சனி, 6 ஜூலை, 2019

துயரம் தாளாமல் சிரிக்க முயன்று சிரிக்க முடியாமல் ... ஒரு அகதி சிறுமியின் ...


சுமதி விஜயகுமார் : ஒரே வயதை ஒத்த மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை நிம்மதியாக உறங்கிக்கொண்டும், ஒரு குழந்தை சிரித்தபடி விளையாடி கொண்டும், இன்னொரு குழந்தை ஏதோ ஒரு வருத்தத்தில் அழுது கொண்டிருந்தால் முதலில் எந்த குழந்தையை அள்ளி எடுத்து அனைக்க தோன்றும்? நிச்சயமாய் அழுது கொண்டிருக்கும் குழந்தையை தான் தூக்கிக்கொள்ள தோன்றும். நண்பர்களுடன் இருந்து விட்டு வீட்டுக்கு வந்ததும் நம் வேலைகளை பார்க்க துவங்கி விடுவோம். ஒரு வேலை அந்த நண்பர் ஆழ்ந்த துயரத்தில் இருந்தாலோ வீட்டுக்கு வந்தும் அவரையே நினைத்து கொண்டிருப்போம். துக்கத்தை போல் உயிரினங்களை பாதிப்பது வேறெதுவும் இல்லை.
ஒருமுறை ஒரு புலி ஒரு குரங்கை பசிக்காக கொன்று விட்டது. அது இறந்தவுடன் தான் அதன் வயிற்றில் இறுக்க அனைத்த படி அதன் குட்டி இருந்தது . அதை பார்த்த புலி தன் பசியை மறந்து அந்த குரங்கு குட்டியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அன்று இரவு முழுவதும் அதற்கு பாதுகாப்பாக அந்த குட்டி குரங்கை அதன் அருகிலேயே வைத்து பாதுகாத்து கொண்டிருந்தது. துக்கம் என்பது மனித மொழி மட்டும் அல்ல . அது உலக மொழி.

'வானம் கீழே வந்தால் என்ன' என்ற பாடலில் ஒரு வரி வரும்.'பறவை மிருகம் அழுவது இல்லை' நிஜமாக பறவையும் மிருகமும் அழுவதில்லையா? சைவம் சாப்பிடுபர்களிடம் நீங்க ஏன் அசைவம் சாப்பிடுவதில்லை என்று கேட்டால் உயிர் வதை பாவம் என்பார்கள். அசைவம் விரும்பி சாப்பிடுபவர்கள் கூட அவர்கள் சாப்பிடும் அந்த உயிரினம் அதிக துன்பப்படாமல் இறந்திருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். செடி, கொடிக்கு கூட உயிர் இருக்கிறதே மிருகங்களுக்கு மட்டும் ஏன் பாவம் பார்க்கிறீர்கள் என்று கேட்டால் செடி, கொடியை பறித்தால் ரத்தம் வராது என்பார்கள். உணர்ச்சிக்கும் வலிக்கும் ஆதாரம் தேவையா என்ன ?
பல புகைப்படங்களையும் பார்த்துக்கொண்டே வரும் போது அதனிடையே வரும் அந்த சோகம் தோய்ந்த முகத்தை பார்க்கும் பொழுது அடுத்த படத்தை திருப்பும் முன்னர் அதனையே கூடுதல் நேரம் பார்ப்போம். தாய் பால் போல துக்கமும் தூய்மையானது. அழுகை, கண்ணீர் ,சிரிப்பு ,வலி என்று எதையும் கட்டுப்படுத்தலாம், துக்கத்தை மட்டும் ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும் துக்கம் , நம்மை எதோ ஒரு வகையில் மாற்றி விட்டு தான் போகிறது.
துக்கம் நிறைந்த அந்த கண்கள் , அது மனிதனுடையது ஆனாலும் விலங்கினம் ஆனாலும், ஈர்ப்பது போல் வேறு எந்த அழகிய கண்களும் ஈர்ப்பதில்லை. எந்த ஒரு புரட்சிக்கும் துக்கம் தான் ஆரம்ப புள்ளி. ஒரு ஆணும் பெண்ணும் தழுவி கொண்டிருக்க ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் அந்த ஆணோ பெண்ணோ அழுதுகொண்டு தழுவிக் கொண்டிருந்தால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும், துக்கம். நாம் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் . எதிர்பாராத நேரத்தில் வரும் துக்க செய்தியை கேட்டதும் அருகில் இருப்பவர் கதறி அழுது நம் தோல் சாயும் பொழுது அவரின் இனம், மொழி , மதம் , ஜாதி கடந்து அவரை அனைத்து கொள்வோம். துக்கத்தை போல் மனிதத்தை நொடி பொழுதில் உணர்த்துவது ஏதுமில்லை.
ஒரு அகதியான சிறிய பெண் குழந்தையிடம் பல கேள்விகள் கேட்கும் பொழுது சிரித்து கொண்டே பதில் சொல்லி கொண்டு வருவாள். சாப்டியா என்று கேட்டதும் துக்கம் தாங்காமல் சிரிக்க முயன்று சிரிக்க முடியாமல் கலங்கிய கண்களுடன் இல்லை என்பதை தலை அசைத்து சொல்வாள். அவள் சொல்ல நினைத்ததை விட ஓராயிரம் வார்த்தைகளை அந்த கண்கள் பேசியது. இதயம் துடித்துக்கொண்டிருக்கும் போதே உயிர் பிரிவது போல் இருப்பது துக்கத்தின் போதுதான்.
துக்கத்தை போன்ற ஒரு தூய உணர்வு வேறெதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை: