வியாழன், 3 ஜனவரி, 2019

நீலகிரி: பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நீலகிரி: பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!மின்னம்பலம் : நீலகிரியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மக்களை வாட்டிவந்த குளிர் 5 டிகிரி, 3 டிகிரி என்று குறைந்து, தற்போது 0 டிகிரி என்ற நிலைக்கு வந்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை, கேரட் உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி, குந்தா, அவலாஞ்சி, தலகுந்தா, தாவரவியல் பூங்கா பகுதிகளில் இரண்டாவது நாளாகக் கடும் பனிபொழிவு நீடிக்கிறது.
கடுங்குளிரால் பெட்ரோல், டீசல் உறைந்த நிலையில் இருப்பதால், காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர் நீலகிரி மக்கள். ஸ்வெட்டர், தொப்பி இல்லாமல் வெளியே வர முடியாத நிலை உள்ளது. அங்குள்ள பூங்காக்களில் பனி பொழிந்துள்ளதால், எங்கு பார்த்தாலும் பசுமையின்றி வெள்ளையாகக் காணப்படுகிறது. இந்த பனியினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்தது. “நீலகிரியில் நிலவி வரும் உறை பனி தொடரும். அங்கு குளிர் அதிகமாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடும் வகையில் எங்கேயும் மழை பெய்யவில்லை. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 29 செல்சியஸ் வரையும், குறைந்தபட்சமாக 20 செல்சியஸ் வரையும் வெப்பம் பதிவாகும். மழைக்கு வாய்ப்பே இல்லை” என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
கடும் பனி மூட்டம் காரணமாக பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை வந்து செல்லும் 18 விமானங்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேர தாமதத்தினால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: