திங்கள், 31 டிசம்பர், 2018

முத்தலாக் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல்: முக்கிய 10 தகவல்கள்!

முத்தலாக் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல்: முக்கிய 10 தகவல்கள்!ndtv- : உச்ச நீதிமன்றம் முத்தலாக் தொடர்பான தீர்ப்பில், ‘இந்த நடைமுறை முஸ்லிம் மதத்துக்குச் சம்பந்தப்பட்டது என்பதை ஏற்க முடியாது. சட்டத்துக்கு புறம்பானது முத்தலாக்’ என்று கூறியது.
New Delhi: கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்களவையான லோக்சபாவில் முத்தலாக் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாநிலங்களவையான ராஜ்ய சபாவில் முத்தலாக் நடைமுறைக்குத் தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆனது. இந்நிலையில், எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் முத்தலாக் மசோதா நிறைவேறவில்லை. வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இருந்த காரணத்தால், மசோதாவுக்கு ஒப்புதல் வாங்குவது சுலபமாக இருந்தது. ஆனால், மாநிலங்களவையில் அரசுக்குப் பெரும்பான்மை இல்லை. அதனால், அனுமதி கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், ‘தற்போது இருக்கும் முத்தலாக் மசோதாவை நாங்கள் ஏற்க மாட்டோம். அதில் கண்டிப்பாக திருத்தம் செய்யப்பட வேண்டும்' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தங்களது எம்.பி-க்கள் அனைவரையும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென்றும் காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. பிற எதிர்கட்சிகளும், ‘முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வகையில் முத்தலாக் தடை மசோதா இருக்கிறது. அதை நாங்கள் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டோம்' என்றுள்ளது.
முக்கிய 10 தகவல்கள்:
1. முத்தலாக் கொடுத்து ஒரு முஸ்லிம் ஆண், விவகாரத்து செய்தால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மசோதாவில் விதிமுறை இருக்கிறது. இந்த விதிமுறைக்கு பல எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதேபோல விவகாரத்து செய்த கணவர் சிறைக்குச் சென்ற பின்னர், மனைவிக்கு யார் ஜீவனாம்சம் கொடுப்பார் என்பதிலும் தெளிவில்லை.
2. முஸ்லிம் பெண்கள் (திருமணப் பாதுகாப்புச் சட்டம்) 2017-க்கு, எதிர்கட்சிகள் ராஜ்ய சபாவில் முன்னர் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தும் அரசு புதிய மசோதாவிலும் எந்த வித திருத்தங்களும் செய்யவில்லை.
3. புதிய மசோதா, முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று கூறுகிறது. மேலும், பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு ஜீவனாம்சமும் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கிறது.
4. உச்ச நீதிமன்றத்தில் முத்தலாக் தொடர்பாக நடந்த வழக்கில், ‘முத்தலாக் நடைமுறை சட்ட சாசனத்துக்கு எதிரானது' என்று தீர்ப்பளித்தது. எதிர்கட்சிகளிடையே மத்திய அரசு, இந்தத் தகவலை சொல்லி சமாதானம் செய்ய முயன்று வருகிறது.
5. 'முத்தலாக் தண்டனைக்கு உட்பட்ட குற்றம் என்றிருக்கும் விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும்' என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. லோக்சபாவில் மசோதாவுக்கு நடந்த வாக்கெடுப்பின் போது காங்கிரஸும் அதிமுக-வும் வெளிநடப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
6. சட்டத் துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தான் லோக்சபாவில் மசோதாவை முன் மொழிந்தார். அவர், ‘இந்த மசோதா எந்த சமூகத்தையும் குறிவைக்கும் நோக்கில் கொண்டு வரப்படவில்லை. ஆயிரக்கணக்கான பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் இது' என்று பேசினார்.
7. அவர் மேலும், ‘ராஜ்ய சபாவிலும் முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு கிடைக்கும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் தரப்போ, '10 எதிர்கட்சிகள் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்துள்ளன' என்றுள்ளது.
8. பாஜக தலைவர் அமித்ஷா, ‘லோக்சபாவில் முத்தலாக் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது வரலாற்றுச் சாதனை. இதன் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களின் மாண்பு காக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அவர்களுக்கு ஆண்டாண்டு காலமாக இழைத்து வந்த கொடுமைகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
9. கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு, முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வந்தது. தற்போது கொண்டு வரப்படும் சட்டம், இதற்கு மாற்றாக இருக்கும் எனப்படுகிறது.

COMMENT
10. உச்ச நீதிமன்றம் முத்தலாக் தொடர்பான தீர்ப்பில், ‘இந்த நடைமுறை முஸ்லிம் மதத்துக்குச் சம்பந்தப்பட்டது என்பதை ஏற்க முடியாது. சட்டத்துக்கு புறம்பானது முத்தலாக்' என்று கூறியது.

கருத்துகள் இல்லை: