வெள்ளி, 15 மார்ச், 2019

சென்னை அண்ணா சாலையில் .. ஹூப்ளி மக்களின் மனம் கவர்ந்த சிகாரி ரகப் பேருந்துகளை

சிகாரி பஸ்
எம்.குமரேசன் "வ.யஷ்வந்த்".vikatan.com ;நீ ண்ட நாளுக்குப் பிறகு, வட கர்நாடகத்துக்கு விசிட் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை சென்ற நகரம் ஹூப்ளி.  சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 16 மணி நேரம் பயணம். பெங்களூரு சென்று அங்கிருந்து புனே நோக்கி 8 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு பளபளவென விடியும் நேரத்தில் பேருந்து ஹூப்ளி நகரம் வந்தடைந்தது. லைட்டாக குளிர் இருந்தது. காலை 6 மணிக்கே நகரம் பரபரப்பாகக் காணப்பட்டது. ஹூப்ளி சென்ட்ரல் பேருந்துநிலையத்தில் கூண்டு வடிவில் பலவிதமான  கர்நாடக அரசுப் பேருந்துகள் பயமுறுத்திக்கொண்டிருந்தன. பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் ராஜஹம்சாவும் ஐராவத்தும் விரைந்தன. காலையிலேயே ஹோட்டல்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


பேருந்துநிலையம் அருகே இருந்த சிறிய ஹோட்டல் ஒன்றில் காலை உணவு விற்பனை களைக்கட்டியிருந்தது. எட்டிப்பார்த்தால், நம் ஊர் அவல் போன்று தெரிந்தது. பாத்திரம் நிறைய அவல் அவிக்கப்பட்டு, கட்டுச்சோறுபோலக் காணப்பட்டது. அதை, `போகா’ என்கிறார்கள். லெமன்சாதம்போல இருக்கும் மற்றொன்றை `புலாவ்’ என்கிறார்கள். இட்லி, வடையும் இருந்தன. ஆனால், பெரும்பாலான மக்கள் போகா மற்றும் புலாவைத்தான் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். விலை 15 ரூபாய்தான். காலையிலேயே வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு இந்தச் சாப்பாடுதான் வரப்பிரசாதம்போல!
இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பொரிகடலை, உடைத்த தேங்காய், இஞ்சி, வெள்ளைப்பூண்டு போன்றவை தனித்தனியாக வைத்து ஒருவர் தொடர்ந்து சட்னி அரைத்துக்கொண்டே இருந்தார். அண்டாவில் உள்ள  சட்னி குறையக் குறைய, சட்னியை அரைத்து ஊற்றிக்கொண்டே இருந்தார். சாப்பாடு மீது தேங்காய் சட்னி ஊற்றி ஊற்றிச் சாப்பிடுகிறார்கள்… குடிக்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சட்னி ப்ரியர்களாக இருந்தனர் ஹூப்ளிவாசிகள்.
ஹூப்ளி உணவு
வட கர்நாடகத்தையும் ஹூப்ளி நகரத்தையும் பற்றி சற்று அறிந்துகொள்ளலாம். பெல்காம் (பெலகாவி) தார்வாட், கல்புரகி, பாலகோட், கடகா, கொப்பளா, ராய்ச்சூர், பிடார், விஜயபுரா ஆகிய மாவட்டங்கள் அடங்கியதுதான், வட கர்நாடகப் பகுதி. இதில், தார்வாட் மாவட்டத்தில் உள்ள பெரிய நகரம் ஹூப்ளி. கர்நாடகத்தின் பிற பகுதிகளைவிட வட கர்நாடகா பின்தங்கிய பகுதி என்றே சொல்லலாம். பெல்காமைத் தலைநகராகக்கொண்டு தனி மாநிலம் வேண்டும் என்கிற போராட்டம் அவ்வப்போது எழுந்து அடங்கும். உண்மையைச் சொல்லப்போனால், மிகவும் பின்தங்கிய பகுதியாகவே வட கர்நாடகாவை உணர முடிந்தது.
நகரங்களைக் காட்டிலும் கிராமங்கள் மிக மோசம். வறட்சியும் தண்ணீர்ப் பஞ்சமும் கிராமங்களில் தலைவிரித்தாடின. ஹூப்ளியிலிருந்து தார்வாட் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரட்டை நகரங்களான இவை, `ஹூப்ளி – தார்வாட் மாநகராட்சி’ என்று அழைக்கப்படுகிறது. ஹுப்ளி நகரத்தில் மதக்கலவரங்களுக்கும் பஞ்சமில்லை. கடந்த 1994-ம் ஆண்டு இஸ்லாமியர்கள்-இந்துக்களுக்கிடையே நடந்த மோதலின்போது, ஐந்து பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. போதை மருந்து, மதுபானக் கடைகளுக்கும் பஞ்சமில்லை.

மதக்கலவரங்களுக்கு பஞ்சமில்லாத ஹூப்ளி
பொதுவாக முன்பின் அறியாத நகரங்களுக்குச் செல்லும் முன், நண்பர்கள் வழியாக அங்கே உள்ள பத்திரிகையாளர்களைச் சந்திப்பது வழக்கம். அந்த வகையில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் பணிபுரிந்து தற்போது ஓய்வுபெற்ற மதன்மோகனைச் சந்தித்தேன். அவருக்கு வயது 80. ஆனாலும், சமூக வலைதளங்களைப் பற்றித் தீவிரமாக ஆராய்ந்துகொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சம் தமிழும் பேசினார். ஹூப்ளி நகரைப் பற்றிய நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
பேசிக்கொண்டிருக்கும்போது, “அப்பப்பா உங்கள் சென்னை மவுன்ட் ரோட்டுல என்னா டிராஃபிக்… இங்க ஓடுற சிகாரி பஸ்போல அங்கே ஓடவைத்தால் நன்றாக இருக்குமே… சமான்ய மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமே” என்றார்.
“சிகாரியா, அப்படினா என்ன?” என்று திருப்பிக் கேட்டபோது, “ `சிகாரி’னா கன்னடத்தில் மான். அந்த பஸ், மான்போல மின்னல் வேகத்தில் செல்லும். அதனால் அந்தப் பெயர்” என்றார். இதுபோன்ற செய்திக்குத்தானே காத்துக்கிடக்கிறோம். விடுவோமா, மதியத்துக்குமேல் சிகாரி பஸ்ஸில் தார்வாட் வரை செல்வது என முடிவாயிற்று.
பத்திரிகையாளர் மதன் மோகன்
கர்நாடக மாநிலம், இந்து மதத்துக்காகத் தொண்டாற்றிய ஆன்மிகப் பெரியவர்கள் நிறைந்த மண். அதில் ஒருவரான ஸ்வாமி சித்தருத், ஹூப்ளியில் முக்தி அடைந்தார். இவர் முக்தியடைந்த பிறகு, புனிதத்தலமாகக் கருதப்படுகிறது.  சித்தருத் ஸ்வாமி சமாதியில் `மந்திர்’ என்ற பெயரில் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. சாதாரண நாளிலேயே இங்கே கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த மடமும் கோயிலும் அழகிய வேலைப்பாடுடன் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளன. ஹூப்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து இந்த மடத்துக்கு மக்கள் வந்து வழிபாடு நடத்திச் செல்கிறார்கள். கோயிலுக்குச் சென்றுவிட்டு, மதியம் சாப்பிட ஹோட்டலுக்குச் சென்றோம். ஹோட்டல்களில் பெண்களே உணவுத் தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். ஆனால், வட கர்நாடக உணவு நமக்கு செட் ஆகாது. சாம்பார் எது… ரசம் எது எனத் தெரியாமல் விழி பிதுங்கியது. வெஜிட்டேரியன் கதையே இப்படி என்றால், நான்-வெஜ் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஆனாலும், மக்கள் ஹோட்டல் உணவை ருசித்துச் சாப்பிடுகிறார்கள். எல்லோரும் கையில் கரண்டி வைத்தே சாப்பிடுகிறார்கள்.
மதிய உணவு
மதியத்துக்குமேல் பத்திரிகையாளர் மதன்மோகன் குறிப்பிட்ட சிகாரி (bus rapid transit system) பேருந்தில் செல்வதற்கு டிக்கெட் எடுத்து ஹூப்ளியிலிருந்து தார்வாட் வரை பயணித்தோம். தார்வாட் மாவட்டத்தின் தலைநகரம்தான் தவார்வாட். இனிப்புப் பலகாரமான பேடாவுக்கு தார்வாட் பாப்புலர். ஹூப்ளி – தார்வாட் டிக்கெட் விலை, நபருக்கு 22 ரூபாய். இந்தப் பேருந்துக்கு என்றே பெங்களூரு-புனே நெடுஞ்சாலையில் பிரத்யேகமாகச் செல்வதற்கும் வருவதற்கும் இரு லேன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த லேன்களில் மற்ற அரசுப் பேருந்துகளோ, தனியார் பேருந்துகளோ அல்லது கார்கள், டூவீலர்கள் எதுவும் செல்லக் கூடாது. காலை 6 மணிக்கு சிகாரி பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு முடிகிறது.
தார்வாட் ஹூப்ளி போக்குவரத்து
நிமிடத்துக்கு ஒரு பஸ் வந்துகொண்டே இருக்கிறது. மெட்ரே ரயில் ஸ்டேஷன்போல பி.ஆர்.டி.எஸ் நிலையம் என்று இந்தப் பேருந்துநிலையங்கள் அழைக்கப்படுகின்றன. மக்கள், டிக்கெட் எடுத்துவிட்டு நிலையத்தில் காத்திருக்க வேண்டும். பேருந்து உள்ளே வந்ததும் மெட்ரோ ரயில் ரயில்நிலையங்கள்போல கதவு திறக்கிறது. பயணிகள் ஏறி, இறங்கிக்கொள்ளலாம். இப்படி ஹூப்ளி தார்வாட் இடையே 33 பி.ஆர்.டி.எஸ் நிலையங்கள் உள்ளன. கர்நாடக மாநிலப் பேருந்துகளில் செம ரிச்சாக இந்த ரக பஸ்கள் காணப்பட்டன. ஏ.சி வசதி, குஷன் இருக்கைகள் என, பயணம் சொகுசாக இருந்தது.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட சிகாரி பஸ், இப்போது இரட்டை நகரங்களின் முக்கிய அடையாளம். டிக்கெட் விலையும் அதிகமில்லை… 5,10 ரூபாய்க்குக்கூட டிக்கெட் கிடைக்கிறது. இதனால், சாமானிய மக்கள் அநேகர் இந்த ரகப் பேருந்துகளை விரும்பிப் பயன்படுத்துகின்றனர். நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் மக்கள் இதில் பயணிக்கின்றனர் என்று  அங்கே பணி புரியும் மஞ்சுளா என்பவர் கூறினார்.
சென்னை அண்ணாசாலையில் சிகாரி ரகப் பேருந்துகளை இயக்கினால், சாமானிய மக்களின் நேர விரயமும் டென்ஷனும் நிச்சயம் குறையும். மவுன்ட் ரோடு மட்டுமல்ல, சென்னையில் பல முக்கிய சாலைகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தினாலே சாமனிய மக்கள் அலுவலகங்களுக்கு உரிய நேரத்தில் சென்றுவிட முடியும். தென் கர்நாடகா மக்கள்போல நாங்கள் முன்னேறவில்லை என வட கர்நாடக மக்கள் தொடர்ந்து புகார் பட்டியல் வாசிப்பதால், சிகாரி போக்குவரத்துத் திட்டத்தை கர்நாடக அரசு ஹூப்ளி-தார்வாட் இடையே செயல்படுத்தியது என்பது கொசுறுத் தகவல்.
vikatan.com

கருத்துகள் இல்லை: