திங்கள், 31 டிசம்பர், 2018

அதிகாரியை மிரட்டி அமைச்சர் சண்முகத்தின் தம்பி விடியோ ஆதாரம் சிக்கியது


மின்னம்பலம் : உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தம்பி என்று கூறி சிலர் மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பரிக்கல் கிராமத்தில் அண்மையில் தனியார் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அப்பகுதியில் செயல்பட்டு வரும் மற்றொரு தனியார் நிறுவனத்திடமிருந்து பிரிந்து வந்தவர்தான், இதனை துவக்கியுள்ளதாக தெரிகிறது. இதற்காக அனுமதி கேட்டு அரசிடம் அந்நிறுவனம் விண்ணப்பித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அந்த தொழிற்சாலை சுகாதாரமற்ற முறையில் இருந்ததால், இதுதொடர்பாக அந்நிறுவனத்திற்கு கதிரவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கதிரவன் செல்போனுக்குத் தொடர்பு கொண்ட ஒருவர், தன்னை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தம்பி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, டிரான்ஸ்பர் செய்துவிடுவேன், ஜெயிலில் போட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார். அவரைத் தொடர்ந்து மற்றொருவரும் கதிரவனை மிரட்டுகிறார். இந்த ஆடியோ தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 நிமிடங்கள் வரை நீளும் அந்த ஆடியோவில் பேசியதை உரையாடல் வடிவில் காண்போம்.
மர்ம நபர்: சார் வணக்கம் சி.வி.சண்முகம் வீட்டுல இருந்து அவரோட பிரதர் வைத்தி பேசறேன். உளுந்தூர் பேட்டயில அந்த பையன ஏன் மிரட்டினீங்களாம். நீங்க எந்த டிஸ்னீஷன்ல வொர்க் பண்றீங்க
கதிரவன்: நான் குடும்ப நலத் துறையில புட் சேப்டி ஆபிசரா வொர்க் பண்றேன் சார்.
நபர்: எதுவா இருந்தாலும் நோட்டீஸ் குடுங்க
கதிரவன்: நோட்டீஸ்தான் கொடுத்திருக்கு
நபர்: நோட்டீஸ் மட்டும் குடுங்க. அங்க போய் மிரட்டுறது, கடைய மூடிடுவேன்னு சொல்றதுக்கெல்லாம் நீங்க யாரு?
கதிரவன்: சார் நீங்க தவறா பேசறீங்க, நா இன்ஸ்பெக்‌ஷன் பண்ணி முடிச்சிட்டேன். அங்க இல்லீகலா பண்ணிட்டு இருக்காங்க.
நபர்: என்ன இல்லீகலா பண்றாங்க, காச வாங்கிட்டு ஊழல் பண்ற, என்னயா இல்லீகல்லு, ஒன்ன தொலச்சுடுவேன் ஜாக்கிறத, வேற யார்கிட்டயாவது பேசற மாதிரி பேசாத, இந்த டிஸ்டிரிக்லயே இருக்க மாட்ட, நீலகிரில தூக்கிப் போட்டுடுவேன் ஜாக்கிறத. யார்கிட்ட பேசற நீ?
கதிரவன் : சார் நான் சொல்றத கேளுங்க சார், நீங்க எங்க டிஸ்டிரிக் ஆபிஸர் கிட்ட பேசிக்கோங்க சார்!
நபர்: பொறுக்கி நாயே....அங்க போய் பொறுக்கித் தனம் பண்ணிகிட்டு இருக்க.. லஞ்சம் வாங்குற நாய் நீ, பிச்சை கேட்டுட்டுப் போடா, அவன் போட்டுட்டு போவான்.
கதிரவன் : சார் தவறா பேசறீங்க, நான் அந்த மாதிரி ஆள் கிடையாது
நபர்: உனக்கென்னடா அங்க வேல, எங்க இருக்க நீ? உனக்குத்தான் பவர் இருக்கே விழுப்புரம் ஆவின்குள்ள போய் பாரேன்.
கதிரவன்: நீங்க தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க சார், நான் லஞ்சம் வாங்குற ஆள் கிடையாது.
நபர்: மத்தவங்கிட்ட பேசுற மாதிரிலாம் எங்கிட்ட பேசாத, நோட்டீஸ் கொடுத்தியா பதில வாங்கிக்க, பொறுமையா இருக்கேன். இல்லனா வேற மாதிரி டீல் பண்ணிடுவேன்.
கதிரவன்: சார் இந்த மாதிரி மிரட்டல்லாம் விடாதீங்க
நபர்: டேய், இன்னைக்கு அங்க நீ போய் மூடிப் பார்றா நீ? நீயா நானானு பாத்துக்கறேன்.
கதிரவன்: சார் நீங்க டிஸ்டிரிக் ஆபிசர்கிட்ட பேசிக்கோங்க சார்...
நபர்: டேய் நா டிஸ்டிரிக் ஆபிசர்கிட்ட பேசறேன், ஹெல்த் செகரட்டரிகிட்ட பேசறேன். இல்ல டெல்லியில கூட பேசறேன். புட் சேப்டி டெபுடி டைரக்டர் கிட்டயே பேசறன் நானு. உன்ன என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும். இப்பயே லஞ்சம் கேட்டனு சொல்லி புக் பண்ணி உன்ன என்ன பண்றேன் பாரு...
கதிரவன்: சார் தவறு நா பண்ணாத்தான் நீங்க என்ன கேக்க முடியும்.
நபர்: லைசென்ஸ் அப்ளை பண்ண சொல்லு, அதுதான ஒன்னோட வேலை. மூட சொல்றதுக்கு நீ யார், புரோடியூஸர்ஸ் கிட்ட வாங்குற பால மூடச் சொல்றதுக்கு உனக்கு யார் அதிகாரம் குடுத்தது. சாஸ்தா டெய்ரிகிட்ட போய் பணத்த வாங்கிட்டு இத மாதிரி பண்ணாத, அத ஏன் மூட மாட்டேங்குற
கதிரவன்: சார், நான் இதுவரைக்கும் சாஸ்தா டெய்ரி பக்கமே போனதில்ல.
இதனைத் தொடர்ந்து மற்றொருவரின் கைக்கு செல் போன் மாறுகிறது, அவரு வேற ஆளு நான் அவரோட தம்பிதான் பேசறேன் என்று ஆரம்பிக்கிறார்
இரண்டாவது நபர்: என்ன பிராப்ளம் சார் சொல்லுங்க
கதிரவன்: எந்த பிராப்ளம் இல்ல சார், நா இன்ஸ்பெக்‌ஷன் பண்ணிருக்கேன், இன்ஸ்பெக்‌ஷன் ரிப்போர்ட் கொடுத்திருக்கேன்.
இரண்டாவது நபர்: சரி சார், பதில் உங்களுக்கு வரும். டெல்லி புட் சேப்டியில டைரக்டரா இருந்த அலேக்சாண்டர் இப்ப ஆவின்ல டிஆரா இருக்கார். அவர் நம்பர் தரேன் நீங்க அவர்கிட்ட பேசறேன்.
கதிரவன்: நீங்க யார் சார்?
இரண்டாவது நபர்: அதிமுகவுல தென்சென்னை மாவட்ட அதிமுக பொருளாளர் ஆவின் மகேஷ். அமைச்சர் சி.வி.சண்முகம் எங்க பெரியப்பா பையன்தான் ஓ.கேங்களா. நீங்க எதுவா இருந்தாலும் கேட்டுக்கோங்க.
கதிரவன்: நான் அங்க போய் பாக்கும்போது அந்த இடம் சுகாதாரம் இல்லாம இருந்தது, அத நான் ரிப்போர்ட்டா கொடுத்தேன். லைசென்ஸ் கொடுக்கர வரைக்கும் நிறுத்தி வையுங்கனு எங்க எங்க டிஸ்டிரிக் ஆபிசர் சொன்னாங்க. இவ்ளோதான் நடந்தது.
இரண்டாவது நபர்: உங்க டிஸ்டிரிக் ஆபிசருக்கு அவார்னஸ் கொடுங்க...
கதிரவன்: பணமே வாங்காத ஒருத்தகிட்ட போய் இதுமாதிரி பேசுனா எப்டி சார் இருக்கும்.
இரண்டாவது நபர்: லஞ்சம் வாங்காத ஆபிசரே கெடையாதுங்க . வந்தீங்களா ரெண்டாயிரம் பணம் வாங்கிட்டு போங்க.
கதிரவன்: சார் நான் வாங்க மாட்டேன் சார். என்னோட பதவிக்குனு ஒரு மரியாத இருக்குல்ல சார்.
இரண்டாவது நபர்: நீங்க லெட்டர் கொடுங்க, அதவிட்டுட்டு மூடிடுவேன்னு சொல்றதுக்கெல்லாம் உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது.
கதிரவன்: என்ன திட்றதுக்கு மட்டும் ரைட்ஸ் உண்டா சார்.
இரண்டாவது நபர்: நீங்க அதிகாரின்னா, நடக்கறது எங்க ஆட்சி. எங்க ஆட்சியில எங்ககிட்டையே வந்து குளோஸ் பண்ணிடுவேன்னு சொல்வீங்களா நீங்க. நீங்க க்ளோஸ் பண்ணிட்டு ஒரே ஒருநாள் அந்த சீட்ல உக்காந்திடுங்க.நீங்க சொல்றத நாங்க செய்றோம். சேலஞ்ஸ் வேணும்னாலும் செய்றேன். உள்ள தூக்கி வைச்சிடுவேன்.
இவ்வாறு முடிகிறது அந்த ஆடியோ. அமைச்சரின் தம்பி என்று கூறி உணவு பாதுகாப்பு அதிகாரியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: