வெள்ளி, 4 ஜனவரி, 2019

பேரவையில் கண்ணீர் விட்டு அழுத துரைமுருகன் விடியோ


கலைஞரை நினைவுகூர்ந்து கண்ணீர்விட்ட துரைமுருகன்மின்னம்பலம : சட்டமன்றத்தில் நேற்று (ஜனவரி 3) கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கலைஞர் குறித்து துரைமுருகன் பேசியது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
சட்டமன்றத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேற்று தீர்மானம் இயற்றப்பட்டது. அதில் ஏ.கே.போஸுக்கு அடுத்தபடியாக முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு நாளும் அவை ஆரம்பித்ததும் திருக்குறள் சொல்லப்படுவது வழக்கம். நேற்று கலைஞரைக் குறிப்பிடும் வகையில், ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்ற குறளை படித்து அவையின் செயல்பாடுகளை ஆரம்பித்தார் சபாநாயகர். இதைத் தொடர்ந்து திமுகவினரே எதிர்பாராத வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலைஞரைப் புகழ்ந்து தள்ளினர் .

இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய துணைமுதல்வர் பன்னீர்செல்வம், பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம் என கலைஞர் முரசொலியில் எழுதியதை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார். இறுதியாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கலைஞரின் சாதனைகள் எந்நாளும் நிலைத்திருக்கும் என்று புகழ்ந்தார். இதில் ஹைலைட்டாக அமைந்தது தனியரசுவின் பேச்சு. கலைஞரிடம் நெருங்கிப் பழகாத நிலையிலும், கலைஞர் குறித்து அவர் பேசியதை அங்கிருந்த ஊழியர்கள் பலர் தங்களது பணியையும் மறந்து கேட்டனர். கலைஞர் குறித்து பெயரளவுக்கே தீர்மானம் நிறைவேற்றுவார்கள் என்று திமுக உறுப்பினர்கள் எதிர்பார்த்து வந்த வேளையில் அவர்களை இவை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இதையெல்லாம்விட, கலைஞர் குறித்து உரையாற்றிய துரைமுருகனின் பேச்சு, அனைத்து உறுப்பினர்களையும் கண்கலங்கச் செய்தது.
சட்டமன்றத்தில் உரையாற்றிய துரைமுருகன், “95 ஆண்டுக்காலம் வாழ்ந்து, வாழ்ந்த 95 ஆண்டுக் காலத்தில், 80 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்காகவே, உழைத்துவிட்டு இன்று அவரை ஆளாக்கிய ஆசான் அறிஞர் அண்ணா அவர்களின் பக்கத்திலேயே, ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிற, எங்கள் உயிரினும் மேலான கலைஞர் மறைவுக்கும் இந்த மன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிற இரங்கல் தீர்மானத்தின் மீது நான் சார்ந்திருக்கிற திமுக சார்பில், எங்கள் தலைவர் சார்பில், கனத்த இதயத்தோடும், பெரும் துயரத்தோடும், கண்ணீரை அடக்கிக்கொண்டு, நான் பேச முற்படுகிறேன். கலைஞர் ஒரு தனி மனிதர் அல்லர்; முன்னவர் குறிப்பிட்டதைப்போல், அவர் பன்முகத் தோற்றம் கொண்டவர்” என்று புகழ்ந்தார்.

“ஆனாலும் எல்லாவற்றையும்விட இந்த மாமன்றத்தைப் பொறுத்தவரை கலைஞர் எல்லாமும் ஆகி இருந்தவர். எங்கள் தலைவர் மொத்தம் வாழ்ந்த நாட்கள் 34,258 நாட்கள், அதாவது 95 ஆண்டுக்காலம். அவர் சட்டமன்றத்தில் பணியாற்றிய நாட்கள் 20, 411 நாட்கள், அதாவது 56 ஆண்டுக்காலம். 95 ஆண்டுக்காலம் வாழ்ந்தவர், 56 ஆண்டுக்காலம் இந்த அவையிலேயே பணியாற்றியிருக்கிறார். அப்படியென்றால் இந்த அவையிலே எப்படி ஒன்றிப்போயிருக்கிறார். முன்னவர் தெரிவித்ததைப்போல், 13 தேர்தல்களில் நின்றவர், வென்றவர். எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தவர். எதிர்க்கட்சி கொறடாவாக இருந்தவர். எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். அமைச்சராக இருந்தவர். முதல்வராக இருந்தவர்” என்று குறிப்பிட்ட துரைமுருகன்,
“இப்படி எல்லாமும் ஆகி, இந்த அவையிலே 56 ஆண்டுக்காலம் பணியாற்றியவர். அதுவும் முதலமைச்சராகப் பணியாற்றிய நாட்கள் 6,863 நாட்கள், அதாவது 9 ஆண்டுகள். 95 ஆண்டுகளில் கட்சியின் தலைவராக இருந்தது 17,908 நாட்கள், அதாவது 49 ஆண்டுகள். ஆக அவரது வாழ்க்கை முழுவதும், இப்படி உங்களோடு ஒன்றியிருந்தவர் கலைஞர். எனவே, இந்த அவையில் நீண்டகாலம் இருந்து பணியாற்றி இருப்பவர் கலைஞர். ஆனால், எவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல, எத்தனை பதவிகளை அனுபவித்தார் என்பதல்ல முக்கியம். வாழ்ந்த காலத்தில், என்ன சாதித்தார் என்பது தான் முக்கியம்” என்றும் பேசினார். தனது பேச்சியில் கலைஞரின் சாதனைகளையும் பட்டியலிட்டார்.

தேம்பி அழுத துரைமுருகன்
இறுதியாக நெகிழ்வின் உச்சத்துக்கே சென்ற துரைமுருகன், “என்னைத் தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து, 40 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக அமரவைத்து, அமைச்சராக்கி, தன் பிள்ளைகளைவிட முக்கியமான சலுகைகள் கொடுத்து துரை, துரை என்று என் மீது அன்பு செலுத்தியவர் கலைஞர். ஒருவனுக்கு அப்பா, அம்மா ஒருமுறைதான் உயிர்கொடுப்பார்கள். ஆனால், என் தலைவர் எனக்கு இரண்டாவது முறையாக உயிர் கொடுத்தார். 2007ஆம் ஆண்டு எனக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மறுநாள் காலை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அன்று இரவு 10 மணிக்கு என்னை தொ டர்புகொண்ட கலைஞர், ‘என்ன துரை பயமாக இருக்கிறதா? நீ கோழைடா’ என்று கூறி, ‘நான் இரவு உன்னுடன் வந்து தங்குகிறேன்’ என்று கூறி தங்கியிருந்து, மறுநாள் ஆபரேஷன் தியேட்டருக்கு அனுப்பி வைத்துவிட்டுத்தான் சென்றார். நான் அன்று இறந்திருந்தால் எனது உடல் மீது அவர் கண்ணீர் சிந்தி இருப்பார். ஆனால் எனது துர்ப்பாக்கியம் என் தலைவர் உடல்மீது நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டு விட்டது” என்று கூறி தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். அவரை அருகிலிருந்து ஸ்டாலினும், திமுக கொறடா சக்கரபாணியும் தேற்றினர். துரைமுருகனின் பேச்சு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அவையிலிருந்து அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
நடை தளர்ந்த ஸ்டாலின்
துரைமுருகனைவிட உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தது மு.க.ஸ்டாலின்தானாம். அவை முடிந்து கிளம்பும் நிலையில், நடந்துவர முடியாத அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டவராக இருந்துள்ளார் ஸ்டாலின். அவரை சேகர்பாபுதான் அழைத்துச் சென்றுள்ளார். இதன் பிறகுதான் முதல்வர் அறைக்குச் சென்று ஸ்டாலின் உள்ளிட்டோர் நன்றி கூறியுள்ளனர்.
மேலும், ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலைஞரின் மறைவையொட்டி, இரங்கல் தீர்மானம் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், அவர் பெருமையைப் போற்றிப் பேசிய முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ முகமது அபுபக்கர் மற்றும் தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோருக்கு திமுக தலைவர் என்ற முறையிலும் கலைஞரின் மகன் என்ற தனிப்பட்ட முறையிலும் தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நன்றி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: