ஏற்கனவே தமிழகம் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 43 சதம்தான் தருகிறார்கள் |
பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தில் மத்திய மோடி அரசால் 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகியவை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாகப் புதிய வடிவிலான நோட்டுகள் அச்சிடப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டன. இந்த நடவடிக்கையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பல இயங்க முடியாமல் முடங்கின. பணமதிப்பழிப்பின் பாதிப்புகள் சீராகி இயல்பு நிலை திரும்பக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்நிலையில், பணமதிப்பழிப்பால் இந்தியப் பொருளாதார வளர்ச்சியிலும் தொழில் துறை உற்பத்தியிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜூலை 02ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “தொழில் துறை உற்பத்தியில் சில பாதிப்புகள் ஏற்பட்டன. அது பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் மட்டுமே ஏற்படவில்லை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க அரசு தரப்பிலிருந்து பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்தது. அதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்போதும் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக நாம் இருக்கிறோம். அமெரிக்க வளர்ச்சி 2 சதவிகிதமாகவும், சீனாவின் வளர்ச்சி 6 சதவிகிதமாகவும் இருக்கும் நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது” என்றார். இந்திய வளர்ச்சி மற்றும் முதலீடுகளைப் பெருக்குவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐந்து பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தனது பதிலில் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக