வெள்ளி, 5 ஜூலை, 2019

நந்தினிக்கு ஜூலை 5 ந் தேதி திருமணம் நடக்கவேண்டிய நிலையில் தீதிபதி... எஸ் வி சேகருக்கும் ராஜாவுக்கும் ஒரு நீதி

சாவித்திரி கண்ணன் : ஒரு நாள் எதிர்பாரதவிதமாக நண்பர் ஒருவர் தன்னுடன் இரண்டு பேரை என் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
’’இவங்க ரெண்டு பேரும் மது ஒழிப்பு போராளிகள் ஒங்க வீட்ல இன்னைக்கு இரவு தங்க வைக்க முடியுமா? என்றார்.
’’தாரளமாக..தங்கட்டும்’’ என்றேன்.
அன்று தான் அவர்களிடம் பேசி பழகினேன். தந்தை ஆனந்தனும், மகள் நந்தினியும் நான் பேசி உணர்ந்த வகையில், கிஞ்சித்தும் சுயநலமில்லாத , பிரமிக்க தக்க வகையிலான மனஉறுதி கொண்டவர்கள் என உணர்ந்தேன்.
அவர்களுக்கு தனி அறை தந்தேன். அதிகாலை எழுந்து,வெளியே சென்று சோப்பு வாங்கி வந்து குளித்தார்.
’’ஏன் பாத்ரூமில் தான் சோப்பு இருந்ததே’’ என்றேன்.
’’உங்களுக்கு எதுக்கு சிரமம் தரணும்?’’ என்றவாறு குளித்து உடனே புறப்பட்டனர் இருவரும்!
மிகவும் வற்புறுத்தியதால் கொஞ்சமாக சிற்றுண்டி சாப்பிட்டு புறப்பட்டனர்.
’’எங்கே செல்கிறீர்கள்?’’
’’திருவான்மியூர் தொடங்கி திருவல்லிகேணி வரை இன்று பிரச்சாரம் செய்தவண்ணம் நடக்கவுள்ளோம்’’
’’உங்கள் பிரச்சாரத்தை மக்கள் கேட்கிறார்களா?’’

’’நாங்கள் மக்கள் கூட்டத்திடம் பேசுவதில்லை . எதிர்படுவோரிடமும், எங்கள் பிரச்சார வாசகத்தை பார்த்து ஏதாவது பேச்சு கொடுப்பவர்களிடமும் பேசுகிறோம். அடுத்த வாரம் போயஸ் தோட்டம் முன்பு போராட்டம் அறிவித்துள்ளோம்’’
இது நடந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு!
இதற்கு பின்பு எத்தனை,எத்தனையோ போராட்டங்கள்..! கைதுகள் சிறை வைப்புகள்..என தொடர்ந்து பார்க்கிறேன். எப்போதாவது தொலைபேசியில் பேசுவதுண்டு. தொடர்ந்து எனக்கு வாட்ஸ் அப் வந்து கொண்டுள்ளது.
இவர்கள் இருவரையும் தங்கள் இயக்கத்தில் சேரும்படி பலரும் அழைத்து பேசியுள்ளனர்.ஆனால், எந்த இயக்கத்தின் கட்டுபட்டிற்குள்ளும் சிறைபட அவர்களுக்கு விருப்பமில்லை என்பது மட்டுமல்ல, தங்கள் அயராத பொது நலப் போராட்டத்திற்கான எந்த பிரதிபலனையும் அவர்கள் எதிர்பார்ப்பவர்களுமல்லர்.
அவர்களை அழைத்து யாரும் பாராட்டுக் கூட்டம் இது வரை போட முடிந்ததில்லை..!
இந்த இருவரும் தான் இது வரை ’கர்மயோகிகள்’ என நினைத்திருந்தேன். ஆனால்,இப்போது தான் தெரிகிறது, நந்தினியின் வருங்கால கணவரான குணா ஜோதிபாசுவும்,தங்கை நிரஞ்சனாவும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை! இவர்கள் இருவரும் தற்போது போராட்ட களத்தில் இறங்கிவிட்டனர்.
அப்படி என்ன தான் நந்தினி குற்றமிழைத்தார்?
நீதிபதியின் முன்னிலையில் அரசு தரப்பில் சாட்சியாக வந்த போலீசிடம் நந்தினி கேட்டது’’ டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுவது போதை பொருளா? உணவுப் பொருளா?’’ என கேட்க,
உடனே கோர்ட், வழக்கிற்கும்,இந்த கேள்விக்கும் தொடர்பு இல்லை என அதட்ட,
ஆனந்தன் அவர்கள் பொறுமையுடன், வழக்கிற்கு தொடர்புடையது தான் எனக் கூறி, ஐ பி சி 328 பற்றி வாதிட தொடங்கியதும், அதை ஏற்க மறுத்த நீதிமன்றம்...., நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்துள்ளது.
இதில்,இவர்கள் மன்னிப்பு கேட்டால் ஜாமின் தந்து விடுவிக்கலாம் என்றார் நீதிபதி.
ஆனால், தவறு செய்தது நாங்கள் அல்ல, அரசும் ,அதற்கு துணை போகும் சம்பந்தப்பட்ட நீதியரசரும் தான். இதற்காகத் தான் சிறை என்றால், எத்தனை நாட்கள் சிறையில் அடைத்தாலும் சந்திக்க தயார் என்று இருவரும் கூறிவிட்டனர்.
தற்போது இந்த இருவருக்கும் ஆதரவாக நிரஞ்சனா,குணா ஜோதிபாசு இருவரும் போராடுகின்றனர்.
சிறையில் நந்தினி மூன்று நாட்கள் உண்ணாவிரதமும் இருந்துள்ளார்.
ஜூலை 5 ந் தேதி திருமணம் நடக்க வேண்டிய.பொது நலன் விரும்பியதற்காக நிலையில் ஒரு குடும்பமே சிறையிலும் ,போராட்ட களத்திலும் தனித்து விடப்பட்டுள்ளது.
தமிழக கட்சிகளில் மிகச் சிலவே, இந்த பிரச்சினையில் எதிர்வினை ஆற்றியுள்ளன. எல்லா கட்சிகளும் பொது நல அமைப்புகளும் இவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இதற்காக என்ன செய்ய முடியுமோ அதை உடனே செய்தாக வேண்டும்!
நந்தினி உள்ளிட்ட இவர்கள் யாரும் தனி மனிதர்களில்லை!
தமிழகத்தின் தவப்புதல்விகள்,புதல்வர்கள்!

கருத்துகள் இல்லை: