வெள்ளி, 4 அக்டோபர், 2019

49 பேர் மீது தேசத்துரோக வழக்கு.. நடிகை ரேவதி ஆடூர் கோபாலகிருஷ்ணன் மணிரத்னம் அபர்ணா சென் ...


மின்னம்பலம் : மணிரத்னம் உள்பட இந்தியாவைச் சேர்ந்த 49 திரைப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், “இஸ்லாமியர்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர்.
இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு!அக்கடிதத்தில், “ஜெய் ஸ்ரீராம்’ பெயரில் பல தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. மதத்தின் பெயரால் நடைபெறும் கும்பல் தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மக்கள் இந்த அரசை எதிர்த்தால், அவர்களை சிறையில் அடைப்பதோ அல்லது ஆண்டி-நேஷ்னல், அர்பன் நக்சல் என்று முத்திரை குத்தவோ கூடாது. மேலும், ஆளும் கட்சியை விமர்சிப்பது, தேசத்தை விமர்சிப்பது என்று பொருள் ஆகாது” என்று குறிப்பிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதத்தில் வலியுறுத்தியிருந்தனர்.
கடிதத்தில், இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், ராமச்சந்திர குஹா, கொங்கனா சென் சர்மா உட்பட 49 பிரபலங்கள் கையெழுத்திட்டிருந்தனர். இந்த நிலையில் கடிதம் எழுதிய காரணங்களுக்காக அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை எதிர்த்து பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் உள்ளூர் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா தொடுத்த வழக்கில், “நாட்டின் பிம்பத்தை களங்கப்படுத்தியதுடன், பிரதமரின் மரியாதையை குறைக்கும் வகையில் நடந்துகொண்டனர். பிரிவினைவாதப் போக்கினை ஆதரிக்கின்றனர்” என்று கையெழுத்திட்ட 49 பேர் மீதும் குற்றம்சாட்டியிருந்தார். இவ்வழக்கில் நீதிபதி சூரியா காந்தி திவாரி அளித்த உத்தரவின் பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுதீர் குமார் ஓஜா கூறுகையில், “வழக்கு பதிவதற்கான உத்தரவை நீதிபதி ஆகஸ்ட் 20ஆம் தேதி வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்டு வியாழக் கிழமை (நேற்று) அவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்தார். கடிதத்தில் கையெழுத்திட்ட 49 பேர் மீதும் தேசத்துரோகம், பொது அமைதிக்கு களங்கம் விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சதர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: