சனி, 16 மார்ச், 2019

தினமலர் : காங்கிரசில் குமுறல் சத்தம்? எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை?

தினமலர் : தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட, ஒன்பது ; தொகுதிகளில்,  வெற்றி வாய்ப்புள்ள, மயிலாடுதுறை, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, அரக்கோணம் தொகுதிகள் கிடைக்காமல் போனதால், அக்கட்சியில் போட்டியிட விரும்பியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட, 10 தொகுதிகள், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த பட்டியலில், காங்கிரசின் பாரம்பரிய தொகுதிகளான, திருநெல்வேலி, திண்டுக்கல், மயிலாடுதுறை, தென்காசி போன்றவை இடம் பெறவில்லை.
காங்கிரஸ் சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்ட, ஈரோடு, சேலம், காஞ்சிபுரம், அரக்கோணம், தென் சென்னை போன்ற தொகுதிகளையும், தி.மு.க., கொடுக்கவில்லை. ஈரோடு தொகுதியில், முன்னாள் தலைவர் இளங்கோவன் போட்டியிட விரும்பினார். அத்தொகுதி, ம.தி.மு.க.,வுக்கு போய் விட்டது. அதேபோல், சேலம் தொகுதியில் களமிறங்க, முன்னாள் தலைவர் தங்கபாலு, செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் விரும்பினர்; அத்தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. 'ஈரோடு தரவில்லை என்றால், திண்டுக்கல் தொகுதியை ஒதுக்குங்கள்' என, இளங்கோவன் வலியுறுத்தினார். அதுவும் கிடைக்கவில்லை.


அரக்கோணம் தொகுதியை, பொருளாளர் நாசே ராமச்சந்திரன் அல்லது அவரது மகன் நாசே ராஜேஷ் போட்டியிடுவதற்காக, காங்கிரஸ் கேட்டது. அத்தொகுதியில், முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக, தேர்தல் பணிகளை, தி.மு.க.,வினர் துவக்கி விட்டனர். எனவே, அரக்கோணத்திற்கு பதிலாக, ஆரணி தொகுதியை ஒதுக்கியுள்ளனர். தற்போது, ஆரணி தொகுதிக்கு, காங்கிரசில், நாசே ராமச்சந்திரன், செயல் தலைவர் விஷ்ணுபிரசாத், முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் முருகானந்தம், அருள் அன்பரசு, மனோ, சுமதி அன்பரசு போன்றவர்கள் மோதுகின்றனர். மயிலாடுதுறை தொகுதியை, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், முன்னாள், எம்.எல்.ஏ., ராஜ்குமார் எதிர்பார்த்தனர். ஆனால், அத்தொகுதியை, தி.மு.க., விட்டுக் கொடுக்கவில்லை.

காஞ்சிபுரம், தென்காசி, விழுப்புரம் ஆகிய, மூன்று தனி தொகுதிகள் கேட்டு, காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தும், பிரயோஜனமில்லை. ஆனால், காங்கிரஸ் போட்டியிட விரும்பாத, திருவள்ளூர் தொகுதியை, அக்கட்சியின் தலையில் கட்டியுள்ளனர். திருவள்ளூர் தனி தொகுதிக்கு, செயல் தலைவர் ஜெயகுமார், முன்னாள், எம்.பி.,க்கள் விஸ்வநாதன், ராணி, முன்னாள், எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, விக்டரி ஜெயகுமார் ஆகியோர் மல்லுக்கட்டுகின்றனர். தென் சென்னை தொகுதி கிடைக்கும் என, கராத்தே தியாகராஜன், சி.ஆர்.கேசவன், நடிகை குஷ்பு போன்றவர்கள் எதிர்பார்த்தனர். அதையும், தி.மு.க., தர மறுத்து விட்டது.

காங்கிரஸ் விரும்பி கேட்ட தொகுதிகளில், கரூர், திருச்சி, கிருஷ்ண கிரி ஆகிய மூன்றை மட்டுமே, தி.மு.க., தந்துள்ளது. இந்த மூன்று தொகுதிகளுமே, தி.மு.க., போட்டியிட விரும்பிய தொகுதிகள் தான். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் வற்புறுத்தல் காரணமாக, இந்த மூன்று தொகுதிகளை, தி.மு.க., விட்டுக் கொடுத்துள்ளது. அதற்கு பதிலாக, காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள, தென்காசி, திருநெல்வேலி, மயிலாடுதுறை, திண்டுக்கல், அரக்கோணம் போன்ற தொகுதிகளை, தி.மு.க., வைத்துக் கொண்டது. இதனால், காங்கிரஸ் கட்சியில், போட்டியிட விரும்பிய, மூத்த தலைவர்கள் சிலர், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மோதப்போவது யார்?
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு, வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி என, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. கள்ளக்குறிச்சி தொகுதியில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மற்ற தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை தேர்வு செய்வதில், கட்சி தலைமை கவனம் செலுத்தி வருகிறது. விருதுநகர், வட சென்னை தொகுதிகளுக்கு, வேட்பாளர்கள் கிடைக்காமல், மாவட்ட செயலர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், தே.மு.தி.க., எதிர்க்கப் போகும் வேட்பாளர்கள், எந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பது, தற்போது உறுதியாகியுள்ளது. வடசென்னை மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதியில், தி.மு.க.,வை எதிர்த்து, தே.மு.தி.க., பலப்பரீட்சை நடத்தவுள்ளது. திருச்சி மற்றும் விருதுநகர் தொகுதிகளில், காங்கிரசை எதிர்த்து போட்டியிட உள்ளது

கருத்துகள் இல்லை: