வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

இந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்... Unites states of India மாநிலங்கள் அவையில் வைகோ முழு பேச்சு வீடியோ


SP Somasundaram : இந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா,
வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படும்
நேற்று நடந்த (01.08.2019)
மாநிலங்கள் அவையில் வைகோ அவர்களின் 45 நிமிட பேச்சு....
என்னுடைய 55 ஆண்டுக் கால பொதுவாழ்க்கையில், இந்த நாள் மறக்க முடியாத நாள்!
ஆம்; 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அவையில் இன்று என்னுடைய கன்னி உரை ஆற்றுகின்றேன்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வாய்ப்புகள்தாம், அவருக்குக் கிடைக்கின்ற பரிசு!
புகழ்பெற்ற கவிஞர் தாமஸ் கிரே எழுதிய Elegy written in a Country churchyard என்ற கவிதையின் ஒருசில வரிகளை இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
அவர் ஒரு கல்லறைத் தோட்டத்துக்குள் நுழைகின்றார்; ஒவ்வொரு கல்லறையாகச் சுற்றிப் பார்க்கின்றார்; அழுகின்றார், கண்ணீர் உகுக்கின்றார். அடுத்துச் சொல்லுகின்றார்:-
“இந்தக் கல்லறைக்குள் புதையுண்டு கிடக்கின்ற மனிதன் ஆலிவர் கிராம்வெல் போல அரசியல் தலைவன் ஆகி இருக்கலாம். ஆனால் அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த உலகத்தின் கவனத்திற்கு வராமலேயே மறைந்து போய்விட்டான்.”
அடுத்தக் கல்லறையைப் பார்த்துச் சொல்லுகின்றார்:- “இந்தக் கல்லறையில் உறங்குகின்ற மனிதன், மில்டன் போன்ற கவிஞன் ஆகி இருக்கலாம். ஆனால் அவனுக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.”

அடுத்து ஒரு கல்லறையைப் பார்க்கின்றார்:- “இந்த மனிதன் வில்லேஜ் ஹேம்டன் போல ஆகி இருக்கலாம். ஆனால் அவனுக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.”
அடுத்து அவர் ஒரு கவிதை வடிக்கின்றார்.
ஆழ்கடலுள் புதைந்து கிடக்கின்ற சிப்பிகளுக்குள்
ஒளிரும் முத்துக்கள் உறங்கிக் கிடக்கின்றன
பாலைவனத்தில் மலர்கின்ற பூக்களின் நறுமணம்
வெப்பக்காற்றில் வீணாகிப் போகின்றன...
அதுபோல,
தக்க வாய்ப்புகள் இல்லை என்றால்,
திறமைகள் வெளிப்படாமல் முடங்கிப் போகின்றன
சரியான வாய்ப்புகள் கிடைக்காவிட்டால், எவ்வளவு திறமைகள் இருந்தாலும் பயன் இல்லை என்று அமெரிக்க அரசியல் சட்டத்தின் தந்தை தாமஸ் ஜெபர்சன் கூறுகின்றார்.
41 ஆண்டுகளுக்கு முன்பு, 1978 ஆம் ஆண்டு மாண்புமிகு உறுப்பினர்கள் நிறைந்து இருந்த மாநிலங்கள் அவையில் இடம்பெறுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய பெருந்தலைவர்களின் வழிவந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் எனக்கு அந்த நல்ல வாய்ப்பை நல்கினார்கள்.
அவருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் நான் கடமைப்பட்டு இருக்கின்றேன். தி.மு.கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு முரசொலி மாறன் அவர்கள் நாடாளுமன்றப் பணிகளில் என்னை வார்ப்பித்தார்கள். 1978 ஆம் ஆண்டு மே 2 ஆம் நாள் மத்திய - மாநில உறவுகள் குறித்த தனிநபர் மசோதா ஒன்றில் கன்னி உரை ஆற்றினேன்.
பூபேஸ் குப்தா, பேராசிரியர் என்.ஜி.ரங்கா போன்ற பெருந்தகையோர் என்னை வாழ்த்தினார்கள்.
1984, 1990 ஆம் ஆண்டுகளில் டாக்டர் கலைஞர் அவர்கள் என்னை மீண்டும் மாநிலங்கள் அவைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த அவையில் என்னுடைய மூன்றாவது பணிக்காலம் 1996 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.
23 ஆண்டுகளுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அன்புச் சகோதரர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், பெருந்தன்மையோடும், பேரன்போடும் என்னை இந்த அவைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றார்கள். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
1998, 1999 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள் அவைத் தேர்தலில் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு பணியாற்றினேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தன்னிகர் அற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்,
1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இதே மாநிலங்கள் அவையில் ஆற்றிய கன்னி உரையில் செய்த பிரகடனத்தை
இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
நான் ஒரு திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றேன்.
ஆனால் அப்படி நான் சொல்வதால், நான் வங்காளிகளுக்கோ, மராட்டியர்களுக்கோ, குஜராத்தியர்களுக்கோ எதிரானவன் என்று பொருள் அல்ல.
எல்லோரும் சமம் என்று கருதுபவன்தான்
முழுமையான மனிதன் என்று ராபர்ட் பர்ன்ஸ் குறிப்பிடுகின்றார்.
இந்த நாட்டுக்கு, திராவிட இனம் என்பது, உறுதியான, முழுமை பெற்ற, மாறுபட்ட ஒன்றை, இந்த நாட்டுக்குத் தர வல்லது என்பதாலேயே, ஒரு திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை கொள்கின்றேன்.
இந்த அவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா, ஒரு அடக்குமுறைச் சட்டம் ஆகும். மனித உரிமை ஆர்வலர்கள், சிறுபான்மை மக்கள், இந்த அரசை எதிர்ப்பவர்களின் குரல்வளையை நெறிக்கின்ற சட்டம் ஆகும்.
நான் மிகுந்த வேதனையோடு குறிப்பிட விரும்புகின்றேன். முன்பு எவரெல்லாம் இந்தகைய அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டார்களோ, அவர்கள் பின்பு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்பு அவர்களே இந்தகைய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்தார்கள்.
பிரித்தானியர்களின் ஆட்சியின்போது பண்டித ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் இத்தகைய முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். ஆனால் விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை அவர்கள் ஏற்றபோது, அவர்களே மீண்டும் இந்தக் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.
இந்திரா காந்தி அம்மையார், மன்னர் மானியத்தை ஒழித்து, 14 வங்கிகளை நாட்டு உடைமை தேசிய வங்கிகள் ஆக்கினார் பாராட்டுப் பெற்றார்.
வங்கதேச யுத்தத்தில் இந்தியா வெற்றி பெற்றபோது, நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தி அம்மையாரை,
இந்தியாவின் துர்கா தேவியே வருக என்று, ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய் வரவேற்றார்.
அலகாபாத் உயர்நீதிமன்றம் பிரதமர் இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு அளித்தபோது, 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் பிரதமர் இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்கினார்.
லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் தலைமையில் ஜனசங்கம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தார்கள்.
அதே நாள் இரவில் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜோதிர்மயி பாசு, மொரார்ஜி தேசாய், சரண் சிங், வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலை வர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மிசா என்ற உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜார்ஜ் பெர்ணான்டஸ் சில மாதங்களுக்குப் பின்பு கைதானார்.
இன்று இந்த அவையின் தலைவராகப் பொறுப்பு வகிக்கின்ற, இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்களும் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகம் நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள், நெருக்கடி நிலையை எதிர்த்து ஒரு தீர்மானம் இயற்றினார்கள். அந்தத் தீர்மானம்தான், ‘இந்திய ஜனநாயகத்தின் மேக்னா கார்ட்டா’ என்று நம்பூதிரிபாடு அவர்கள் கூறினார்கள்.
ஜனநாயகத்தைக் காக்க மேற்கொண்ட இந்த அறப்போராட்டத்தின் விளைவாக, 1976 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அரசு கலைக்கப்பட்டது. நான் உட்பட 500 க்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டோம்.
நான் பாளையங்கோட்டை, சேலம் சிறைகளில் ஓராண்டு மிசா கைதியாக அடைக்கப்பட்டு இருந்தேன்.
நெருக்கடி நிலையால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னரும், பாடம் கற்றுக்கொள்ளாத காங்கிரஸ் கட்சி 1980 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, தடா என்ற கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தது. என்னுடைய உடன்பிறந்த தம்பி வை.இரவிச்சந்திரன் அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கை, கால்களை இழந்த விடுதலைப் புலிகளை தன் வீட்டில் தங்கவைத்து மருத்துவம் செய்ததற்காக, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு என் தம்பியைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
அவர் ஓராண்டு சிறையில் பூட்டப்பட்டு இருந்தார். ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கும், மருத்துவமனைக்கும் கொண்டுசென்ற வேளைகளில் அவரது கைகளுக்கு விலங்கு பூட்டித்தான் கொண்டு சென்றார்கள்.
2002 ஆம் ஆண்டு, பெரும் மதிப்பிற்குரிய அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி, மிகக் கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (பொடா) கொண்டுவந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், நானும், திரு முரசொலி மாறன் அவர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தோம்.
நான் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் பொடா சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்களைக் கைது செய்யும் பிரிவு நீக்கப்பட்டது என்பதை, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு பாராட்டி எழுதி இருக்கின்றது.
பொடா சட்டத்திற்கு முதலாவது பலி யார் என்றால், அது வேறு யாரும் அல்ல நானேதான்!
2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் நாடாளுமன்ற மக்கள் அவையில் குஜராத் பிரச்சினை குறித்து நடைபெற்ற விவாதத்தில் நான் பேசும்போது, “நான் விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன்; இன்றும் ஆதரிக்கின்றேன்; நாளையும் ஆதரிப்பேன்” என்று பேசினேன்.
நாடாளுமன்றத்தில் பேசிய இந்த உரையை, திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேற்கோள் காட்டிச் சொன்னேன். அதற்காக தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள், பொடா சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்தார்கள். அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். சிகாகோவில் நடைபெற்ற தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றேன்.
அங்கிருந்து திரும்பி வரும்போது, 2002 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டேன்.
ஒரு சர்வதேச பயங்கரவாதியைப் போலக் கருதி, 500 காவலர்கள் படை சூழ என்னைக் கொண்டுபோய் வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்கள்.
இந்தியாவில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். 19 மாதங்கள் (577 நாட்கள்) சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன்.
மாண்புமிகு அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் வேதனை அடைந்தார்கள். வேலூர் சிறைக்கே வந்து என்னைப் பார்க்க விரும்பினார்கள். ஆனால் நெறிமுறைகள் அதற்கு இடம் தரவில்லை. எனவே பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களையும், இன்று இந்த அவையின் தலைவராக வீற்றிருக்கின்ற மாண்புமிகு எம்.வெங்கையா நாயுடு அவர்களையும் வேலூர் சிறைக்கு அனுப்பி என்னைச் சந்திக்கச் செய்தார்கள்.
என்னுடைய அன்புச் சகோதரர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்கள், மூன்று முறை வேலூர் சிறைக்கு வந்து என்னைச் சந்தித்தார்கள்.
நான் வேலூர் சிறையில் இருந்தபோது, உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தேன். புகழ்பெற்ற வழக்குரைஞர் பாலி நாரிமன் அவர்கள் எனக்காக வாதாடினார்கள். அந்த வழக்கில், “விடுதலைப் புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை வெறுமனே ஆதரித்துப் பேசுவது மட்டுமே பொடா சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடையக்கூடும். ஆம்; இப்போதும் நான் 124ஏ சட்டத்தின் கீழ் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி.
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, 2019 ஆம் ஆண்டு இந்த ஜூலை மாதத் தொடக்கத்தின் 5ஆம் நாள் சென்னை சிறப்பு நீதிமன்றம் எனக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்து இருக்கின்றது.
பிரித்தானியர்களின் ஆட்சியின்போதுதான், பாலகங்காதர திலகரும், அரவிந்த் கோசும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் அதே பிரித்தானிய முடியரசு ஒன்றியம் இன்று தங்கள் நாட்டில் அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டது.
அரவிந்த கோஷ் 124 ஏ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருந்தார். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நேதாஜியின் இந்த வழக்கில் வாதாடிய,தேசபந்து சித்தரஞ்சன்தாஸ், சொன்ன வார்த்தைகள் மெய்சிலிர்க்கச் செய்கின்றன.
அரவிந்த கோஷ் நீதிமன்றத்தின் கூண்டில் நிற்கவவில்லை. வருங்கால வரலாற்றின் புகழ் கூண்டில் நிற்கின்றார். எதிர்காலத்தில் உன்னத தீர்க்கதரிசியாகவும், மனித உரிமை காவிய நாயகனாகவும் போற்றப்படுவார் என்றார்.
1924 இல் மகாத்மா காந்தி யங் இந்தியாவில் 124 ஏ தேசத்துரோகக் குற்றப்பிரிவு, சட்டத்தைக் கற்பழிக்கும் பிரிவு என்று எழுதினார். அதற்காக காந்தியார் தண்டிக்கப்பட்டார்.
பால கங்காதர திலகர் இதே சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டு மாண்டலே சிறையில் 6 ஆண்டுகள் இருந்தார்.
இந்த நாள்தான் திலகர் மறைந்த நினைவு நாள்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் 124ஏ பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரே ஒரு நபர் நான்தான்.
அந்த வகையில் என்னுடைய பெயர் இந்தியக் குற்றவியல் சட்ட வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. இப்போது நான் பிணை விடுதலையில் இருக்கின்றேன். என் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. இன்னும் இரண்டு வாரங்களில் அந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது.
அந்த வழக்கில் ஒருவேளை சென்னை உயர்நீதின்றம் எனக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்தால், நான் இந்த அவையின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிடுவேன். இனி என்னால் திரும்ப இங்கே வரமுடியாது. அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் இலட்சியங்களுக்காக வாழ்கிறேன்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டேன். என்னுடைய அனுபவத்தில், ஒரு அரசியல்வாதி எழுதுவதற்கும், படிப்பதற்கும் ஏற்ற இடம் சிறைச்சாலைதான் என்பது என் கருத்து.
இந்தச் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின்படியும், சர்வதேச நாடுகள் கலந்துகொண்ட பல்வேறு மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டதற்கு இணங்கவும், இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்திருப்பதாக மக்கள் அவையில் அரசு கூறி இருக்கின்றது. இந்தச் சட்டத் திருத்தம் எந்த ஒரு தனி மனிதனையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கே பயன்படும்.
நாடாளுமன்ற மக்கள் அவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசும்போது, “உங்கள் மனதில் அச்சம் இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்” என்று கேட்டு இருக்கின்றார்.
எதனால் கல்புர்க்கி கொலை செய்யப்பட்டார்? எதனால் கோவிந்த் பன்சாரே கொலை செய்யப்பட்டார்? எதனால் நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டார்? எதனால் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார்? அச்சத்தினை மக்கள் மனதில் விதைப்பது இன்றைய அரசு.
அந்த அச்சத்தை விதைத்தது யார்? இந்த அரசுதான்.
எனவே அந்த அச்சத்தைப் போக்க வேண்டியது இன்றைய அரசின் கடமை ஆகும். அதற்கு மாறாக அவர்கள் மேலும் மிகக் கடுமையான இந்தச் சட்டத்தை கொண்டுவந்து இருக்கின்றார்கள். இது எரியும் தீயில் மேலும் எண்ணெய் வார்ப்பது போன்றது ஆகும்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற கவியரசர் ரவீந்திரநாத் தாகூர், தனது புகழ்பெற்ற கீதாஞ்சலி கவிதையில், மனித வாழ்வின் உன்னதத்தைப் பற்றி வடித்துள்ள கவிதை...
எங்கே அச்சம் என்பது மனதில் இல்லையோ
எங்கே அறிவு செம்மாந்து நிற்கின்றதோ
எங்கே மனிதன் தலைதாழாமல் நிமிர்ந்து நிற்கின்றானோ,
எங்கே அறிவு சுதந்திரமாகக் கிடைக்கின்றதோ
எங்கே குறுகிய சுவர்களால்
இந்தப் பரந்த உலகம் சின்னஞ்சிறு சுவர்களால்
துண்டுகளாக உடையவில்லையோ,
எங்கே உண்மையின் ஆழத்தில் இருந்து சொற்கள் வெளிவருகின்றனவோ
எங்கே ஓய்வு அறியாத முயற்சியும் உழைப்பும்
நேர்த்தியான முழுமையை நோக்கித் தன் கரங்களை நீட்டுகின்றதோ
எங்கே பகுத்தறிவு எனும் நீரோடை
மடிந்து போன பழக்கங்களால்
வறண்ட பாலை மணலில் தன்னுடைய பாதையை இழந்து விடவில்லையோ
எங்கே பரந்து விரிந்த எண்ணத்திற்கும் செயலுக்கும்
உன்னுடைய மனதை முன்னெடுத்துச் செல்கின்றாயோ
அத்தகைய சுதந்திரத்தின் சொர்க்கத்தில்
என் தந்தையே
என்னுடைய நாடு கண்விழிக்கட்டும்
எந்த ஒரு சட்டமும் மனித உரிமைக் காவலர்களையும், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களையும் மேலும் அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது.
இருண்ட ஆப்பிரிக்கக் கண்டத்தின் அடித்தட்டு மக்களின் தொழு நோய்க்கு மருத்துவம் செய்து, தன்னலம் அற்ற அந்தத் தொண்டுக்காக நோபல் விருதை வென்ற அறிஞர் ஆல்பிரட் சுவைட்சர், கிழக்கின் தத்துவம் என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றார்.
அதில் அவர், திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு நிகரான இலக்கியம் உலகில் வேறு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.
அத்தகைய திருவள்ளுவர் இயற்றிய ஒரு குறட்பாவை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
என்கிறார்.
உரிமை ஒடுக்கப்படுகின்ற மக்களின் கண்ணீர் அரசுகளைத் தூக்கி எறிந்துவிடும்.
அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமைத் திருத்தச் சட்டத்திற்கு ஒத்திசைவாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கின்றது. ஆனால் தேசியப் புலனாய்வு முகமை பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாக ஓரவஞ்சகமாகச் செயல்பட்டு வருகின்ற நிலையில், இந்தச் சட்டம் தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என்று சிறுபான்மை மக்கள் எப்படி நம்ப முடியும்?
இதே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் என் மீது மேலும் இரண்டு வழக்குகள் புனையப்பட்டன.
சென்னையில் நடைபெற்ற உள்அரங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றியதற்காக என் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து நான் விடுதலை செய்யப்பட்டேன்.
மற்றொரு வழக்கு, இலங்கை விமானப் படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், இலங்கை அரசைக் கண்டித்தும் அமைதிப் பேரணி நடத்தியதற்காக என் மீது மற்றொரு வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் சட்டவிரோதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் என் மீது புனையப்பட்டக் குற்றச்சாட்டுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடுத்தேன்.
அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் என்னை முழுமையாக விடுவித்தது.
எனவே மிசா, தடா, பொடா மற்றும் இந்தச் சட்டவிரோதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எப்படி ஒருவர் பாதிக்கப்படுகின்றார் என்பதற்கு நானே எடுத்துக்காட்டாக நிற்கின்றேன்.
மூன்று காரணங்களுக்காக இந்தச் சட்டத் திருத்தத்தை நான் எதிர்க்கின்றேன்.
1. இந்தச் சட்டம் தனி நபர்களைக் குறி வைக்கின்றது. அவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகின்றது. நான்காவது அட்டவணையில் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று சேர்ப்பதற்கு முன்பாக, அவர்கள் தரப்பில் எந்த விளக்கமும் அளிப்பதற்கு இந்தச் சட்டம் இடம்தரவில்லை. மாறாக இந்தச் சட்டம் எந்த ஒரு தனி நபரையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றது.
இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
2. காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர்தான் ஒருவரை விசாரிக்க முடியும் என்ற நிலையை மாற்றி, தேசிய புலனாய்வு முகமையின் ஆய்வாளரே எவரையும் விசாரிக்க முடியும் என்று இந்தச் சட்டத் திருத்தம் கூறுகின்றது.
3. இந்தச் சட்டம் சாதாரண மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
இந்தச் சட்டத்தின் வாயிலாக மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கின்றது.
இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டு அமைப்புதான். ஆனால், ‘இந்தியா ஒரே நாடு’ என்ற கருத்தை இந்த அரசு திணிக்க முற்படுகின்றது. அது இந்திய ஒற்றுமைக்குக் கேடானது.
உண்மையில் இந்த நாடு, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ (ருnவைநன ளுவயவநள டிக ஐனேயை) என்றே அழைக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே போதிய சட்டங்கள் இருக்கின்ற நிலையில், கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் தேவையற்றது.
இந்திய மக்கள் அன்பானவர்கள். வன்முறையை விரும்பாதவர்கள். தங்கள் கருத்துகளை தேர்தல் வாக்குப் பதிவின் மூலமே வெளிப்படுத்த விரும்புகின்றவர்கள்.
ஐ.நா. மன்றத்தின் சிறப்பு அதிகாரி மார்ட்டின் செயினன் அவர்கள், “பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் பொழுது, மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்” என்பதை வலியுறுத்துகின்றார்.
“பயங்கரவாதத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில், அடக்குமுறை ஆட்சியாளர்கள் தங்களுடைய அரசியல் எதிரிகளை முடக்குவதற்காக, ஒழித்துக்கட்டுவதற்காக அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுகின்றார்கள்” என்கிறார்.
எனவே இந்தக் கடுமையான, அடக்குமுறையான, சட்டவிரோத நடவடிக்கைகள் திருத்த மசோதாவை முற்றிலும் நிராகரித்து ஒதுக்கித் தள்ள வேண்டும் என இந்த அவையை வேண்டுகிறேன். தவறினால் எதிர்கால இந்திய வரலாற்றில் மக்களால் இந்தச் சட்டம் குப்பைக் கூடையில் தூக்கி எறியப்படும்.
இவ்வாறு வைகோ அவர்கள் பேசினார்கள்.
வைகோ அவர்கள் பேசி முடித்ததும், அவையில் இருந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டிப் பாராட்டினார்.
அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன் வைகோ உரையை வெகுவாகப் பாராட்டினார். தன் கைப் பையில் இருந்து ஒரு சாக்லெட்டை எடுத்து அன்பளிப்பாகக் கொடுத்தார்
அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீப்பொறி பறந்தது என்றார்.
திமுக, அண்ணா திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டினார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் பேராசிரியர் மனோஜ்குமார் ஜா, உங்கள் பேச்சு என்னை உலுக்கி விட்டது என்றார்.
அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரிசையாக வந்து வைகோவின் கரங்களைப் பற்றிக் கைகுலுக்கினர்.
ஒரு கேரள எம்.பி., திராவிட இயக்கத்தின் குரல் என்றார்.....
SP Somasundaram

கருத்துகள் இல்லை: