வெள்ளி, 15 மார்ச், 2019

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று அறிவிப்பு!

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று அறிவிப்பு!
மின்னம்பலம் :திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பஞ்சாயத்து ஒருவழியாகப் பேசி முடிக்கப்பட்டுவிட்டது. ராகுல் காந்தியின் சென்னை விசிட்டுக்குள் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் எவை என்பதை முடிவு செய்துவிடலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம், திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் குமரிக்கும் சென்னைக்குமாகப் பயணித்துக்கொண்டிருந்ததால் ராகுலின் வருகைக்குள் தமிழக காங்கிரஸால் 10 தொகுதிகள் பற்றி திமுகவோடு உட்கார்ந்து பேசி இறுதி செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 14) காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழு அதன் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அறிவாலயத்தில் திமுக குழுவினரைச் சந்தித்தது. ஏற்கெனவே இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்று நடந்த மூன்றாவதுகட்டப் பேச்சில் காங்கிரஸுக்கான 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அப்போது திருச்சி, கரூர், நெல்லை, திண்டுக்கல், ஆரணி போன்ற தொகுதிகள் பற்றி இரு கட்சிகளும் உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.

இதுகுறித்து அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தொகுதிப் பங்கீடு இனிமையான முறையில் நிறைவேறியிருக்கிறது. புதுச்சேரியைச் சேர்த்து எங்களுடைய 10 தொகுதிகளும் என்ன என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம். எங்களுக்கு வாய்ப்புள்ள சாதகமான தொகுதிகளைப் பெற்றிருக்கிறோம். அந்தத் தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார்” என்றார்.
கூட்டணியிலேயே காங்கிரஸுடன் மட்டுமே தொகுதிப் பிரச்சினை நீடித்து வந்த நிலையில் இன்று அதுவும் நிறைவு பெற்றுவிட்டதால் இன்று திமுக அணியின் தொகுதிப் பட்டியல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
திமுக 20, காங்கிரஸ் 10, சிபிஎம் 2, சிபிஐ 2, விடுதலைச் சிறுத்தைகள் 2, மதிமுக 1, முஸ்லிம் லீக் 1, கொமதேக 1, ஐஜேகே 1 என்ற அளவில் திமுகவில் தொகுதிப் பங்கீடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து இன்று எந்தக் கட்சிக்கு என்னென்ன தொகுதிகள் என்ற பட்டியலை திமுக தலைவர் வெளியிட்ட பின், அந்தந்த கட்சிகள் வேட்பாளர் தேர்வில் கவனத்தைச் செலுத்தும்.

கருத்துகள் இல்லை: