சனி, 3 ஆகஸ்ட், 2019

தமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசுக்கே திருப்பி தாரை வார்க்கும் அதிமுக அரசு!

சாவித்திரி கண்ணன் : இவர்களை நினைத்தாலே மனம் ரணமாகிறது!
மக்களின்  அத்தியாவசிய தேவைக்கென மத்திய அரசு தந்து கொண்டிருக்கும் நிதியோ யானைப்பசிக்கு சோளப்பொறி போல மிகவும் குறைவு தான்! ஆனால், அதைக் கூட செலவழிக்க துப்பின்றி, மத்திய அரசுக்கே திருப்பி தந்துள்ளது தமிழக அரசு!
இந்திய கணக்குத் தணிக்கை அதிகாரி சுட்டிக் காட்டியிருக்காவிட்டால் இதுவும் வெளியே தெரிந்திருக்காது.!
விளிம்பு நிலை அடித்தள தலித் மக்களுக்கு வீடுகட்டித் தரும் திட்ட நிதி ரூ 2,355 கோடி திருப்பி அனுப்பபட்டுள்ளது.
கிராமப் பஞ்சாத்துகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தரப்பட்ட நிதியில் ரூ 758 கோடி திருப்பி அனுப்பபட்டுள்ளது! – குடிநீருக்கு கூட வழியின்றி தவிக்கும் கிராமங்கள் எத்தனையெத்தனை…!
சிறப்பான வகையில் செயல்படும் பஞ்சாயத்துகளை ஊக்குவிக்க வழங்க வேண்டி நிதி ரூ 195 கோடி தரப்படாமல் திருப்பி அனுப்பபட்டுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதி ரூ 248 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது.

மகளீர் சுய உதவி குழுக்களின் தொழிற் முயற்சிகளுக்கு தர வேண்டிய ஒரு பெரும் நிதி திரும்ப தரப்பட்டுள்ளது!
தமிழக அரசு பள்ளிகளின் சிதிலமான கட்டிடங்களை சீரமைக்க, சுற்றுச் சுவர் இல்லாத பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் எழுப்பித் தர,கழிவறைகள் கட்டித் தர, மேல் நிலை கல்வி வளர்ச்சிக்கு செலவிட வேண்டிய நிதியான ரூ 1627 கோடி திரும்ப அனுப்பட்டுள்ளது! .- எத்தையெத்தனை பள்ளிகளில் பிள்ளைகள் ஒன்னுக்கு,இரண்டுக்கு போகக் கூட வழியின்றி வீடு திரும்பும் வரை அடக்கி வைத்துப்….படும் அவஸ்த்தைகள் கொஞ்சமா நஞ்சமா?
தேவைப்படும் இடங்களையும் ,பயனாளிகளையும் அடையாளம் காண முடியவில்லையாம்!
இதற்காகத் தானே அவர்களுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு வழங்கபட்டுள்ளது.
போயஸ் தோட்டத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவதிலும், கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியை எழில்பட அமைப்பதிலும் பயன் பெறப் போகும் பயனாளிகளை மட்டும் எப்படி கண்டடைந்தார்களாம்?
அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேறாமல் எத்தனையெத்தனையோ எளிய, வறிய தமிழக மக்கள் தவித்துக் கிடக்க, நிர்வாகத் திரானியற்று செலவழிக்க வேண்டிய நிதியை இப்படித் திரும்ப அளிக்கும் ஆட்சியாளர்களை இனி திரும்பவே முடியாத நிலைக்கு நாம் அனுப்பினால் தான் என்ன?
ராஜா ஜி : குடிமராமத்து - ஏரி கால்வாய் தூர்வாரும் பணத்தில் 70% பயன்படுத்தப்படவில்லை. தண்ணீர் எப்படி வரும்?

கருத்துகள் இல்லை: