வியாழன், 3 அக்டோபர், 2019

பெரியாருடனான ஈழ ஆயுதப் போராளிகளின் சந்திப்பு – இதுவரை வெளிவராத உரையாடல்!


.meiarivu.com தந்தை பெரியாரின் 141-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு லண்டனில் நடைபெற்ற நிகழ்வில், பெரியாரை நேரடியாக தாங்கள் சந்தித்த நிகழ்வையும், ஈழப்போராட்டம் தொடர்பாக பெரியார் என்ன கருதினார் என்பதையும் பதிவு செய்துள்ளார் ஈழப்போராட்டத்தில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழும் சத்தியசீலன்.
லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வில், தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும், ஈழ ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவருமான தோழர் சத்தியசீலன், தமிழ் சொலிடாரிட்டி அமைப்பைச் சேர்ந்த சேனன், புதிய திசைகள் அமைப்பின் தோழர் புவி, மக்கள் கலை பண்பாட்டு களம் அமைப்பின் தோழர் கோகுலரூபன், விம்பம் – கலை , இலக்கிய ,திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் தோழர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

பெரியாரின் சாதி ஒழிப்பும் சமூக நீதியும் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில், 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தில் அனைத்து ஆயுதக் குழுக்களும் உருவாக அஸ்திவாரமாக இருந்த ‘தமிழ் மாணவர் பேரவை’ அமைப்பை நிறுவிய சத்தியசீலன், முக்கியமான உரையொன்றை நிகழ்த்தியுள்ளார்.
தோழர் சத்தியசீலன் பேசியதன் சாராம்சம் இதோ :
“1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து தப்புவதற்காக தமிழ்நாட்டின் திருச்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது திருச்சியில்தான் தந்தை பெரியாரும் வசித்துக்கொண்டிருந்தார்.
என்னுடன் பெரியாரைச் சந்திப்பதற்காக – கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து அங்கிருந்து – திருச்சிக்கு என்னுடன் வந்திருந்த நண்பர்கள், மகா உத்தமன், தவராஜா (வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர், அவர் இப்போதும் உயிருடன் இருக்கின்றார்) ஞான சுந்தரம் ஆகியோர் வந்திருந்தனர். முன்னரே திட்டமிட்டபடி பெரியார் அவர்களையும், கோயம்புத்தூரில் ஜி.டி.நாயுடு அவர்களையும், சென்னையில் ம.பொ.சிவஞானம், முரசொலி அடிகளார் ஆகியோரை சந்தித்தோம்.
முதலில் பெரியாரை சந்தித்தோம். என் மனதில் உருத்திக் கொண்டிருந்த ஒரு கேள்வியை கேட்டுவிட எண்ணிக் கொண்டிருந்தேன். ‘நீங்கள் எதற்காக 1949-ல் திராவிட நாடு என்ற கொள்கையைக் கைவிட்டீர்கள்?’ என்ற கேள்வியைக் கேட்கலாம் என்றிருந்தேன்.
தமிழர்கள் இலங்கையிலே வாழ வேண்டும் என்றுச் சொன்னால், தமிழ் அரசியல்வாதிகள் அகிம்சை வழியிலே போராடுகின்ற போராட்டங்களால் சிங்களவர்கள் தமிழர்களுடைய உரிமைகளைத் தரமாட்டார்கள் அதற்கு நாங்கள் இளைஞர்கள் மாற்று வழியைத் தேடியிருக்கின்றோம். இது ஆயுதப்போராட்டம்தான். இதற்கு உங்களுடைய அறிவுரை என்ன? என்று பெரியாரைக் கேட்டேன்.

அதற்கு பெரியார் பல்வேறு கருத்துக்களைச் சொல்லி நிறையவே கேள்வி கேட்டார். இதில் தமிழர்கள் இலங்கையில் எவ்வளவு பேர், சிங்களவர்கள் எத்தனை பேர் எனக்கேட்டார். அதற்கு நான் அதனுடைய தொகையைச் சொன்னேன். அப்படியாயின் அவ்வளவு சிங்களவர்களும் தமிழர்களை எதிர்த்து வந்தால் நீங்கள் எப்படி அதனைத் தாக்குப்பிடிப்பீர்கள் என்று கேட்டார். நான் அன்றைய இளமைத் துடிப்பிலும், பெரியார் கேட்கிறாரே என்பதற்கில்லாமல் எனது மனதில் பட்டதை சொன்னேன், அவர்கள் வைத்திருக்கின்ற ஆயுதங்களைவிட திறமான ஆயுதங்களை வைத்து போராட முடியும் என்று நம்புகிறோம், இளைஞர்கள் எங்களோடு துணிந்து வர இருக்கிறார்கள் என்றும் சொன்னேன்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பெரியார், அவர்கள் பெரிய டாங்க் முதலானவற்றை கொண்டு வந்து உங்கள் அவ்வளவு பேரையும் அழித்தால் என்ன செய்வீர்கள் என்றார். அப்படி ஒரு அடிமை வாழ்வு வாழ்வதை விட, அழிந்து போகும் நிலை ஏற்பட்டால் அழிந்துபோகதான் வேண்டும் என்றேன். அப்போது எனக்கு 24 வயது. அவ்வளவு பெரிய ஆளை நாங்கள் எல்லோரும் சந்திப்பது போல அன்றைக்கு சிந்தனை ஓடாது. எப்படியும் எங்களது கொள்கையை நிறைவேற்றவேண்டும் என்பதுதான் மனதில் இருந்தது. அவர்கள் பெரிய டாங் -களைக் கொண்டுவந்தாலும் அடித்து முடிப்போம் என்றேன். சிறிது நேரம் யோசித்து விட்டு, செய்ய வேண்டாம் என்று பெரியார் சொல்லவில்லை. ‘என்னத்தையாவது செய்யுங்கள்’ என்றுதான் சொன்னார். அப்பொழுதுதான் நான் அவரிடம் கேட்டேன் ‘நீங்கள் ஏன் திராவிட நாட்டுக்கொள்கையைக் கைவிட்டீர்கள்’ என. அதற்கு அவர் சொன்னார், ‘அது சாத்தியமில்லை. ஏனெனில் பல்வேறு இனம், மொழி பேசும் மக்கள் இருக்கின்றனர். திராவிடம் என்று நான் கூறினால் அது எல்லாவற்றையும் சேர்த்து அடக்கும். ஆனால் எல்லோரும் ஒன்றாக வருவார்களா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.’ என்றார்.
இத்துடன் அவருடனான பேச்சுவார்த்தை முடிந்தது. ஆனால், நான் பேசியதை குறிப்பாக எழுதித்தரச் சொன்னார். கைப்பட எழுத்திக்கொடுத்தேன். அது அன்றைய வார விடுதலைப் பேப்பரிலே 1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அது செய்தியாக போடப்பட்டது.
பெரியார் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் இன்றைய எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் காரணம் என கூறுவேன்’ என்றார் சத்திய சீலன்.
1970 ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் தமிழ் மாணவர் பேரவையை தியாகி சிவகுமார் உள்ளிட்ட மேலும் பல இளைஞர்களுடன் உருவாக்கியவர் தோழர் சத்தியசீலன். ஆயுதப் போராட்டம் மூலம்தான் தமிழர்களுக்கான தமிழீழத்தை உருவாக்க முடியும் என்ற நோக்கிலே போராட்டத்தை தொடங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: