செவ்வாய், 17 டிசம்பர், 2019

இந்தியா கேட் முன்பு பிரியங்கா: கொல்கத்தாவில் மம்தா பேரணி... வீடியோக்கள்


இந்தியா கேட் முன்பு பிரியங்கா: கொல்கத்தாவில் மம்தா பேரணி!
மின்னம்பலம் :குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கிழக்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா இன்று மாலை திடீரென இந்தியா கேட் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
அகமது படேல், கே.சி.வேணுகோபால், சுஷ்மிதா தேவ் மற்றும் பிற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குழு பிரியங்கா காந்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டது.
"இளம் மாணவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்" என்ற வாசகம் அடங்கிய பதாகையை வைத்துக்கொண்டு மாலை 4 மணி முதல் பிரியங்கா காந்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
”நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகள் மீது அரசு தாக்குதல் நடத்துகிறது. அதனால்தான் பிரியங்கா காந்தி மற்றும் பிற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 2 மணி நேரம் இந்தியா கேட் முன்பு அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர் ”என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

மம்தா பேரணி
கொல்கத்தாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. ரெட் ரோட்டில் உள்ள பாபாசகேப் அம்பேத்கர் சிலையிலிருந்து ஜோராசங்கோ தாகுர்பாரி வரை பேரணியில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணகான திருணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
குடியுரிமை சட்டம் மற்றும் என்ஆர்சி ஆகிய இரண்டுக்கும் மேற்கு வங்கத்தில் இடமில்லை என்று மம்தா கூறிய போது அதனைப் பேரணியில் இருந்தவர்கள் வழிமொழிந்தனர். முன்னதாக பேரணியை மம்தா அறிவித்திருந்த போது அதற்கு அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கார் எதிர்ப்புத் தெரிவித்தார். பேரணிக்கு மம்தா பொறுப்பேற்றது சூழலைக் கொந்தளிப்பாக்கும். இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
ஒரே மேடையில் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் ஒரே மேடையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முதல்வர் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராகக் கேரள அரசு ஒன்றாக நிற்கும் என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை விமர்சித்துள்ள பாஜக, அரசியல் நோக்கத்திற்காக மாணவர்களைச் சிப்பாய்களாகப் பயன்படுத்துகின்றன என்று தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: