செவ்வாய், 30 ஜூலை, 2019

திமுகவுக்கு எதிராக அதிமுக -அமமுக கூட்டணி!

டிஜிட்டல் திண்ணை: திமுகவுக்கு எதிராக அதிமுக -அமமுக கூட்டணி!மின்னம்பலம் :
மொபைல் டேட்டா ஆன்லைனில் இருந்தது. வாட்ஸ் அப் முதலில் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் வென்ற நிர்வாகிகள் பட்டியலை அனுப்பியிருந்தது. தொடர்ந்து செய்தி வந்தது.
“ஒரு வழியாக தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடவடிக்கைகள் முடிந்து புதிய நிர்வாகிகள் தேர்வாகிவிட்டனர். நேற்று (ஜூலை 29) நடந்த இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து மின்னம்பலத்தில் இன்று மதியப் பதிப்பில் [https://www.minnambalam.com/k/2019/07/30/43] (செய்தி) வெளியாகியிருக்கிறது.
இதன் படி பார் கவுன்சிலின் புதிய தலைவராக வழக்கறிஞர் அமல்ராஜ், துணைத் தலைவராக தஞ்சை வேலு கார்த்திகேயன், அகில இந்திய பார் கவுன்சிலுக்கான தமிழக உறுப்பினராக பிரபாகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அமல்ராஜ்- பிரபாகரன் -வேலு கார்த்திகேயன் கூட்டணி ஜெயித்த அதேநேரம் இந்தத் தேர்தலுக்காக திமுகவோடு நெருக்கமான பால் கனகராஜ், திமுக வழக்கறிஞரான விடுதலை ஆகியோர் அமைத்த கூட்டணிகள் வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறது.
இது குறித்து விசாரிக்கும்போதுதான் பார் கவுன்சில் பாலிடிக்சில் திமுகவை தனிமைப்படுத்த அதிமுக, அமமுக, பாமக எல்லாரும் ஒன்று சேர்ந்த வினோதம் அரங்கேறியிருப்பது தெரியவந்தது.

தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 உறுப்பினர்கள் தங்களுக்குள் கூடி தலைவர், துணைத் தலைவர், அகில இந்திய பார் கவுன்சிலுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் நடைமுறை. இதன்படி கடந்த வெள்ளிக் கிழமை வேட்பு மனு தாக்கல்.
இதற்கு முன்பே அமல்ராஜ்- சிட்டிங் பார் கவுன்சில் அகில இந்திய உறுப்பினர் பிரபாகரன் -வேலு கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாக தேர்தலை சந்திக்க முடிவு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட 25 உறுப்பினர்களில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். `இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெறுவது என்ற போர்வையில் நிர்வாகிகள் தேர்தலில் ஆதரவு திரட்டும் வேலையிலும் இறங்கினார்கள்.
அந்த வகையில், அமல்ராஜ் கூட்டணியினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் தினகரன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி என பல தலைவர்களையும் சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு கேட்டனர். பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு 25 உறுப்பினர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். மேலும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேலு கார்த்திகேயன் தஞ்சாவூர் காரர், அமமுக கட்சியைச் சேர்ந்தவர். இந்த அடிப்படையில் மேற்குறிப்பிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவினை உறுதிப்படுத்திக் கொண்ட அந்த அணியினர் திமுக தலைவர் ஸ்டாலினையும் பார்த்து ஆதரவு கேட்டனர்.
ஆனால் திமுகவை சேர்ந்தவரும் முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான விடுதலை இந்த 25 உறுப்பினர்களில் ஒருவராக இருப்பதாலும், அவர் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முடிவில் இருந்ததாலும் அமல்ராஜ் கூட்டணியிடம் ஸ்டாலின் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை.
இதற்கிடையில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பால்கனகராஜ் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, ‘வேறு எந்தத் தலைவரையும் நான் சந்திக்கவில்லை. உங்களைதான் சந்திக்கிறேன்’ என்று சொல்லி தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டார். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. திமுகவைச் சேர்ந்த விடுதலை நேர்மையான முறையில் தனது நீண்ட நெடிய வழக்கறிஞர் அனுபவத்தின் செல்வாக்கு அடிப்படையில் ஜெயித்தவர் என்பதால் அவருக்காக ஓட்டளிக்க சுமார் ஆறு பேர் வரை தயாராக இருந்தனர். எனவே ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கேட்டால், அவர் உத்தரவின் பேரில் விடுதலையின் வாக்கும், விடுதலையின் ஆதரவு வாக்குகளும் தனக்குக் கிடைக்கும் என்று கணக்குப் போட்டார் பால் கனகராஜ். இந்த வேண்டுகோளை அவர் ஸ்டாலினிடம் வைத்துள்ளார்.
ஆனால் அதற்கு முன்பே தான் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினருக்காக நிற்கப் போவதாக ஸ்டாலினிடம் விடுதலை தெரிவித்துவிட்டார். இதை பால் கனகராஜிடம் சொல்லி விடுதலைக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டிருக்கிறார் ஸ்டாலின். அதேபோல செந்தில்பாலாஜியிடம் சொல்லி தஞ்சை வழக்கறிஞர் வேலு கார்த்திகேயனை பால் கனராஜ் டீமுக்கு ஆதரவு அளிக்கும்படியும் பேசச் சொல்லியுள்ளார் ஸ்டாலின். அதையடுத்து வேலூர் தேர்தல் பணியில் இருந்த செந்தில்பாலாஜி, தனது பழைய பழக்கத்தின் அடிப்படையில் வேலு கார்த்திகேயனோடும் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று வேட்பு மனு தாக்கல் செய்தபோது திடீர் திருப்பமாக பால்கனகராஜ் அணியின் சார்பில் பால் கனகராஜ் தலைவர் பதவிக்கும், வேல்முருகன் துணைத் தலைவர் பதவிக்கும், டி. செல்வம் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கும் மனு தாக்கல் செய்கின்றனர். மூத்த வழக்கறிஞரான விடுதலையை அவர்கள் முன்மொழியவில்லை. இதனால் அதிர்ச்சியான விடுதலை அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு தனது சொந்த ஆதரவு உறுப்பினர்கள் முன்மொழிதலோடு வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். திங்கள் கிழமை காலை 10.30 மணி வரை வேட்பு மனு வாபஸ் செய்யலாம். 11. 30 முதல் 3 மணி வரை தேர்தல்.
இந்த சூழலில், ‘விடுதலை தனியாக நின்றால் தோற்கும் சூழல் உண்டாகிவிடும். எனவே அவரை எங்கள் அணிக்கு ஆதரவு அளிக்கச் சொல்லுங்கள். நாம் ஜெயித்துவிடலாம். அமல் ராஜ் அணியினர் அதிமுக, பாமக,அமமுக ஆதரவு பெற்றிருக்கிறார்கள். எனவே நாம் ஒன்றாக இருக்க வேண்டும். விடுதலையை வாபஸ் வாங்க சொல்லுங்கள்’ என்று ஸ்டாலினுக்கு பால் கனகராஜ் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து விடுதலையிடம் பேசிய ஸ்டாலின், ‘சூழல் எப்படி இருக்குனு பார்த்து நடந்துக்கங்க’ என்று சொல்லியிருக்கிறார். இதன் பொருளைப் புரிந்துகொண்ட விடுதலை கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகினார்.
அப்படியும் தேர்தல் முடிவுகளில் அமல்ராஜ் அணியினர் வென்றார்கள். தலித் சமூகத்தைச் சேர்ந்த அமல்ராஜ் தலைவராக வர, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த வேலு கார்த்திகேயன் துணைத் தலைவராகிறார். இவர்களுக்கு பாமக வழக்கறிஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு சமூக ஒற்றுமையையும் இந்த பார் கவுன்சில் தேர்தல் பறைசாற்றுகிறது.
இன்னொரு பக்கம் பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தலில் கோடிகள் விளையாடியிருக்கின்றன என்று சமூக தளங்களில் மூத்த வழக்கறிஞர்கள் புலம்பியிருக்கிறார்கள். தலைவர் பதவிக்கான போட்டியில் பத்து கோடி ரூபாய் வரைக்கும் இறைக்கப்பட்டதாகவும் , அடுத்தடுத்த பதவிகளுக்கு சில கோடிகள் செலவானதாகவும், நட்சத்திர விடுதிகளில்தான் இந்த வாக்குகளுக்கான பேரம் நிகழ்ந்ததாகவும் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
இது ஒருபக்கமிருக்க, 25 உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட்ட வழக்கறிஞர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் ஐம்பது லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தோற்றுவிட்டார்கள். 25 பேரில் ஒருவராகிவிட்டால், சில கோடிகளை ஒரே இரவில் ஈட்டிவிடலாம் என்ற கணக்கில்தான் அவர்கள் ஐம்பது லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு பார் கவுன்சில் தேர்தலில் அரசியலும், பணமும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடியிருக்கின்றன. எனினும் வினோதக் கூட்டணியே வெற்றியை தீர்மானித்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ச் அப்

கருத்துகள் இல்லை: