வெள்ளி, 4 அக்டோபர், 2019

அர்பன் நக்சல் வழக்கு: விசாரிக்க மறுத்த ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

மின்னம்பலம் : உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து வழக்கில் இருந்து விலகிய சம்பவங்கள் இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடைபெறவில்லை. வழக்கறிஞர்கள், நீதித்துறை பணியாளர்கள், அரசியல் வட்டாரத்தினர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பிலும் இந்த விவகாரம் அதிர்ச்சியோடு பார்க்கப்படுகிறது.
கௌதம் நவ்லகா என்ற மனித உரிமை ஆர்வலர் மீது மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த கொரேகான் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.2017 இல் நடந்த புனே வன்முறை சம்பவங்களில் தொடர்பும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பும் கொண்டிருப்பதாக கௌதம் நவ்லகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன் மீதான வழக்கை தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதைத் தள்ளுபடி செய்த மும்பை உயர்நீதிமன்றம் கைதுசெய்வதற்கு 3 வார தடை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி

உத்தரவு பிறப்பித்தது. மும்பை உயர்நீதிமன்றம் அளித்த அந்த மூன்று வார அவகாசம் இன்று அக்டோபர் 4 ஆம் தேதியோடு முடிவடைகிறது.
இந்த அவகாசத்துக்கு முன்பாகவே உச்சநீதிமன்றம் சென்று தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மேல்முறையீடு செய்தார் கௌதம் நவ்லகா.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது எந்த காரணமும் சொல்லாமல் இந்த வழக்கில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார் தலைமை நீதிபதி.
இதையடுத்து இந்த வழக்கு அக்டோபர் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் ரமணா, ஆர் சுபாஷ் ரெட்டி, பிஜி கவாலி ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஒரு மனித உரிமை ஆர்வலரின் மனுவை விசாரிப்பதற்கு இந்த நீதிபதிகளும் மறுத்துவிட்டனர். அவர்களும் இவ்வழக்கை விசாரிக்க மறுப்பதற்கான காரணத்தை கூறவில்லை.
இதையடுத்து கௌதம் நவ்லகாவின் மனு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விடுமுறை ஆதலால் நேற்று அக்டோபர் 3ஆம் தேதி வியாழக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது .நீதிபதி அருண் மிஸ்ரா, வினித் சரண், ரவீந்திர பட் ஆகி நீதிபதிகள் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கிலிருந்து நீதிபதி பட் விலகினார்.
கௌதம் நவ்லகா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மும்பை நீதிமன்றம் கைது நடவடிக்கையிலிருந்து அவகாசம் அளிக்க கொடுக்கப்பட்ட காலக் கெடு அக்டோபர் 4 ஆம் தேதியோடு முடிகிறது என்று நீதிபதிகளிடம் வலியுறுத்திய நிலையில்... வழக்கு இன்று அக்டோபர் 4ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கிலிருந்து கடந்த நான்கு நாட்களில் விலகிய ஐந்தாவது நீதிபதி ஆகிறார் ரவிந்திர பட். வழக்கிலிருந்து விலகிய தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகளும் காரணத்தை தெரிவிக்கவில்லை.
நீதிபதி பட் ஏற்கனவே ஜனநாயக உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்புக்கான வழக்கறிஞராக ஏற்கனவே வாதாடியவர் என்பதால் இந்த வழக்கில் இருந்து விலகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் தலைமை உட்பட மற்ற நான்கு நீதிபதிகள் இந்த வழக்கில் இருந்து விலகிய காரணம் நீதித்துறை வரலாற்றில் பெரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
மும்பை உயர் நீதிமன்றம் சட்டப்படி மூன்று வார அவகாசம் அளித்த பிறகு உச்ச நீதிமன்றம் சென்றுள்ள கௌதம் நவ்லகா அர்பன் நக்சல் என்று வலதுசாரிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுபவர். இந்த நிலையில் அவருக்கு சட்ட ரீதியான பரிகாரத்தைப் பெற உச்ச நீதிமன்றத்திடம் அணுக உரிமை இருந்தும், அதை மறுக்க சட்டப்படி உச்ச நீதிமன்றத்துக்கு வாய்ப்புகள் இருந்தும்.... இப்படி தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகள் ஒரு வழக்கை விசாரிக்காமல் விலகுவது என்பது இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் வேதனைப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை: