவிடலாம் என்று அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் திட்டமிட்டிருந்த நிலையில், தன்னையே அறியாமல் நன்றாகத் தூங்கிவிட்டார் உமேஸ்வரன்.
தூங்கி எழுந்து பார்த்தால், ஜெர்மனிய காவல்துறை அதிகாரி ஒருவரும், மொழிபெயர்ப்பாளராக தமிழர் ஒருவரும் முன்னே நின்று கொண்டு இருந்தனர். மிகவும் பணிவாக விசாரித்த அவர்களிடம் பெயர் உள்ளிட்ட சில விவரங்களின் ரகசியத்தைக் காத்தாலும், தன்னுடைய அவலநிலையை எடுத்துக் கூறினார் 13 வயது உமேஸ்வரன்.
அந்தக் காவல்துறை அதிகாரி புன்னகைத்தபடி, சாக்லேட் ஒன்றை நீட்டினார். பிறகு, சிறுவர்களை வைத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று, பீட்சா போன்ற உணவுகளைத் தந்தார். வாழ்க்கையிலேயே முதன் முறையாக அப்போதுதான் பீட்சாவை சாப்பிட்டுப் பார்த்தார் உமேஸ்வரன்.
ஜெர்மனியில் இருக்கும் மாமாவின் அலைபேசி எண்ணை விமான நிலைய அதிகாரிகளிடம் கொடுக்க, அவரை வரவழைத்து தகுந்த ஆவணங்களை சரிபார்த்த பின், அவரது வீட்டிற்கு உமேஸ்வரன் அனுப்பி வைக்கப்பட்டார்.
தமிழைத் தவிர்த்து வேறெந்த மொழியையும் அப்போது அறியாதவராக இருந்தார் உமேஸ்வரன்.ஜெர்மன் மொழி பெரும்பான்மையாக இருக்கும் அந்நாட்டிற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்வதற்காக ஆறு மாதங்கள் ஜெர்மன் மொழிப் பயிற்சியைப் பெற்ற பிறகு, நேரடியாக ஏழாவது வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஜெர்மன் மொழியோடு அங்குள்ள மக்கள், அவர்களது வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள், உணவு முறை போன்றவற்றைப் படிப்படியாகக் கற்றுக்கொண்டு வந்தார் உமேஸ்வரன்.
9-ஆம் வகுப்பு படிக்கும்போது ஜெர்மன் மொழியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உரையாட கற்றுக்கொண்ட சமயத்தில், அந்த வகுப்பிற்கான மாணவத் தலைவனைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டது. "இலங்கையில் ஆறாம் வகுப்பு வரை படித்த நான் வகுப்பின் மாணவத் தலைவனாகச் செயல்பட்டேன். அதே போன்று, இங்கேயும் இருக்க விரும்புகிறேன்" என்று தெரிவிக்க, வகுப்பின் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமின்றி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்தப் பள்ளியின் தலைவனாகவும் தேர்வானார் உமேஸ்வரன்.
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அம்மா சொன்னபடி வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இருந்த நிலையில், பத்தாம் வகுப்பு படித்து முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று ஜெர்மன் அரசிடமிருந்து உத்தரவு வந்ததைக் கண்டு அதிர்ந்து போனார் உமேஸ்வரன். மொட்டை மாடிக்குச் சென்று, தற்கொலை செய்துகொள்ள எண்ணினார்.
அம்மா பட்ட பாட்டையும், ஜெர்மனியை வந்து சேர தான் பட்ட வேதனைகளையும் நினைத்துப் பார்த்தார். மறுநாள் பள்ளிக்குச் சென்று அனைவரிடமும் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார். அதைத்தொடர்ந்து, பள்ளியில் அவருடன் படித்தவர்கள், ஆசிரியர்கள் என பலரும் இணைந்து பணம் திரட்டி, அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அனைவரும் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை ஜெர்மனியில் இருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஹம்பர்க் நகர மாணவத் தலைவர்கள் குழுவில் ஒருவராக இருந்த உமேஸ்வரனை, அம்மாகாணத்தின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்தனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டவர், தன் வாழ்க்கைப் பயணத்தை விளக்கியதுடன், தான் ஜெர்மனிலேயே இருப்பதற்கான அனுமதியை அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
உமேஸ்வரனது கண்ணீர் மல்கும் உரையைக் கேட்டவர்கள், அவரைத் தொடர்ந்து ஜெர்மனிலேயே தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் ஒருபகுதியாக, பள்ளிப்படிப்பை முடித்த அவரது கனவான மருத்துவத்தில் சேர்ப்பதற்கு உதவினார்கள். பின் அவரைத் தற்காலிகமாக டென்மார்க் அனுப்பி, அங்கிருந்து பல்கலைக்கழகப் படிப்பைப் படிப்பதற்காக மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்க வைத்தனர்.அவரை மீண்டும் ஜெர்மனிக்கு வரவழைப்பது வரையிலான பல்வேறு உதவிகளை ஆசிரியர் ஒருவர் தானே முன்னின்று செய்தார்.
1999-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பைத் தொடங்கினார் உமேஸ்வரன். படிப்பு, தங்குமிட செலவு, இலங்கையில் வாழும் தன் குடும்பத்தினருக்கு உதவி செய்வது வரை அனைத்திற்கும் தேவையான பணத்தை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டே பகுதிநேரமாக வேலை செய்து சம்பாதித்தார்.படிப்பின் கடைசி ஆறு ஆண்டுகள், படித்த பல்கலைக்கழகத்திலேயே பகுதிநேரமாக பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது.பகல் முழுவதும் படிப்பு, இரவுநேரத்தில் வேலை என்று இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ததால், ஆறாண்டுகளில் முடிக்க வேண்டிய படிப்பு இழுத்துக் கொண்டே போய் எட்டாண்டுகளில்தான் முடிக்க முடிந்தது.
அதன் பிறகு, இருதய அறுவை சிகிச்சை நிபுணருக்கான பயிற்சியை கடந்த பதினோரு ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தவர்,பல்வேறு தடைகளையும் தாண்டி, 2019 மே மாதத் தொடக்கத்தில் தனது பட்டத்தைப் பெற்றார். "இதன் மூலம் எனது அம்மாவின் கனவு மட்டுமின்றி, எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரின் கனவும் நிறைவேற்றியுள்ளது" என்று பெருமையுடன் கூறுகிறார் உமேஸ்வரன்அருணகிரிநாதன். தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாக வைத்து, உமேஸ்வரன் இதுவரை இரண்டு புத்தகங்களை ஜெர்மானிய மொழியில் எழுதியுள்ளார்.அதைப் பற்றி சொல்கிறார்...
"மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற எனது புத்தகங்கள் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நான் பேசினேன். அதைக் கேட்ட ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சர், அந்நாட்டு அதிபர் தலைமையில் நடைபெறும் அகதிகள் தொடர்பான நிகழ்ச்சியில் என்னை கலந்து கொண்டு சிறப்புரை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்."
"அதன்படி, சென்ற ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான விழாவில், 'நான் பார்ப்பதற்குதான் வேறொரு நாட்டைச் சேர்ந்தனாகத் தெரிகிறேன்; ஆனால், உள்ளுக்குள்ளே நான் ஜெர்மானியன்; அது என்னுடன் பழகினால்தான் தெரியும்' என்ற பொருளை உதாரணத்துடன் விளக்கினேன். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், என்னிடம் பேசிய ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல், என்னை வெகுவாகப் பாராட்டினார்."
இவரது அம்மா, இரு தங்கைகள் மற்றும் ஒரு தம்பியை நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விட்டார் இப்போது; தற்போது அவர்கள் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் குடிமகன்களாக உள்ளனர். அம்மாவை இலங்கையிலிருந்து கிளம்பிய 15 ஆண்டுகளுக்குப் பிறகு சகோதர, சகோதரிகளுடன் சேர்த்து 2005-ஆம் ஆண்டுதான் லண்டனில் சந்திக்க முடிந்தது உமேஸ்வரனால். தந்தை இயற்கை எய்தி இருந்தார். அம்மா மட்டும் தற்போதும் இலங்கையிலே வசித்து வருகிறார்! எல்லோரையும் ஏற்றிவிடும் ஏணி; ஆனால் அது இருப்பது அங்கேயே தானே?

கருத்துகள் இல்லை: