சனி, 16 நவம்பர், 2019

இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது .. நள்ளிரவு முதல் முடிவுகள் வெளியாகும் ....

இலங்கை அதிபர் தேர்தல்- வாக்குப்பதிவு  தொடங்கியதுதினத்தந்தி :இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 கொழும்பு, இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ந்தேதி முடிகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்  இன்று (சனிக்கிழமை)  நடைபெற்று வருகிறது.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை முன்னிட்டு இலங்கை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறார். மொத்தம், 35 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.


இலங்கையில் 37 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் கோத்தபய ராஜபக்சேவுக்கு முக்கிய பங்கு உண்டு. இதனால் சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்கு அவருக்கு உண்டு. 10 ஆண்டு காலம் ராணுவ துறைக்கு செயலாளராக இருந்த கோத்தபய, உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில் சரண் அடைந்த விடுதலைப்புலிகளையும் கொன்று குவிக்க உத்தரவிட்டவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. 
. இந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.

1982-ம் ஆண்டுக்கு பிறகு பதவியில் உள்ள அதிபர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகிய முக்கிய தலைவர்கள் போட்டியிடாமல் இலங்கையில் அதிபர் தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை வகிக்கிறார். அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன ஆகுமோ என தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மத்தியில் அச்சம் நிலவுகிறது

கருத்துகள் இல்லை: