சனி, 16 மார்ச், 2019

நெடுநல்வாடை: நமக்கான சினிமாவை நாமே எடுக்கலாம்!


நெடுநல்வாடை: நமக்கான சினிமாவை நாமே எடுக்கலாம்!
மதரா- மின்னம்பலம் : செல்வக்கண்ணன் இயக்கத்தில் பி ஸ்டார் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் நெடுநல்வாடை. பூ ராம் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் எல்விஸ் அலெக்ஸாண்டர், அஞ்சலி நாயர் இணைந்து நடித்துள்ளனர்
தன் விருப்பப்படி மணம் முடித்துச் சென்ற மகளையும் அவளது இரு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பு வயதான விவசாயி செல்லையாவுக்கு வந்து சேர்கிறது. இதற்கு தன் மகன் கொம்பையா (மைம் கோபி) எதிர்ப்பு தெரிவிக்க அதையும் மீறி அவர்களை வளர்த்தெடுக்கிறார். குழந்தைகளை படிக்கவைத்து ஆளாக்குகிறார். பேரன் இளங்கோ (அலெக்ஸாண்டர்) படித்து நல்ல வேலைக்கு சென்று தனக்குப் பின் அவனது குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரது கனவாகவும், ஒரே விருப்பமாகவும் இருக்கிறது.


தாத்தா சொல்லைத் தட்டாத இளங்கோ , அமுதா (அஞ்சலி நாயர்) மேல் ஏற்பட்ட காதல் காரணமாக அவரையும் மீறி அமுதாவை கைபிடிக்க எண்ணுகிறார். அதன் பின்விளைவுகளை அறிந்து தாத்தா மறுக்கிறார். இளங்கோ காதலியை கரம் பிடித்தாரா, தாத்தாவின் ஆசையை நிறைவேற்றினாரா என்ற கேள்விகளுக்கு விடையாக திரைக்கதை விரிகிறது.
தமிழ் சினிமாவில் நெல்லை வட்டார திரைப்படங்கள் என்றால் டாடா சுமோவில் மீசையை முறுக்கிக் கொண்டுவரும் ரவுடிகளே கதை மாந்தர்களாக இருந்தந்தை சமீபகாலமாக சில படங்கள் மாற்றிவருகின்றன. அதில் நெடுநல்வாடைக்கும் முக்கிய இடம் உண்டு.
அலெக்ஸாண்டர், அஞ்சலி நாயரின் காதல் கதை திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்தாலும் செல்லையாவாக வரும் பூ ராம் தான் கதையின் மையமாக விளங்குகிறார். தன் கதாபாத்திரத்தின் கணத்தை உணர்ந்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் பூ ராம். விரட்டி வந்து காதலிக்கும் சில தமிழ் சினிமா கதாநாயகிகளின் வார்ப்பில் அஞ்சலி நாயரின் கதாபாத்திரம் அமைந்திருந்தாலும் அவரது அணுகுமுறை, நடிப்பு அதை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. காதலால் நாயகனைச் சுற்றி வளைப்பதிலும், யாரையும் எதிர்த்து பேசும் முன் கோபத்திலும் கவர்கிறார். இறுதிக்காட்சிகளில் உணர்ச்சிகரமான நடிப்பையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். அலெக்ஸாண்டருக்கு நல்ல பிள்ளை கதாபாத்திரம் என்றாலும் பெரும்பாலான காட்சிகளில் ஒரே மாதிரியான தட்டையான நடிப்பையே வெளிப்படுத்துகிறார்.

படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை. கொம்பையாவாக வரும் மைம் கோபிக்கும், மருது பாண்டியனாக வரும் அஜய் நட்ராஜுக்கும் அதற்கான தோரணைகள் கொடுக்கப்பட்டாலும் சூழலே வில்லனாக நிற்கின்றன. நம்பியாக நடித்திருக்கும் ஐந்து கோவிலானாக்கு முக்கியத்துவமிக்க கதாபாத்திரம். அதை கச்சிதமாக செய்துள்ளார். அந்தப் பகுதிகளைச் சார்ந்தவர்களே பெரும்பாலான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால் காட்சிகள் நேரில் பார்க்கும் உணர்வைத் தருகின்றன.
ஜோஸ் பிராங்க்ளின் இசை கதையோடு இயைந்து பயணிக்கிறது. கதையை பாடல் வரிகள் வாயிலாக விளக்குகிறார் வைரமுத்து. கரும்புத்தோட்டம், கிணற்றடி, தெருக்கள், வீடு, கருப்பசாமி கோவில் என அந்தப் பகுதியின் நிலப்பரப்பை இயல்பான ஒளியில் காட்சிப்படுத்தியுள்ளார் வினோத் பிரசன்ன சாமி. படத்தொகுப்பில் காசி விஸ்வநாத் இன்னும் கறாராக செயல்பட்டிருக்கலாம்.
நகைச்சுவைக்காகவே திருநெல்வேலி வட்டார மொழி திரைப்படங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சினிமாவுக்கென்று பேசப்படும் இந்த மொழிக்கும் மக்கள் பேசும் மொழிக்குமான வேறுபாடு மிக அதிகம். திருநெல்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வட்டார மொழி ஒவ்வொரு பகுதிக்கும் சற்று வித்தியாசப்படும். பிரத்யேக வார்த்தைகள் ஒவ்வொரு பகுதிகளிலும் புழங்கப்படும். அதில் சங்கரன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதியின் வார்த்தைகளை, வட்டார வழக்கை திரைக்கு கடத்தியுள்ளார் செல்வக்கண்ணன்.
1988ஆம் ஆண்டு வெளியான இத்தாலி திரைப்படம் சினிமா பேரடைசோவால் ஊக்கம் பெற்றதாக படத்தின் தொடக்கத்தில் காட்டப்படுகிறது. அடிப்படையில் நெடுநல்வாடையும் சினிமா பேரடைசோவும் வெவ்வேறானவை.
உலக சினிமாக்களால் பாதிக்கப்பட்டு அதை அப்படியே தமிழுக்கு கடத்திய பல படங்கள் உள்ளன. மொழிகடந்து அத்தகைய படங்கள் ஈர்க்க, தமிழ்ப் பதிப்பு படங்களோ ஒவ்வாமையை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் மனிதர்களுக்கான உணர்வுகள் ஒன்றாக இருந்தாலும் அங்குள்ள நிலவெளி, சூழல், சந்திக்கும் பிரச்சினைகள் முற்றிலும் வேறானதாக உள்ளன. ஆனால் சினிமா பேரடைசோவின் அடிநாதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, தான் பார்த்து பழகிய மனிதர்களின் கதையில் அதைப் பொருத்தி, முழுக்க மண்ணின், மக்களின் சினிமாவாக மாற்றியுள்ளார் இயக்குநர். டைட்டிலில் சினிமா பேரடைசோவின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்திருந்தாலும் அப்படத்தின் நினைவு வருவது சந்தேகமே. இருப்பினும் நேர்மையுடன் அதை பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

பாசம், குடும்ப உறவுகள், காதல், பகை என பல தளங்களில் கதை பயணிக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் நடைபெறும் சண்டைக் காட்சி, பாடல்காட்சிகள் தவிர பெரும்பாலும் தான் நேரில் பார்த்த சம்பவங்களை காட்சிகளாக்கியிருக்கிறார் இயக்குநர். தான் பழகிய மனிதர்களை கதாபாத்திரங்களாக மட்டுமல்லாமல் நடிகர்களாகவும் மாற்றியுள்ளார்.
அந்த மண்ணுக்கேற்ற கதையை அந்த மக்களைக் கொண்டே சிறந்த படைப்பாக உருவாக்க இயக்குநர் செல்வகண்ணனுக்கு பின்னால் அவரது கல்லூரி மாணவர்கள் ஐம்பது பேர் தயாரிப்பாளர்களாக உடன் நிற்கின்றனர். தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் நடைபோட நல்ல தொடக்கம் இந்த நெடுநல்வாடை.

கருத்துகள் இல்லை: