சனி, 21 டிசம்பர், 2019

: 'தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற டி.செல்வராஜ் காலமானார்:

பாண்டியன் சுந்தரம் : 'தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற
டி.செல்வராஜ் காலமானார்: "சாகித்திய அகாதமி விருதைப் பெற்றவர்களுக்கு தமிழக நூலகங்களில் அங்கீகாரம் இல்லை" என்று வருத்தம் தெரிவித்தவர் இவர்!
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் டி. செல்வராஜ் உடல் நலக் குறைவு காரணமாக நேற்றிரவு (20-12-2019) காலமானார்! கடந்த பல ஆண்டுகளாக திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியிலுள்ள பன்றிமலை சுவாமிகள் தெருவில் வசித்து வந்தார்.
“மலரும் சருகும்” நாவல் வழி தமிழ் இலக்கிய உலகிற்குப் பரவலான அறிமுகத்தைப் பெற்ற டி.செல்வராஜ், திருநெல்வேலி மாவட்டத்தின் தாழையூத்தை அடுத்த தென்கலம் என்னும் சிற்றூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அதனை ஒட்டியுள்ள மாவடி கிராமத்தில் டேனியல் - ஞானம்மாள் தம்பதியினருக்கு 14-1-1938 அன்று மகனாகப் பிறந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் மூதாதையர்கள், தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணிகளாக இருந்தனர். திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தான அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்று, நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் (1959) பி.ஏ. பொருளாதாரம் பயின்றார். சென்னைச் சட்டக்கல்லூரியில் (1962) இளநிலை சட்டம் பயின்றார்.
கல்லூரியில் படிக்கின்ற காலகட்டங்களில் இடதுசாரி அரசியல் இயக்கத்தோடு தொடர்பு கொண்ட இவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.
தோழர் ப.ஜீவானந்தத்திற்கு நெருக்கமாக இருந்த டி.செல்வராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான ‘ஜனசக்தி’யில் சில காலம் பணியாற்றினார். அந்த இதழில் அவரது முதல் சிறுகதை வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து சாந்தி, சரஸ்வதி, தேசாபிமானி (இலங்கை), பிரசண்டவிகடன், நீதி, சிகரம், தாமரை, செம்மலர், தீபம் ஆகிய இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. ‘இடதுசாரி இயக்கச் சார்புடைய இளம் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்ந்தார். பாட்டாளி மக்களின், குறிப்பாக, பள்ளர் சமூகத்தைச் சார்ந்த விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையினைத் திறம்படத் தமது கதைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்’ என்று செக் நாட்டுத் தமிழறிஞர் கமில்சுவலபில் தனது ‘தமிழிலக்கிய வரலாறு’ நூலில் குறிப்பிட்டுள்ளார் (1973).
நோன்பு (1960) டி.செல்வராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும். டி.செல்வராஜ் கதைகள் என்னும் இரண்டாவது தொகுப்பு (1994) கிறித்துவ இலக்கியச் சங்கம் வாயிலாக வெளிவந்தது. நிழல் யுத்தம் (1995) அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாகும். டி.செல்வராஜ் 200-க்கும் மேற்பட்ட சிறு கதைகளை எழுதியுள்ளார். சிறுகதைகள் மட்டுமின்றி 70-க்கும் மேலான நாடகங்களையும், ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது யுகசங்கமம் (1968), பாட்டு முடியும் முன்னே ஆகிய இரண்டு நாடகங்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இடதுசாரி இயக்க மேடைகளில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. என்.என். கண்ணப்பா, டி.கே. பாலச்சந்தர் உள்ளிட்ட புகழ்பெற்ற நாடகக் கலைஞர்கள் அவற்றில் நடித்துள்ளனர்.
தமிழில் தொழிலாளர் (நெசவாளர்) வாழ்க்கையினை முதன்முதலில் படம் பிடித்துக்காட்டிய நாவல், தொ.மு.சி ரகுநாதனின் பஞ்சும் பசியும் (1953) ஆகும். தமிழில் வெளிவந்த முதல் சோஷலிச எதார்த்தவாத நாவல் இதுவாகும். இதனை அடியொற்றி நிலத்தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையினைச் சித்திரித்துக் காட்டிய நாவல் டி.செல்வராஜின் மலரும் சருகும் (1967) என்பதாகக் கைலாசபதி உட்பட பல திறனாய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
இந்நாவல் நெல்லை மாவட்டத்தில் இந்திய விடுதலைக்குப் பின் நடைபெற்ற ‘கள்ளமரக்கால்’ ஒழிப்புப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நிலத்தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியைக் காட்டியுள்ளது. இதன் பின்னர் தேவிகுளம், பீர்மேடு, மூணாற்றில் வாழும் காப்பி, தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னல்களையும் போராட்டத்தினால் ஏற்பட்ட மாற்றங்களையும் தேநீர் (1976) நாவல் வாயிலாக டி.செல்வராஜ் எடுத்துக்காட்டி உள்ளார். இவரது தேனீர் நாவல் இயக்குனர் ஜெயபாரதியால் 'ஊமை ஜனங்கள்' என்ற பெயரில் படமாக்கப்பட்டது.
விடுதலைக்குப்பின் நடுத்தர வர்க்கத்தினரின் அகப்புற வாழ்வில் ஏற்பட்ட சிதைவுகளை, மாற்றங்களை எடுத்துக்காட்டும் வகையில் டி.செல்வராஜின் மூலதனம் (1982) வெளிவந்தது. வழக்கறிஞராகப் பணியாற்றிய டி.செல்வராஜின் நீதிமன்ற வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்தும் வகையில் அக்னி குண்டம் (1980) நாவல் எழுதப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திண்டுக்கல் நகரத்திலுள்ள தோல் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையினை எடுத்துக்காட்டும் விதமாக ‘தோல்’ (2010) நாவல் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் எழுதப்பட்ட போலிச்சாமியாரான மெய்ஞ்ஞானச்சித்தர் சுவாமிகள் என்கிற கருப்புத்துரையின் மெய்க்கீர்த்தியை விளக்கும் விதத்தில் பொய்க்கால் குதிரை (2011) என்னும் நாவல் அதற்கு அடுத்த ஆண்டில் வெளிவந்தது. சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்களைத் தாண்டி சாமி. சிதம்பரனார், ப.ஜீவானந்தம் ஆகியோரின் வாழ்க்கைச் சரிதங்களையும் நூல்களாக எழுதியுள்ளார். இவை சாகித்திய அகாதெமியின் வெளியீடுகளாக வெளி வந்துள்ளன.
டி.செல்வராஜ் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஆகிய இடதுசாரி இலக்கிய இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டவர். இவரது யுகசங்கமம் நாடகமும், தோல் நாவலும் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவை. தோல் நாவல் 2012 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றுள்ளது.
‘தோல்’நாவல், திண்டுக்கல் நகரத்திலுள்ள தோல் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையினையும் அப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த இடதுசாரி இயக்கத் தலைவர்களின்1948 முதல் 1953 வரையிலான தலைமறைவு வாழ்க்கையினையும் இரத்தம் தோய
உயிர்ப்புடன் சித்தரிக்கிறது.
‘தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாடெமி விருது பெற்ற டி.செல்வராஜ், இந்த விருதைப் பெற்றவர்களுக்கு நூலகங்களில் அங்கீகாரம் இல்லை என்று வருத்தம் தெரிவித்தவர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10ஆவது மாநாடு மற்றும் கலை இலக்கிய இரவில் கலந்துகொண்டபோது டி.செல்வராஜ் இதைத் தெரிவித்தார்...
"திண்டுக்கல் சூழ்நிலையைப் பற்றி நான் எழுதிய ‘தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாடெமி விருது பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு விருது பெறும் நாவல்களை நூலகங்களில் 5000 பிரதிகளாவது வாங்கவேண்டும். தோல் நாவலை 10 ஆயிரம் பிரதிக்கும் மேல் நூலகங்களில் வாங்குவார்கள் என எதிர்பார்த்தேன்.
ஆனால், இதுவரை ஒரு பிரதி கூட வாங்கவில்லை. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழக அரசு சிறு எழுத்தாளர்கள் முதல் கவிஞர்கள் வரை ஊக்குவிக்க வேண்டும்.
சிறந்த நூல்களை நூலகங்களில் வாங்க ஏற்பாடு செய்யவேண்டும். இம்மாதிரி நூல்கள் வாங்கப்படாததால், எழுத்தாளர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்!"
தமிழ் எழுத்துலகின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக விளங்கிய டி செல்வராஜ் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்!

கருத்துகள் இல்லை: