செவ்வாய், 12 நவம்பர், 2019

மேலவளவு கொலையில் சிறையில் இருந்த 13 பேர் திடீர் விடுதலை!- தமிழக அரசு

கொல்லப்பட்டவர்கள் மேலவளவு நினைவிடம் vikatan.com - .சல்மான் பாரிஸ் : இனி பட்டியல் சமூகத்தினரை சாதி ஆணவத்தால் கொலை செய்துவிட்டு பத்து வருடங்களில் வெளியில் வந்து விடலாம் என்ற எண்ணமே மேலோங்கும். மேலவளவு ஊராட்சித் தலைவராக இருந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் உட்பட 7 பேர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த 13 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவில் இருபது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய சாதிய கொலைச் சம்பவம் நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உச்ச நீதிமன்றம் வரை அப்பீல் செய்தும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தனர்.
பத்து வருட காலமாக தண்டனை அனுபவித்து வந்த இவர்களை எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் தொகுதி அ.தி.மு.க, எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் கோரிக்கை வைத்தார். விடுதலை செய்யக் கூடாது என்று தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் 13 பேரும் விடுதலை செய்ய அரசால் உத்தரவிடப்பட்டு கடந்த 9-ம் தேதி அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளிவந்த பரபரப்புக்கிடையில் சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டிசாமி ஆகியோர் மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

 பல்வேறு தரப்பிலும் இச்சம்பவம் விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில் நம்மிடம் பேசிய சோஷியல் ஜஸ்டிஸ் அமைப்பின் இயக்குநர் ஆறுமுகம், ''மற்ற குற்ற வழக்குகள் போல தீண்டாமை வன்கொடுமையால் நடைபெற்ற கொலை வழக்கு வராது. குற்றப்பிரிவான 1920-ல் தண்டனை பெற்றவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது. இனி பட்டியல் சமூகத்தினரை சாதி ஆணவத்தால் கொலை செய்துவிட்டு பத்து வருடங்களில் வெளியில் வந்து விடலாம் என்ற எண்ணமே மேலோங்கும். இதற்கு அரசே துணைபோகக் கூடாது. அப்படி துணைபோனால், இனி பட்டியலினத்தவர்கள் கொல்லப்படுவது அதிகரிக்கும். இவர்களுக்கு எந்த அடிப்படையில் நன்னடத்தை விதிகளை கணக்கிட்டார்கள் என்று தெரியவில்லை. SC/ST (பிரிவு 19 & 20 ) குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சட்டம் பொருந்தாது. இந்த விடுதலை எஸ்.சி.,எஸ்.டி. சட்டத்தைப் புறம் தள்ளியதுபோல் உள்ளது'' என்றார்

கருத்துகள் இல்லை: