சனி, 3 ஆகஸ்ட், 2019

குழந்தைகளின் கல்வியை கொல்லும் புதிய கல்வி கொள்கை....

Uma Anand : சென்னையில் , ஒரு தனியார் பள்ளியில் தோழியின் மகள் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.திடீரென்று,” உங்கள் குழந்தைக்கு அடிப்படை தெரியவில்லை. அதனால் ஐந்தாம் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பிற்கு மாற்றுகிறோம்” னு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
பதறி அடித்து பள்ளிக்கு சென்று கேட்டபோது பலருக்கும் இதுபோல் கடிதம் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
சில பெற்றோர்கள்(கிறுக்கு பிடித்த ஜன்மங்கள்) அதற்கும் சரி என்று சொல்லி இருக்கிறார்கள்
இத்தனைக்கும் அந்த குழந்தைகள் LKG ல் இருந்து அங்கேயே படிப்பவர்கள். இந்த வருடம்தான் இப்படி ஒரு நடவடிக்கை . ஏன்?
ஏனென்றால் புதிய கல்விக்கொள்கையின்படி 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு. அதனால்தான் 5 ம் வகுப்பில் இருந்து 3ம் வகுப்பிற்கு மாற்றப்படுகிறார்கள். இதைவிட கொடுமையாக ஒன்றாம் வகுப்பில் இருந்து weak students என்று ஒரு பிரிவை உருவாக்கி அவர்களுக்கு தனியாக கோச்சிங் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு குழந்தையின் பெற்றோர் சரியென்று சொன்னதும் நேற்றே ஒரு மாணவனை மூன்றாம் வகுப்பில் அமர வைத்துள்ளார்கள். மற்ற மாணவர்கள் தன்னை பார்த்து சிரிப்பதால் பள்ளிக்கு போகமாட்டேன் என்று அந்த பையன் மெற்றோரிடம் அழுதிருக்கிறான். ஒரு சிறுவனை என்ன மாதிரியான மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குகிறீர்கள். இன்னும் மற்ற பள்ளிகளிலும் இது தொடரக்கூடும். என்ன செய்யப்போகிறோம்??
முதல் பாடம் தேவைப்படுவது பெற்றோருக்குதான். சுயபுத்தியும், குழந்தையின் மனநிலையின் மீதும் அக்கறையுடைய எந்த பெற்றோராவது இதற்கு சரியென்று சொல்லமுடியுமா? தன் மகன் எப்படி உணர்வான் என்ற அறிவு கூட இல்லாமல் எப்படி சரியென்று சொல்லமுடிந்தது அந்த பெற்றோரால்? இதற்கு பெயர்தான் தரமா? இதைத்தான் உங்கள் குழந்தைகளுக்குத் தர விரும்புகிறீர்களா?
சிறு வயதில் இருந்தே கடுமையான மன நெருக்கடியில் வாழும் குழந்தை நாளை என்னவாகும் ?

கருத்துகள் இல்லை: