முதல் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 11
2ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 18
3ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 23
4ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 29
5ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 6
6ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 12
7ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 19
மின்னம்பலம் : 17ஆவது மக்களவைக்கான தேர்தல் நடைபெறும் நாள், வாக்குகள் எண்ணப்படும் நாள், தேர்தல் விதிமுறைகள் குறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல்களை வெளியிட தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (மார்ச் 10) மாலை 5.00 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். நியாயமான மற்றும் சுதந்திரமான முறையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய சுனில் அரோரா, “மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 8.43 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 1.5 கோடி வாக்காளர்கள் 18 முதல் 19 வயதுடையவர்கள்” என்றார்.
தேர்தல் முன்னேற்பாடு பணிகளுக்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட்டதாக கூறிய சுனில் அரோரா, “நிலையான செயல்முறையில் பணிகள் நடந்து வருகின்றன. தேர்தலை சுமுகமாக நடத்த முதலில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். எல்லா வாக்குச் சாவடிகளிலும் இம்முறை யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை அறிய ஒப்புகைச் சீட்டு அளிக்கப்படும். இம்முறை 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்” என்றார்.
தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், தேர்தல் குறித்த விழிப்புணர்வுக்காக வாக்காளர் வழிகாட்டி ஒவ்வொரு வீட்டுக்கும் தரப்படும் எனவும் கூறிய சுனில் அரோரா, “எந்த வாக்காளருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை தெளிவாக அறிய வாக்காளரின் புகைப்படம் ஒட்டிவைக்கப்படும். நாடு முழுவதும் தோராயமாக 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. கடந்த தேர்தலில் இவற்றின் எண்ணிக்கை 9 லட்சமாக இருந்தது. வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகளை மறைக்க கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளை கட்டாயமாகப் பயன்படுத்தக்கூடாது. கூகுள், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட அனைத்து தளங்களும், அரசியல் கட்சி விளம்பரங்களுக்கு சான்றிதழ் கொடுக்கப்படும் என கூறியுள்ளன. அனைத்து தளங்களிலும் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா என கண்காணிக்கப்படும்” என்றார்.
தேர்தல் எப்போது தொடங்கி எப்போது முடிகிறது?
தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும். முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி, 7ஆம் கட்ட தேர்தல் மே 17ஆம் தேதி முடிவடையும். மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நாள் மார்ச் 25. தேர்தலில் விதிமுறைகள் மீறப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும்” என்றார்.
முதல் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 11
2ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 18
3ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 23
4ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 29
5ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 6
6ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 12
7ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 19
தமிழ்நாட்டுக்கு எப்போது தேர்தல்?
ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதி மக்கள் வாக்களிக்கிறார்கள். 2ஆம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கும், 3ஆம் கட்ட தேர்தலில் 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கும், 4ஆம் கட்ட தேர்தலில் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கும், 5ஆம் கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கும், 6ஆம் கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கும், 7ஆம் கட்ட தேர்தலில் 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கும் 2ஆம் கட்ட தேர்தலில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாசல பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலங்கானா, உத்தரகாண்ட், அந்தமான் நிகோபார், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டமன் மற்றும் டையூ, லட்சத் தீவுகள், டெல்லி, மற்றும் சண்டிகர் ஆகிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு மே மாதத்தோடு 6 மாதம் முடிவடையவுள்ள நிலையில், இன்றைய அறிவிப்பில் ஜம்மு காஷ்மீர் சட்ட மன்றத் தேர்தல் தேதியும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு இப்போது தேர்தல் நடத்தப்படாது என சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்த்ரா மற்றும் அசோக் லவாசா ஆகியோரும் உடனிருந்தனர்.
தேர்தல் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்னதாக வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும் எனவும், புதிய வாக்காளருக்கான உதவி எண்ணுக்கு 1950ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் சுனில் அரோரா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக