செவ்வாய், 30 ஜூலை, 2019

கர்நாடக அதிருப்தி எம் எல் ஏக்கள் கண்ணீர் .... சபாநாயகர் இப்படி பண்ணிட்டாரே..

Velmurugan P  tamil.oneindia.com :    | சபாநாயகர் இப்படி பண்ணிட்டாரே.. அதிருப்தி எம்எல்ஏக்கள் கண்ணீர்- 
பெங்களூரு: கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரும் சபாநாயகர் ரமேஷ்குமாரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தங்களது அரசியல் வாழ்க்கைக்கு இப்படி ஆகிப்போனதை எண்ணி மிகவும் வருத்தத்தில் உள்ளார்கள். 
அரசியல் எதிர்காலத்தை காப்பற்ற என்ன வழி உள்ளது என்று தீவிரமாக யோசித்து வருகிறார்கள். 
 கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 3 பேர் உள்பட 17 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்வதாக கடந்த சில வாரம் முன்பு அறிவித்தனர். அத்துடன் அவர்கள் மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கிக்கொண்டனர். ஆனால் கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமார் 17 பேரின் ராஜினாமாவை ஏற்கவில்லை. சமாதான முயற்சிகளை அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரும் ஏற்கவில்லை. ஆட்சி கவிழ்ந்தது ஆட்சி கவிழ்ந்தது 
 இதனால் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கடந்த வாரம் கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. 
இதனால் தற்போது பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. எடியூரப்பா முதல்வராகி உள்ளார். 
 
இந்த சூழலில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரையும் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் 2023ம் ஆண்டு வரை (அல்லது இந்த சட்டசபை கலையும் வரை) இடைத்தேர்தல்களில் பங்கேற்க முடியாது என்றும், அமைச்சரவையில் இடம் பெற முடியாது என்றும் சபாநாயகர் அறிவித்தார். 
 
இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜக தலைவர்கள் எடியூரப்பாவின் அமைச்சரவையில் இடம் அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.ஆனால் இப்போது அமைச்சரவையில் பங்கேற்க முடியாததோடு, எம்எல்ஏவும் ஆக முடியாது என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் வருத்தத்தில் உள்ளார்கள். 
 
இதனால் தங்கள் அரசியல் வாழ்க்கையை காப்பாற்ற என்ன வழிகள் உள்ளது என்பதை வழக்கறிஞர்களுடன் ஆராய்ந்து வரும் அவர்கள், உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.
 
இது தொடர்பாக அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்னா கூறுகையில், "சபாநாயகர் சொல்லிக்கொடுத்தமாதிரி செய்துவிட்டார். அப்படி இருக்கையில் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் எப்படி அடுத்த இடைத்தேர்தலிகளில் போட்டியிட முடியாது. இது தவறு என்று அவருக்கு தெரியாதா? முதல்கட்டமாக 3 பேரை தகுதி நீக்கம் செய்து எங்களை மிரட்டி பார்த்தார்கள். 
நாங்கள் ஒத்துப்போகாததால் எங்களையும் தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள் என்றார். 
சித்தராமையா உடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில எம்எல்ஏக்கள் தொடர்பு கொண்டு மீண்டும் காங்கிரசில் சேருவதற்கு முயற்சித்தாக கூறப்படும் புகாரை எம்எல்ஏ முனிரத்னா திட்டவட்டமாக மறுத்தார். 
 
இதனிடையே முனிரத்னா உள்பட சில தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூரு திரும்பினர். மற்றவர்கள் இன்று பெங்களூரு வருகிறார்கள். 
 
இதனிடையே 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எடியூரப்பாவுக்கு மெஜாரிட்டியை நிரூபிப்பது மிகவும் சுலபமாகிவிட்டது. சட்டசபையில் எம்எல்ஏக்களின் பலம் 207 ஆக குறைந்துவிட்டது. இதனால் 104 எம்எல்ஏக்கள் இருந்தாலேயே மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் 
தற்போது பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுதவிர சுயேட்சை ஒருவரும், பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் 107 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெற்றி பெறுவார்.

கருத்துகள் இல்லை: