சனி, 3 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது ?

மூன்றாகப் பிரிக்கப்படுகிறதா காஷ்மீர்?மின்னம்பலம் : சில வாரங்களாகவே காஷ்மீர் மாநிலத்தின் நிலவரம் பற்றி தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த மத்திய அரசு, வெகு விரைவில் காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த வருடமே மத்திய அரசு வட்டாரங்களில் இந்த பேச்சுகள் நடப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் வரும் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தன் உரையில் இதுபற்றி அறிவிப்பார் என்று இப்போது டெல்லியில் இருந்து தகவல்கள் வருகின்றன.
இதன்படி ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு பகுதியை ஒரு மாநிலமாகவும், புத்தமதத்தினரும், ஷியா முஸ்லிம்களும் அடர்த்தியாக வாழும் லடாக்கை தனி மாநிலமாகவும், சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீரை தனி மாநிலமாகவும் பிரிக்கக் கூடும் என்று கடந்த செப்டம்பர் மாதமே காஷ்மீர் மாநில தினசரி செய்தித் தாள்களில் மத்திய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வந்தன. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இதை செய்ய மோடித் திட்டமிட்டிருக்கிறார் என்றும் அப்போது பத்திரிகைகள் எழுதின. ஆனால் பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதல் அதையடுத்த இந்திய -பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில் காஷ்மீர் பிரிவினை தள்ளிப்போடப்பட்டது.

காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கும் செயல்திட்டத்துக்கு பிரதமர் மோடியின் முதல் ஆட்சியிலேயே பிரதமர் அலுவலக அதிகாரிகள் இறுதி வடிவம் கொடுத்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரம் இதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் இருப்பதாகவே தெரிகிறது. “பாஜகவால் இப்போதைய காஷ்மீர் மாநிலத்தில் தனியாக ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை. தேசிய மாநாட்டுக் கட்சியுடனோ அல்லது மெகபூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனோ சேர்ந்துதான் ஆட்சி அமைத்தாக வேண்டும். கடைசியில் மெகபூபாவுடன் பாஜக நடத்திய கூட்டணி ஆட்சியைக் கலைத்துதான் காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவந்தது பாஜக. இப்படி காஷ்மீர் கட்சிகளோடு சேர்ந்து அரசியல் அதிகாரத்தில் இருந்தால் பாஜக தனது கொள்கைமுழக்கமான அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை (காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் பிரிவு) ரத்து செய்யவே முடியாது. எனவே காஷ்மீரை வெவ்வேறு மாநிலங்களாகப் பிரித்து, ஜம்முவை மாநிலமாகவும், காஷ்மீர், லடாக் ஆகியவற்றை யூனியன் பிரதேசங்களாக மாற்றவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது” என்கின்றன காஷ்மீரி பத்திரிகைகள்.
தற்போதைய காஷ்மீர் மாநிலம் ஒரு லட்சத்து 1,387 சதுர கிலோ மீட்ட பரப்பளவு கொண்ட மிகப்பெரிய மாநிலமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய பரப்பு கொண்ட மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம் என்பதே மத்திய அரசு கூறும் வெளிப்படையான காரணமாக இருக்கிறது.
சில நாட்களாகவே காஷ்மீரில் ராணுவமும், விமானப் படையினரும் குவிக்கப்பட்டு வருகிறார்கள். அமர்நாத் யாத்த்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இந்திய அரசு சார்பில் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் இதுபோன்ற செய்தி சமூக தளங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசு தரப்பில் இதுபற்றி உரிய விளக்கம் இதுவரை தரப்படவில்லை.

கருத்துகள் இல்லை: