ஞாயிறு, 30 ஜூன், 2019

24,000 வருடங்கள் .... அமெரிக்காவை கலங்கடிக்கும் அணுக்கழிவு!

விகடன் - துரை நாகராஜன்  :அமெரிக்கா 2,200 டன் அணுசக்தி கழிவுகளை
ஒவ்வோர் ஆண்டும் அணு உலைகள் மூலமாக தயாரித்துக் கொண்டிருக்கிறது.
இவற்றை மறுசுழற்சி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை
அணுக்கழிவுகளைப்
பாதுகாப்பாக வைப்போம் என அந்நாட்டு அரசாங்கம் சில ஆண்டுகளுக்கு முன் உறுதி அளித்திருந்தது. ஆனால், அணுக்கழிவுகளை சேமிப்பதற்கான ஒரு பாதுகாப்பான இடம் இன்னும் அரசாங்கத்தால் ஒதுக்கப்படவில்லை. இப்போது பல இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் அணுக்கழிவு நாடெங்கிலும் கதிரியக்கத்தை உமிழ்ந்து வருகிறது. அவற்றில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் சான் ஓனோஃபர் அணுமின் நிலையமும் ஒன்று.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நகரம் சான் கிளெமெண்ட். அந்நகரத்தில் அற்புதமான கடற்கரையில் செயல்படாத சான் ஓனோஃபர் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. மொத்தமாக மூன்று உலைகளைக் கொண்ட அம்மின் நிலையம் 2013 - ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.
ஆனால், இவற்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அணுக்கழிவுகளை இதுவரை என்ன செய்வதென்றே தெரியாமல் வைத்திருந்தார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் அணுக்கழிவுகள் உறங்கிக் கொண்டேதான் இருக்கின்றன. இதனால் இப்போது கிளம்பியிருக்கும் பிரச்சனைதான் கொஞ்சம் பீதியைக் கிளப்பும் ரகமாக இருக்கிறது.

அணு உலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அணு உலைக் கழிவுகள் அங்கு வேலை செய்யும் பணியாளர்களைப் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது.
இது அமைந்துள்ள இடம் பசிபிக் பெருங்கடலின் ஓரம். இதன் 75 மைல் தொலைவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும், சாண்டியாகோ நகரமும் அமைந்துள்ளன. அணு உலைப்பகுதியில் 85 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் அம்மக்கள் வழக்கம்போல தங்கள் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்கள். இவ்வளவுக்கும் மையமாகத்தான் சான் ஓனோஃபர் அணு மின் நிலையம் அமைந்துள்ளது.
இந்த அணு உலை இயங்கியபோது 1.40
மில்லியன் வீடுகளுக்கு மின்சாரத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இப்போது அணு உலைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அணுக்கழிவுகள் ஓய்வை முடித்துக் கொண்டு தனது பணியினை தொடங்கக் காத்திருக்கின்றன. இவற்றை குளிர்விப்பது நின்று விட்டால் அது விழித்துக் கொள்ளும்.
அப்போது நேரும் துயரங்கள் கொடூரமானதாக இருக்கும்.
இந்த அணுக்கழிவுகளில் உள்ள சீசியம் மற்றும் ஸ்ட்ராண்டியம் செயலிழக்க 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால், புளுட்டோனியம் செயல் இழக்க 24,000
ஆண்டுகள் ஆகும். அந்த 24 ஆயிரம் ஆண்டுகள் இந்த ஆலையை எந்த ஒரு பேரிடரும் தாக்காமல் இருக்க வேண்டும். அப்போதுதான் அணுக்கழிவுகள் முழுமையாக செயலிழக்கும்.
ஒரு அணு உலை ஆரம்பிக்கும் போது குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியூம் என்று சொல்லி ஆரம்பிக்கப்படுகிறது.
ஆனால், அதில் மீதமாகும் அணுக்கழிவுகளை அகற்ற 24 ஆயிரம் வருடங்கள் ஆகும் செலவுக் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. அதைக் கணக்கிட்டால் அணு உலை மின்சாரமானது, மாற்று சக்தி மின்சாரத்தை விட 10 மடங்கு செலவைத் தரும்.
இதைப்பற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பேசும்போது,
" கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை மேலாண்மை செய்யும் தொழில் நுட்பம் இல்லை.
அணு உலைகள் எப்போதும் உறங்கும் அணுகுண்டுகள்தான்.
அணுக்கழிவுகளை செயலிழக்க வைக்க புதிய தொழில் நுட்பங்கள் இல்லாமல் அமெரிக்காவே திணறும்போது, இந்தியாவில் 22 அணு உலைகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதும், இன்னும் 20 அணு உலைகள் புதியதாக வரப்போவதும் சற்று கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது." என்றார்.
-ஏ.பி.ஜனகன்

கருத்துகள் இல்லை: