திங்கள், 11 நவம்பர், 2019

மகாராஷ்டிரா: சிவசேனா பஜக தொடர்பை துண்டிக்கவேண்டும் .. சரத் பவர் . காங்கிரஸ் நிபந்தனை


மின்னம்பலம் : மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்குமாறு சிவசேனா கட்சிக்கு மாநில ஆளுநர் நேற்று (நவம்பர் 10) இரவு அழைப்பு விடுத்தார். இதன் மூலம் மகாராஷ்டிர அரசியல் களத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் பாஜக - சிவசேனா கூட்டணியிடம் இருந்தபோதும், கருத்தொற்றுமை இல்லாததால், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் புதிய அரசு அமைவதில் பாஜக - சிவசேனா இடையே முடிவு எட்டப்படாத நிலையில், பதவிக் காலம் முடிந்ததால் முதல்வர் பதவியிலிருந்து கடந்த 8ஆம் தேதி தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று முன்தினம் (நவம்பர் 9) அழைப்பு விடுத்தார். முதல்வர் பதவி இல்லாமல் பாஜகவை ஆதரிக்கப் போவதில்லை என்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்து வரும் நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இழுபறி தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை மகாராஷ்டிரா காபந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை ராஜ் பவனில் பாஜக தலைவர்கள் குழுவுடன் சந்தித்தார். ஆளுநரைச் சந்தித்த பின், மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் அரசாங்கத்தை அமைப்பதில் சேனா ஆர்வமாக இருந்தால், பாஜக அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது என அதிரடியாகக் கூறியுள்ளார். மேலும், சிவசேனா பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காததால் மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்க மறுத்துள்ள பாஜக, சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமரப்போவதாகக் கூறியது.
இந்த நிலையில், 56 எம்.எல்.ஏ.க்களுடன் இரண்டாவது பெரும்பான்மையைப் பெற்ற சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க இன்று (நவம்பர் 11) இரவு 7.30 மணி வரை அக்கட்சிக்கு ஆளுநர் கால அவகாசம் அளித்துள்ளார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
54 எம்.எல்.ஏ.க்களைக்கொண்ட தேசியவாத காங்கிரஸ், 44 எம்.எல்.ஏ.க்களைக்கொண்ட காங்கிரஸ் ஆகியவை ஆதரவளிக்கும்பட்சத்தில் சிவசேனா கட்சியால் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், அதேசமயம் சிவசேனாவின் முதல்வர் பதவிக்கான கோரிக்கையை காங்கிரஸ் கூட்டணி ஏற்றுக்கொள்ளுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
தேசியவாத காங்கிரஸின் நிபந்தனை
பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்காது என்ற அறிவிப்பு வெளியானதுமே சிவசேனாவை ஆதரிப்பதற்கான பல நிபந்தனைகளை தேசியவாத காங்கிரஸ் கட்சி வகுத்தது. அதில் பாஜகவுடனான உறவுகளை முறிப்பது, தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறுவது, ஒரு பொதுவான கூட்டணியை உருவாக்குவது ஆகியவை அந்த நிபந்தனைகளாகும்.
இதுவரை எதிர்க்கட்சியாக மட்டுமே அமர மக்கள் வாக்களித்துள்ளார்கள் எனக் கூறிவந்த சரத் பவார் கட்சி, தற்போது கூட்டணிக்கான நிபந்தனைகளை வகுக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) செய்தித் தொடர்பாளரும், மாநிலத் தலைவருமான நவாப் மாலிக் “ஆளுநர் சேனாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. சிவசேனா என்சிபி மற்றும் காங்கிரஸின் ஆதரவை விரும்பினால், அது முதலில் பாஜகவுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாக ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும்; தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்; நரேந்திர மோடி அரசாங்கத்தில் அவர்களின் அமைச்சர் அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறினார்.
மேலும், "சிவ சேனாவுக்கு ஆதரவளிப்பதற்கு முன்பு, கூட்டணி எவ்வாறு உருவாகும், அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் அது செயல்படும் விதம் குறித்து அவர்களின் தலைமை தெளிவுபடுத்த வேண்டும். விவாதம் மற்றும் முடிவு இல்லாமல், எந்த முடிவும் எடுக்க முடியாது, ”என்றார் நவாப் மாலிக்.
சோனியா காந்தி இன்று ஆலோசனை
மகாராஷ்டிரத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம் குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டில்லியில் இன்று ஆலோசனை நடைபெற இருக்கிறது. கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இக்கூட்டத்தில் சிவசேனாக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. இதேபோல், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மாநில முதல்வருமான அசோக் சவாண் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசும்போது, “மகாராஷ்டிரத்தில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து மேலிடத் தலைமையுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதை காங்கிரஸ் விரும்பவில்லை” என்றார்.

சிவசேனா அவசர ஆலோசனை
அதே சமயம், ஆளுநரின் அழைப்பை அடுத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தனது கட்சித் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, ஆட்சி அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சரத் பவாரை உத்தவ் தாக்கரே இன்று சந்தித்துப் பேசுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றிரவு உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லத்தில் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆதித்யா தாக்கரே, சிவசேனா தலைவர்கள் மிலிந்த் நர்வேகர் மற்றும் அனில் தேசாய் ஆகியோர் ஆட்சியமைப்பது குறித்து இன்று அதிகாலை வரை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை: