திங்கள், 30 செப்டம்பர், 2019

இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7 லட்சம் கோடி முதலீடு

மாலைமலர் : இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7 லட்சம் கோடி முதலீடு செய்யும் என்று இந்தியாவுக்கான அந்த நாட்டின் தூதர் தெரிவித்தார். புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடு சவுதி அரேபியா இந்த நாட்டின் இந்திய தூதர் டாக்டர் சவுத் பின் முகமது அல் சதி, டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியா, சவுதி அரேபியாவின் கவர்ச்சிகரமான முதலீட்டு மையம் ஆகும். எரிசக்தி, எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், உள்கட்டமைப்பு, விவசாயம், தாதுக்கள், சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் 100 பில்லியன் டாலரை (சுமார் ரூ.7 லட்சம் கோடி) இந்தியாவில் சவுதி அரேபியா முதலீடு செய்ய பார்க்கிறது.
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் அரம்கோ, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர உத்தேசித்து உள்ளது. இது, எரிசக்தி துறையில் இரு நாடுகளிடையே வளரும் உறவின் தன்மையை பிரதிபலிக்கிறது.
இந்தியாவில் எண்ணெய் வழங்கல், சந்தைப்படுத்துதல், பெட்ரோகெமிக்கல், உய்வுப்பொருட்கள் (லூப்ரிகேண்ட்ஸ்) ஆகியவற்றில் முதலீடு செய்வது அரம்கோவின் உலகளாவிய திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.


இந்த பின்னணியில் சவுதி அரம்கோ, இந்தியாவின் எரிசக்தி துறையில் மராட்டிய மாநிலத்தில் மேற்கு கடலோர சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் திட்டத்தில் 44 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 8 ஆயிரம் கோடி) முதலீடு செய்யும்.

மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்துடனான நீண்ட கால கூட்டாண்மை இரு தரப்பு உறவில் முக்கிய மைல் கல்லாக அமையும்.

இந்தியாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையேயான பல்துறை வர்த்தகத்தை கணிசமாக விரிவுபடுத்தும் திட்டத்தை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கொண்டுள்ளார்.

2030-தொலைநோக்கு பார்வை திட்டத்தில், சவுதி அரேபியா பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களையே சார்ந்து நிற்பதை குறைக்கவும் திட்டம் உள்ளது.

எண்ணெய் அல்லாத வர்த்தகத்தில் பயன்படுத்தப்படாத வர்த்தக வாய்ப்புகள் நிறைய உள்ளன. நாங்கள் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, கலாசாரம், தொழில் நுட்பம் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துகிறோம்.

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை தடுப்பதின் காரணமாக இந்தியாவில் ஏற்படுகிற பற்றாக்குறையை சரி செய்வதற்கு சவுதி அரேபியா வினியோகத்தை அதிகரிக்குமா என்று கேட்கிறீர்கள்.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் சவுதி அரேபியா உறுதியாக உள்ளது. பிற வகையிலான வினியோகத்தில் இடையூறுகளால் பாதிக்கிறபோது, எந்தவொரு பற்றாக்குறையையும் நாங்கள் சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: